சீரியல் ஷூட்டிங்கில் விபரீதம்... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் நவீன்!
சென்னை: சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றாக சின்ன மருமகள் இருக்கிறது. குடும்பக் கதையுடன் சேர்த்து, ஒரு பெண்ணின் கல்வி எவ்வளவு முக்கியம், வாழ்க்கையில் படிப்பு எப்படி ஒருவரின் நிலையை மாற்றுகிறது என்பதைக் கூறும் விதமாக இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. இதனால் குடும்ப பெண்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களிடமும் இந்த சீரியலுக்கு தனி வரவேற்பு உருவாகியுள்ளது.

சீரியல் நடிகர் நவீன்
இந்த சீரியலின் முக்கிய பலங்களில் ஒன்று கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் நவீன். தனது இயல்பான நடிப்பு, எளிமையான உடல்மொழி, எமோஷனலான காட்சிகளில் காட்டும் எக்ஸ்பிரஷன் ஆகியவற்றால் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். சின்னத்திரை உலகில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராகவும் நவீன் பார்க்கப்படுகிறார்.
இப்படிப்பட்ட நிலையில், நவீனை பற்றி வெளியான ஒரு தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது சின்ன மருமகள் சீரியலின் படப்பிடிப்பின்போது நடிகர் நவீனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடல்நல பிரச்சனை
தகவல்களின் படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வெயிலில் சீரியலுக்கான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டதாம். பல மணி நேரம் நீண்ட அந்த ஷூட்டிங்கின் போது அதிக வெப்பநிலை காரணமாக நவீனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சாதாரண சோர்வாக எடுத்துக்கொண்ட அவர், சண்டைக் காட்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியிருக்கிறார்.
ஆனால் வீட்டிற்கு சென்ற பிறகும் மூச்சுத்திணறல் குறையாமல், மேலும் அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் தாங்க முடியாத நிலை ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாராம். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, உடனடி சிகிச்சையாக ஆக்சிஜன் உதவி அளித்ததாக கூறப்படுகிறது.
ஹாஸ்பிடலில் அனுமதி
பொதுவாக இப்படிப்பட்ட சூழலில் முழு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். நவீனுக்கும் அதே ஆலோசனையே வழங்கப்பட்டதாக தகவல். ஆனால் சீரியலின் முக்கியமான திருமண காட்சிகள் படமாக்கப்பட வேண்டிய கட்டாயம் இருந்ததால், சீரியல் தரப்பில் இருந்து அவரிடம் பேசியதாக கூறப்படுகிறது.
உடல்நிலை சரியில்லாத போதிலும், எபிசோடுகள் தாமதமாகக்கூடாது, ரசிகர்கள் ஏமாறக்கூடாது என்ற எண்ணத்தில் நவீன் மருத்துவமனையிலிருந்து நேராக படப்பிடிப்பு தளத்திற்கே சென்றதாக கூறப்படுவது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது அவரது தொழில் பற்றும் அர்ப்பணிப்பையும் காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் கருத்து
இன்றைய சின்னத்திரை உலகில் ஒரு சீரியல் வெற்றி பெறுவதற்கு கதையோடு மட்டுமல்ல, நடிகர்களின் உழைப்பும் மிகப்பெரிய காரணம். திரையில் சில நிமிடங்கள் மட்டுமே நாம் பார்க்கும் காட்சிகளுக்குப் பின்னால் எவ்வளவு உடல் உழைப்பும் மன அழுத்தமும் இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவமே ஒரு உதாரணம்.
இந்த தகவல் வெளியானதும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நவீனுக்காக கவலை தெரிவித்து வருகின்றனர். "உடம்பு தான் முதலில் முக்கியம்", "இவ்வளவு அர்ப்பணிப்பு தேவையா?", "சீக்கிரம் குணமாகணும்" என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் சின்னத்திரை நடிகர்கள் படப்பிடிப்பின் போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாக பேசப்படும் நிலையில், நவீனின் இந்த சம்பவமும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அவர் நலமாக இருப்பதாக தகவல் வந்தாலும், உடல்நலத்தை விட எந்த ஷூட்டிங்கும் பெரியதல்ல என்பதே ரசிகர்களின் ஒரே கருத்தாக உள்ளது.













Click it and Unblock the Notifications