மகுடம் படத்தில் இப்படியெல்லாம் லாஜிக்? ஆனால், விஷால் பெரிய விஷயத்தை மறந்துட்டாரே?
சென்னை: விஷால் இயக்கி, நடித்து இருக்கும் மகுடம் படத்தை பார்த்துவிட்டு மற்ற விஷயங்களை எல்லாம் கூட கொஞ்சம் பொறுத்துக்கலாம், ஆனால் இந்த அப்பா மகன் கண்ணாமூச்சியை மட்டும் எப்படி பொருத்துகிறது? என்பதுதான் பலருடைய ஆதங்கமாக இருக்கிறது. தியேட்டரிலேயே செம அடி வாங்கிய இந்த படம் இப்போ ஓடிடிக்கு வந்த பிறகு ட்ரோல் மெட்டீரியலாக வந்து மாறி இருக்கிறது.
படத்தின் கதை என்னவென்றால், கிருபாகரன் என்ற விஷால் சென்னையில் மெடிக்கல் ரெப்பாக மனைவி துஷாரா விஜயன் மற்றும் குழந்தைகளுடன் சாதாரண வாழ்க்கை வாழ்கிறார். ஒரு கட்டத்தில் நடக்கும் கொடூரமான சம்பவத்திற்கு பிறகு தன்னுடைய கடந்த காலமும், விசாகப்பட்டினம் ஹார்பரில் பெரிய தாதாவாக இருக்கும் அப்பா லிங்கம் கதைக்குள் வருகிறார்கள். அப்பா மகன் ஏன் பிரிந்தார்கள்? அந்த பிரிவுக்கு பின்னால் என்ன நடந்தது என்பதுதான் மொத்த கதையும்.

மகுடம் படத்தின் கதை
இதுவரைக்கும் ஓகே.. ஆனால் லிங்கா யாரு தெரியுமா? சும்மா தெருவில் 4 பேர் வைத்துக் கொண்டு ஏரியாவே என் கண்ட்ரோல் என்று சொல்லும் ரவுடி கிடையாது. பைசாக்கு ஹார்பரே அவர் கண்ட்ரோலில், அந்த அளவுக்கு பெரிய தாதா. எதிரிகள் அவரை போட்டு தள்ள சந்தர்ப்பம் பார்த்திருக்கிறார்கள். ஆட்கள் அவருக்காக உயிரையே கொடுக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய தாதாவுக்கு ஒரு சின்ன பிரச்சனை, தன்னுடைய சொந்த மகனிடம் மட்டும் போய் பேச முடியவில்லை.
மகன் பைக்கில் போனால் பின்னாடியே அப்பா காரில் போவார். மகன் ஹாஸ்பிட்டலில் இருந்தால் அப்பாவும் அதே இடத்தில் நின்று கொண்டு இருப்பார். மகனை சுற்றி அப்பா பார்த்துக் கொண்டே இருப்பார். ஆனால் மகனுக்கு மட்டும் அப்பா யார் என்று தெரியவில்லை. அதை பார்க்கும்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம், விஷாலுக்கு கண்ணு தெரியலையா? அல்லது விஷால் அப்பா லிங்கம் போட்டு இருக்கிற மாறு வேஷத்தை விஷால் கண்டுபிடிக்கலையா? என்று, ஆனால் நம்ம வீட்டு குட்டி குழந்தைகள் கூட அது யாருன்னு சொல்லிடும்.
அப்பா மகன் உறவு
அதுபோல மகன் கார் வாங்க வேண்டும் என்பதற்காக படும் பாடு இருக்கே அது உங்க வீட்டு கஷ்டம்... எங்க வீட்டு கஷ்டம் இல்ல... அவ்வளவு கஷ்டப்படுகிறார். ஆனால் அப்பா ஹார்பரையே ஆளுகிறார். மகனுக்கு ஒரு கார் வாங்கி கொடுக்க மட்டும் அப்பாவால் முடியவில்லை. அடப்பாவிகளா ஹார்பரில் எத்தனை படகுகள் இருக்குன்னு எண்ணிப் பார்த்த அப்பா மகனுக்கு ஒரு கார் வாங்கி தரலாம் என்று எண்ணம் வரலையே என்று நமக்கு தோணுகிறது, அவர்களுக்கு நினைவுக்கு வரல.
இதைவிட இன்னொரு விஷயம் நமக்கு சிரிப்பே வர வைக்கிறது. இந்த லிங்கை கேரக்டர் நல்ல தாதா. அதாவது தாதா வேலை செய்பவர் ஆனால் அறத்தோடு செய்பவர். தன்னிடம் வேலை பார்க்கிற ஆட்களுக்கு எல்லாம் தீபாவளி, போனஸ், இனிப்பு கொடுத்து வீட்டுக்கு அனுப்புகிறார். இதை பார்த்தால் இவர் தாதாவா? இல்ல ஹார்பர் மேனேஜரா என்று கேட்கத் தோன்றுகிறது. தமிழ் சினிமாவில் தாதா என்றால் ஆட்களை அடிப்பார், மிரட்டுவார், எதிரிகளை தூக்குவார்.
நல்ல தாதா
இங்கே தம்பிகளா தீபாவளி வருது எல்லாரும் குடும்பத்தோட போயிட்டு வாங்க என்று அவங்களுக்கு லீவு கொடுத்து ஊருக்கு அனுப்பி வைக்கிறார். இன்னும் கொஞ்சம் படம் நீண்டு இருந்தால் யாருக்காவது இன்கிரிமென்ட் வேண்டுமானு கூட அவர் கேட்டிருப்பாரோ என்னவோ.. இதற்கு இடையே அப்பா மகன் சென்டிமெட்டை தூக்கி வைத்து படம் நகர்கிறது. ஆனால் அந்த சென்டிமெண்டை கட்டுவதற்காக பல இடங்களில் சுற்றி சுற்றி போகிறது.
மிரள வைக்கும் ஆக்சன்
3 மணி நேரத்துக்கு மேலாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது. பல காலகட்டங்களில் விஷாலே வெவ்வேறு தோற்றத்தில் வருவது திரைக்கதையின் குழப்பத்தை ஏற்படுகிறது. அதிலும் வயதான லிங்காவாக வரும் விஷாலின் கெட்டப் பார்க்கும் உங்களுக்கு பழைய ராமராஜனை நினைவு படுத்தினால் அதற்கு நாங்க பொறுப்பு இல்ல. கரகாட்டக்காரன் படத்துக்கு பிறகு வரும் கதாநாயகர்கள் எல்லாம் இந்த அளவிற்கு மேக்கப் போட்டு நாங்கள் ஹீரோக்கள் என்று சொன்னதில்லை. ஆனால் விஷால் ராமராஜனை நினைத்து மேக்கப் போட்டு விட்டார் போல.
அழகா இருக்கிற ஹீரோக்களை கூட பாலா அழுக்காக்கி தான் சினிமாவில் காட்டுவார். ஆனால் விஷால் மட்டும் ஹீரோயினி அஞ்சலியை விட தனக்கு அதிகமான மேக்கப் போட்டு இருக்கிறார். கிளைமாக்ஸ் வரைக்கும் நம்மை கூட்டிக்கொண்டு வந்து கடைசியில் இன்னும் ஒரு பெரிய ஆக்சன் பாக்கி இருக்கு என்று உக்கார வைத்திருக்கிறார்கள். சுமார் 8 நிமிடம் நீளும் அந்த ஆக்சன் காட்சி பார்த்து பலர் பயத்தோடு டிவியை ஆஃப் பண்ணி இருக்கலாம். அந்த அளவிற்கு டிவிக்கு வெளியே வரைக்கும் ரத்தம் தெரிந்து விட்டு போகிறது.


Click it and Unblock the Notifications
