அடி மேல் அடி.. இசையமைப்பாளர் தேவா தம்பி மகன் கார்த்திக் 37 வயதில் இறக்க காரணம்?
சென்னை: சில மரணங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கும். ஆனால், ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழும் இழப்புகள் மனதை உலுக்கிவிடும். அப்படியொரு துயரமான சூழலில்தான் இசையமைப்பாளர் தேவாவின் குடும்பம் இப்போது இருக்கிறது. கடந்த ஆண்டு தந்தை சபேஷை இழந்த நடிகர் கார்த்திக் சபேஷ், இரண்டு நாட்களுக்கு முன்பு பெரியப்பா தேவாவையும் இழந்தார். அந்தத் துயரமே இன்னும் விலகாத நிலையில், தற்போது கார்த்திக் சபேஷும் உயிரிழந்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
37 வயதுதான் ஆகிறது. வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டிய வயது. மனைவி, இரண்டு குழந்தைகள் என குடும்பத்துடன் வாழ வேண்டிய காலகட்டத்தில் கார்த்திக் சபேஷின் வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சில மாதங்களாகவே சிகிச்சை எடுத்து வந்த கார்த்திக் திடீரென காலமாகி இருக்கிறார். அவருக்கு என்ன பிரச்சனை இருந்தது என்பது பற்றி உறுதியாக இன்னும் தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவர் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுவார் என்று குடும்பத்தினர் நம்பிய நிலையில் இது எதிர்பாராத ஏமாற்றம்.
அடுத்தடுத்த இழப்பு
கார்த்திக் சபேஷின் குடும்ப பின்னணியைத் தெரிந்தவர்களுக்கு இந்த செய்தி இன்னும் வலியை ஏற்படுத்தும். அவருடைய தந்தை சபேஷ், இசையமைப்பாளர் தேவாவின் தம்பி. முரளியுடன் இணைந்து சபேஷ் - முரளி என்ற பெயரில் பல படங்களுக்கு இசையமைத்தவர். இசைக் குடும்பத்தில் பிறந்த கார்த்திக், சினிமாவில் நடிகராகத் தனது பயணத்தை தொடர்ந்தார். கடந்த ஆண்டு சபேஷ் உயிரிழந்தபோது, கார்த்திக் தனது தந்தையை இழந்தார். அந்த இழப்பிலிருந்து குடும்பத்தினர் மெல்ல மீண்டு வந்திருக்கக்கூடும். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியப்பா தேவாவும் உயிரிழந்தார். தேவாவின் மறைவு செய்தியே பலருக்கும் அதிர்ச்சியாக இருந்த நிலையில், தற்போது அவருடைய தம்பி மகன் கார்த்திக் சபேஷும் உயிரிழந்திருக்கிறார்.

பட்டத்து யானை படத்தில் பொங்கல் குமார்
கார்த்திக் சபேஷ் என்ற பெயர் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வராமல் இருக்கலாம். ஆனால், விஷால் நடிப்பில் வெளியான 'பட்டத்து யானை' படத்தைப் பார்த்தவர்களுக்கு அவர் முகம் நினைவிருக்க வாய்ப்புள்ளது. அந்த படத்தில் பொங்கல் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சந்தானம் தம்பி பொங்கல் குமாரு என்று கூப்பிடு உன் காட்சிகள் காமெடியாக இருக்கும்.
நடிகராக தொடர்ந்து படங்களில் நடித்து வந்த கார்த்திக் சபேஷ், ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் மட்டும் இல்லாமல் வெவ்வேறு படங்களில் வெவ்வேறு வேடங்களில் நடித்துள்ளார். 2009ஆம் ஆண்டு வெளியான 'குளிர் 100°' படத்தில் பப்லூ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இளம் வயதினரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட அந்தப் படத்தில் சஞ்சீவ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கார்த்திக் சபேஷ் நடித்த திரைப்படங்கள்
அதன்பிறகு 'காதல் சொல்ல வந்தேன்' படத்தில் பேத்த பெருமாள் என்ற கதாபாத்திரத்திலும், சிம்பு நடித்த 'வல்லவன்' படத்தில் வல்லவனின் ஸ்கூல் பிரண்டாக நடித்திருந்தார். 'உதயம் என்.எச்.4' படத்தில் கார்த்திக் என்ற பெயரிலேயே ஒரு கதாபாத்திரத்திலேயே நடித்திருந்தார். மேலும், 'பர்மா' படத்தில் பூமர் என்ற கதாபாத்திரத்திலும், 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' படத்தில் ஐசக் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். 'மகாபலிபுரம்' படத்தில் சாமி என்ற வேடத்திலும் அவர் நடித்திருந்தார். இப்படி பல படங்களில் துணைக் கதாபாத்திரங்கள் மூலம் தனது நடிப்பு பயணத்தைத் தொடர்ந்து வந்தார்.
இசையமைப்பாளர் தேவா தம்பி மகன் கார்த்திக் சபேசன் 37 வயதில் திடீர் உயிரிழப்பு.. சோதனை மேல் சோதனை
கார்த்திக் சபேஷுக்கு ரம்யா கார்த்திக் என்ற மனைவியும், பிரிஷானிதாரா, ஹைரானிதாரா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இளம் வயதிலேயே கணவரையும் தந்தையையும் இழந்து தவிக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு இந்த நேரத்தில் ஆறுதல் சொல்வதுகூட கடினம். தேவாவின் இசையை ரசித்தவர்கள் அவரை நினைத்து வருந்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அவருடைய குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் இந்தத் தொடர் இழப்புகள் இன்னும் அதிகமான வேதனையை ஏற்படுத்தியுள்ளன. சில செய்திகளைப் படித்துவிட்டு அடுத்த செய்திக்கு சென்றுவிடலாம். ஆனால், இப்படியான ஒரு குடும்பத்தின் துயரத்தை நினைத்து பார்க்கும்போது மனம் அங்கேயே நின்றுவிடுகிறது.



Click it and Unblock the Notifications
