ரூ.100 ஐ தேங்காய் சீனிவாசன் தொடலையே.. "என் தெய்வத்தை தப்பா நினைச்சிட்டேனே? தங்கமான எம்ஜிஆர்: பிரபலம்
சென்னை: எம்ஜிஆர் எப்போதுமே யாரை திட்டினாலும் அதில் ஒரு நியாயம் இருக்கவே செய்யும். எல்லா விஷயத்தையும் ஆராய்ந்து பார்த்துவிட்டுதான், அறிவுரைகளை சொல்வார்.. ஆனாலும் அவரது பேச்சை தேங்காய் சீனிவாசன் கேட்கவில்லை. ஆனாலும், கடைசிவரை எம்ஜிஆரின் தீவிர தொண்டனாகவே இருந்தார் தேங்காய் சீனிவாசன் என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார். அத்துடன் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் பற்றியும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
AramNaadu சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த சபிதா ஜோசப், "கல் மனம்" என்ற நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்தார் தேங்காய் சீனிவாசன். அந்த நாடகத்துக்கு டணால் தங்கவேலு தலைமை தாங்கி பேசும்போது, தேங்காய் வியாபாரியாக நடித்த சீனிவாசன் சிறப்பாக நடித்திருக்கிறார்.. இனிமேல் அவர் தேங்காய் சீனிவாசன் என்றே அழைக்கப்படுவார் என்று பாராட்டினார்.. அப்படித்தான் அவரது பெயர் பிரபலமானது.
ஆரம்பத்திலிருந்தே எம்ஜிஆர் மீது தனி பாசமும், மரியாதையும் கொண்டவர் தேங்காய் சீனிவாசன். குடிப்பழக்கம் தேங்காய் சீனிவாசனுக்கு இருந்ததால், எம்ஜிஆரிடம் திட்டு வாங்கி கொண்டேயிருந்தார்.

குடிகாரன் படம் - கண்டித்த எம்ஜிஆர்
ஒருமுறை குடிகாரன் என்ற படத்துக்கு தலைமை தாங்க எம்ஜிஆர் வந்திருந்தார்.. இந்த படத்தில் யார் ஹீரோ என்று கேட்டதற்கு, தேங்காய் சீனிவாசன் என்றார்கள்.. அதற்கு எம்ஜிஆர், பொருத்தமான ஆளுதான் என்றாராம்.
ஆனால், அந்த விழாவுக்கு எம்ஜிஆர் வருவது தேங்காய் சீனிவாசனுக்கு தெரியாது.. மேடையில் பார்த்ததுமே பதறிவிட்டார். காரணம், நிஜமாகவே மது அருந்திவிட்டு வந்திருந்தார்.. உடனே எம்ஜிஆர் தேங்காய் சீனிவாசனிடம், தொழில் செய்யும் இடத்தில் இப்படி குடிபோதையில் வரக்கூடாது என்று கண்டித்துள்ளார்.
கிருஷ்ணன் வந்தான்
எம்ஜிஆரை பொறுத்தவரை, தன்னை நம்பியிருக்கும் நடிகர்களுக்கு ஏதாவது ஒரு வாய்ப்பை, தன்னுடைய படங்களில் ஒதுக்கிவிடுவார். அதுபோல, தேங்காய் சீனிவாசனுக்கும் ஒரு கேரக்டரை ஒதுக்கி தந்துவிடுவார்.
ஒருமுறை, கிருஷ்ணன் வந்தான் என்ற படம் தயாரிக்க போவதாக எம்ஜிஆரிடம் தேங்காய் சீனிவாசன் சொல்லவும், "சம்பாதித்த பணத்தை சேர்த்து வை, படம் எதுவும் தயாரிக்க வேண்டாம்" என்றாராம். ஆனாலும் பிடிவாதம் பிடித்த தேங்காய் சீனிவாசன், கிருஷ்ணன் வந்தான் படத்துக்கு சிவாஜியின் கால்ஷீட்டை வாங்கி தாருங்கள் என்று, எம்ஜிஆரிடமே உதவி கேட்டாராம்.
சிவாஜி கால்ஷீட்
அவரது பிடிவாதத்தை பார்த்த எம்ஜிஆர், சிவாஜியின் கால்ஷீட்டையும் வாங்கி தந்துள்ளார்.. ஆனால், பணம் இல்லாமல், பாதியிலேயே படம் நின்றுவிட்டது. இதனால் பணத்துக்கு என்ன செய்வது? என்று கையை பிசைந்து நின்ற தேங்காய் சீனிவாசன் ராமாவரம் தோட்டத்துக்கு ஓடி எம்ஜிஆரிடம் மீண்டும் உதவி கேட்டுள்ளார்.
அதற்கு எம்ஜிஆர், சொந்தப்படம் எடுக்க வேண்டாம் என்று சொல்லியும் ஏன் எடுத்தே? கடுமையாக திட்டி அனுப்பிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த தேங்காய் சீனிவாசன் தனக்கு தெரிந்த நண்பர்களை ஒவ்வொருவராக நேரில் சந்தித்து, "என் தெய்வம் என்னை திட்டிடுச்சே" என்று அழுதுகொண்டே சொல்லியிருக்கிறார்.. அன்று இரவு வீட்டுக்கு வந்ததுமே, அவரது மனைவி ஒரு பெட்டியை தந்து, இதை எம்ஜிஆர் சார் கொடுத்தனுப்பியிருக்கிறார் என்றார்.
தெய்வத்தை தப்பா நினைச்சிட்டேனே
உடனே அந்த பெட்டியை திறந்து பார்த்தால் 25 லட்சம் பணம் இருந்ததாம்.. இதை பார்த்த தேங்காய் சீனிவாசன், "என் தெய்வத்தை தப்பா நினைச்சிட்டேனே" என்று மீண்டும் அழ ஆரம்பித்துள்ளார்.. ஒருவழியாக "கிருஷ்ணன் வந்தான்" படம் எடுக்கப்பட்டாலும், அந்த படம் சுமாராகத்தான் ஓடியது.
எம்ஜிஆர் எப்போது யாரை திட்டினாலும் அதில் ஒரு நியாயம் இருக்கவே செய்யும்.. அந்தவகையில், கடைசிவரை எம்ஜிஆரின் தீவிர தொண்டனாகவே இருந்தார் தேங்காய் சீனிவாசன்..
செலவு செய்யப்படாத ரூ.100
அமெரிக்காவில் சிகிச்சைக்கு சென்ற எம்ஜிஆர் இறந்துவிட்டதாக புரளி ஒன்று பரவிவிட்டது. அப்போது தேங்காய் சீனிவாசன், தன்னுடைய பாக்கெட்டில் ரூ.100 வைத்துக் கொண்டு, "என் வாத்தியாருக்கு நான்தான் முதல் மாலை போடுவேன்" என்று சொல்லி கொண்டேயிருந்தாராம்.. எந்த கடினமான சூழ்நிலை வந்தபோதுகூட, அந்த 100 ரூபாயை பாக்கெட்டிலிருந்து அவர் எடுக்கவேயில்லை..
ஆனால், தேங்காய் சீனிவாசனுக்குதான் எம்ஜிஆர் இறுதி மாலை போடும்படி ஆகிவிட்டது. அப்போது ஜானகி அம்மாவுடன் வந்திருந்த எம்ஜிஆர், தேங்காய் சீனிவாசனின் மகனை தனியாக அழைத்து, பண்டல் பணத்தை தந்து, அம்மாவிடம் கொண்டுபோய் கொடு என்று தந்துவிட்டு போனார் என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications