சினேகனுக்கு தாலி எடுத்து தந்து, பேர குழந்தைகளுக்கு பெயரிட்ட வளர்ப்பு தந்தை கமல்.. பாசம் என்ன ஆச்சு
சென்னை: சினேகன் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலக போவதாக ஒரு தகவல் பரபரத்து வருகிறது.. இது உண்மையா என்றும் தெரியவில்லை.. கட்சியில் ஏற்பட்ட மனவருத்தங்களால் இந்த கலை குடும்பத்துபிணைப்பு பாதையில் புயல் வீசத் தொடங்கியிருப்பதாக செய்திகள் கசிந்து வருகிறது.. இந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது..!!
தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் இடையேயான பிணைப்பு என்பது வெறுமனே கேமராவுக்கு முன்னால் முடிந்துவிடுவதில்லை. அதையும் தாண்டி ஒருசில உறவுகள் இதயத்தோடு இணைந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு ஆழமான, உணர்வுப்பூர்வமான பந்தம்தான் உலகநாயகன் கமல்ஹாசனுக்கும், முன்னணி பாடலாசிரியர் கவிஞர் சினேகனுக்கும் இடையே உருவானது.

மக்கள் நீதி மய்யம்
வெள்ளித்திரையிலும், பிக்பாஸ் மேடையிலும் பூத்து குலுங்கிய இந்த தந்தை-மகன் பாசம், அல்லது குரு - சீடன் நேசம், திரையுலக ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த ஒன்று. ஆனால், இப்போ வீசம் அரசியல் சூழல், இந்த பிணைப்பை திசை மாறி பயணிக்க வைத்து விடும் போல தெரிகிறது.
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்ற சினேகன், தனது கவிதைகளாலும் நேர்மையான அணுகுமுறையாலும் கமலின் அன்பை முழுமையாக வென்றெடுத்தார்.
தத்தெடுத்த மகன்
சமீபத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற சினேகனின் தந்தை சிவசங்குவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், "சினேகனின் தந்தையிடம் கேட்காமலேயே அவரை என் சொந்தப் பிள்ளையாகத் தத்தெடுத்துக் கொண்டேன்" என மேடையில் நெகிழ்ச்சியோடு அறிவித்தார். அந்த அளவுக்குச் சினேகன் மீது தனிப்பட்ட அக்கறையும் பாசமும் கொண்டிருந்தார் கமல்.
இந்த குடும்ப உறவு திரையுலகத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை.. கன்னிகா ரவியை சினேகன் காதலித்தபோது, அவர்களுக்கு முன்னின்று தாலியை எடுத்துக்கொடுத்துத் திருமணத்தை நடத்தி வைத்தவர் கமல்ஹாசன் தான்.
சினேகன் - கமல்ஹாசன் உறவு
அத்துடன் நிற்காமல், சினேகன்-கன்னிகா தம்பதியருக்குப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளுக்கு "காதல்", "கவிதை" எனத் தூய தமிழில் பெயர் சூட்டி, தங்க வளையல்களை பரிசளித்துத் தன் பேரக் குழந்தைகளாகவே அவர்களைக் கொஞ்சி மகிழ்ந்தார் உலகநாயகன். அந்த அளவுக்கு தன் குடும்பத்தின் மூத்த மூச்சாகக் கமலைப் போற்றி வணங்கி வந்தார் சினேகன்.
அரசியலிலும் கமலின் கொள்கைகளை ஏற்று, அவரோடு தோளோடு தோள் நின்று பயணித்தார் சினேகன். பல தேர்தல் களங்களில் வேட்பாளராக நின்று போட்டியிட்டுத் தன் கலைத் தலைவனுக்காக உழைத்தார். கூட்டணிகள், உத்திகள் என பல மாற்றங்கள் வந்தபோதும், தன் மனதில் பட்ட கருத்துகளைத் துணிச்சலாகக் கமலிடம் எடுத்துரைக்கும் அளவுக்கு அவருக்கு அங்கு உரிமையும் சுதந்திரமும் இருந்தது.
கமல் மீது சினேகன் வைத்திருந்தது வெறும் அசைக்க முடியாத மரியாதை மட்டுமல்ல, ஒரு தந்தையிடம் மகனுக்கு இருக்கும் அலாதியான உரிமை.
மநீம விலகல்?
ஆனால், இப்போது திரையுலகிலும் கலை உலக வட்டாரத்திலும் ஒரு செய்தி தீயாகப் பரவி வருகிறது. கமல்ஹாசன் தனது அடுத்தகட்ட கலை மற்றும் மக்கள் பணிகளில் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், இயக்கத்தின் செயல்பாடுகள் மந்தமாக இருப்பதாகக் கருதி சினேகன் தீவிர அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தன்னுடைய கமலிடமே நேரில் சென்று தன் ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.. அதற்கு கமல், "இப்போது எந்தத் தேர்தலும் இல்லை, அமைதியாக நடப்பதைக் கவனியுங்கள்" என கமல் பதில் சொன்னதாகவும், அதனால் கட்சியிலிருந்து விலகும் முடிவுக்குச் சினேகன் வந்துவிட்டதாகவும் தகவல்கள் கசிகின்றன. ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் சினேகன் தனது அடுத்தகட்ட முடிவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தந்தை - மகன் பாசம்
எது எப்படியோ, கலைத்துறை தந்த இந்த தந்தை-மகன் பந்தம், பொதுவாழ்வில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் பாதிக்கப்படுமா அல்லது திரையுலகத்தின் அந்த பாசப் பிணைப்பு என்றும் மாறாமல் தொடருமா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.
ஆனால், கலை உலகம் தந்த இந்தக் அழகிய குடும்ப உறவு என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே இருவரின் திரையுலக ரசிகர்களின் விருப்பமாக உள்ளது....!!!


Click it and Unblock the Notifications
