ரெசார்ட் வெப் சீரிஸ் பிரச்சனை.. நடந்தது இதுதான்! நடிகை அனுகிரஹா பற்றி எருமை சாணி விஜய் ஆதங்கம்
சென்னை: 'ரிசார்ட்' வெப் சீரிஸ் சர்ச்சை நாளுக்கு நாள் பெரிதாகி வரும் நிலையில், நடிகை அனுகிரஹா நம்பியார் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு தற்போது நடிகரும் யூடியூப் பிரபலமான எருமை சாணி விஜய் குமார் வீடியோ மூலம் விரிவான விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

விஜய் குமார் விளக்கம்
தன்னுடைய வீடியோவில், "இது யாரையும் குறை சொல்லும் வீடியோ இல்ல, என் தரப்பு என்ன என்பதை சொல்லும் முயற்சி" என்று தொடங்கிய விஜய் குமார், சம்பள விவகாரம் குறித்து தெளிவாக பதிலளித்தார்.
அவர் கூறியதாவது, அனுகிரஹா இதுவரை நடித்த எபிசோடுகளுக்கான சம்பளம் முழுமையாக வழங்கப்பட்டுவிட்டதாகவும், "சம்பளம் தரவில்லை" என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுவாக தயாரிப்பு நிறுவனங்கள் அட்வான்ஸ் வழங்குவது அரிது என்றாலும், அனுகிரஹா கேட்டதால் 25,000 ரூபாய் முன்பணம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அதிலிருந்து இன்னும் 10,000 ரூபாய் தொகை திருப்பி வழங்கப்பட வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒப்பந்தம் குறித்து விளக்கம்
ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் விஜய் குமார் பதிலளித்துள்ளார். அதாவது, இரண்டு மாதங்கள் நடித்த பிறகே அனுகிரஹாவிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கப்பட்டதாகவும், அந்த ஒப்பந்தத்தை முழுமையாக படித்து புரிந்துகொள்வது நடிகையின் பொறுப்பு என்றும் விஜயகுமார் கூறினார்.
"ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்பதை பார்க்காமல் கையெழுத்து போட்டுவிட்டு, பின்னர் பிரச்சனை என்று கூறுவது சரியல்ல" என அவர் சொல்லியிருக்கிறார்.
என்னை காரணம் சொல்வது நியாயமா?
இந்த வெப் சீரிஸில் 20-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருவதாகவும், "நான் தான் சீரியஸின் கதையை எல்லோருக்கும் சொல்லி இருக்கிறேன் ஆனால் யாருக்கு எவ்வளவு சம்பளம் கேட்க வேண்டும் போன்ற விஷயங்களை நான் சொல்லிக்கொடுக்க முடியாது. எல்லாவற்றுக்கும் என்னையே காரணம் காட்டுவது எந்த வகையில் நியாயம்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "ஒரு வீடியோவில் சின்ன பொண்ணு அழுதுகொண்டு பேசினாலே அது முழு உண்மை ஆகிவிடாது. என்னிடம் விளக்கம் கேட்காமல் ஒருதலைப்பட்சமாக விமர்சிப்பது வருத்தமாக இருக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதள கருத்துகள்
இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. ஒரு தரப்பு அனுகிரஹாவின் மனவேதனைக்கு ஆதரவு தெரிவிக்க, மற்றொரு தரப்பு விஜய் குமார் கூறும் விளக்கத்தையும் கவனிக்க வேண்டும் என கருத்து தெரிவிக்கிறது.
நடிகை அனுகிரஹா ஆரம்பத்தில் வெளியிட்ட வீடியோவில், 'ரிசார்ட்' வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமான பிறகு தான் எதிர்பார்த்தது போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை என நடிகை தெரிவித்துள்ளார். ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால், வேறு படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
பல மாதங்கள் கடந்தும் படப்பிடிப்புக்கு அழைக்கப்படாததால் வருமானமும் நின்றுவிட்டது. இதனால் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையான பாதிப்பை சந்தித்ததாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்தபோதும், தனது நிலையை பற்றி தெரிவித்தபோது எரும சாணி விஜய் மற்றும் அவருடைய மனைவி மரியாதை இல்லாமல் ஆபாசமாக பேசியதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். இதன் காரணமாக மன அழுத்தம் அதிகரித்து, உடல் நலத்திலும் பாதிப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications