Kulasai Dasara: குலசை தசரா விழா! இன்று சூரசம்ஹாரம்! கடற்கரையில் குவிந்த பக்தர்கள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்வை காண நேற்றைய தினம் முதலே ஏராளமான பக்தர்கள் குலசையில் குவிந்துள்ளனர்.
குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்திஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கர்நாடக மாநிலம், மைசூர் தசராவை குலசேகரன்பட்டினத்திலும் இந்த விழா, உலகளவில் பிரபலமான ஒன்று.

இந்த விழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, முருகன், அம்மன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து வருகிறார்கள்.
8ஆம் நாளான திங்கள்கிழமை காலை முதல் இரவு 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 10 மணிக்கு அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் முத்தாரம்மன் திருவீதியுலா நடந்தது.

இதையடுத்து விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு 12 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கடற்கரை வளாகத்தில் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் இந்த சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. அப்போது அம்மன், சிம்ம வாகனத்தில் வந்து மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும்.

சூரசம்ஹாரம் முடிந்ததும் நாளை புதன்கிழமை 1 மணிக்கு, கடற்கரை மேடையில் அம்மன் எழுந்தருளுவார். அவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும். அதிகாலை 3 மணிக்கு அம்மன் திருத்தேர் பவனி வரும் நிகழ்வும் நடைபெறும். பின்னர் 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா புறப்பட்டு மாலை 4 மணி அளவில் கோயிலுக்கு வருவார்.

இதையடுத்து 4.30 மணிக்கு மேல் காப்பு களைதல், நள்ளிரவு 12 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். மேலும் வியாழக்கிழமை அன்று மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம், அன்னதானம் ஆகியவை நடைபெறும்.
சூரசம்ஹாரத்தையொட்டி நேற்று காலை முதலே தமிழகம் மட்டுமல்லாமல் மும்பை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குலசேகரபட்டினத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

சூரசம்ஹாரத்தையொட்டி கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிகர விழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் போலீஸார் பாதுகாப்புப் பணிகளை செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
