சூப்பர் சிங்கர் ஸ்டேஜில்.. மைக்கை பிடித்ததுமே தேம்பி அழுத சண்முக பாண்டியன்.. மனதை உருக வைத்த நிகழ்வு
சென்னை: விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில், கேப்டன் விஜயகாந்த் பாடல்களை போட்டியாளர்கள் பாடியிருந்தனர்.. இதில், பல்வேறு நெகிழ்ச்சி தருணங்கள் நடந்து, இணையவாசிகளையும், விஜயகாந்த் ரசிகர்களையும் உருக்கி எடுத்துவருகிறது.
கடந்த 2015ம் ஆண்டு சுரேந்தர் இயக்கத்தில் சகாப்தம் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டி.. இந்த படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.. ஆனால் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

அடுத்து தமிழன் என்று சொல், தமிழர்களின் வரலாற்றை சித்தரிக்கும் விதமாக கதையம்சம் கொண்ட படத்தில் விஜயகாந்த் தன்னுடைய மகனுடன் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியானது.. ஆனால் அந்த படம் பாதியிலேயே நின்றுபோனது. இதற்கு பிறகு, மதுரவீரன் என்ற படத்தில் சண்முக பாண்டியன் நடிக்க முடிவானது..
படைத்தலைவன்:
ஆனால், அந்த படமும் அதிர்ச்சியை தந்துவிட்டது. இப்போது, அன்பு இயக்கும் படைத்தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார்.. முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் சண்முக பாண்டியனுக்கு ஒரு திருப்பு முனையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், "என்றென்றும் கேப்டன்" சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.
இதில் சூப்பர் சிங்கர் ஜூனியர்கள் விஜயகாந்த் நடித்த படங்களிலிருந்து பாடல்களை பாடி அசத்தினார்கள். இதில் சண்முக பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது காயத்ரி என்ற சிறுமியும் பாட்டை பாடினார்.. பிறகு, காயத்ரியின் குடும்பத்தினர் மேடைக்கு அழைக்கப்பட்டார்கள்..
காயத்ரி அம்மா:
காயத்ரியின் அம்மா சண்முக பாண்டியனிடம், "சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆடிஷன் சென்னையில் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. ஆனால், இந்த ஆடிஷனில் கலந்து கொள்வதற்கு முன்பு, விஜயகாந்த் நினைவகத்துக்குதான் முதலில் சென்று வணங்கி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று என் கணவர் விரும்பினார்.
காயத்ரியின் அப்பா, சின்ன வயதிலிருந்தே விஜயகாந்தின் ரசிகராக இருந்தவர்.. தேமுதிக கட்சிப் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.. ஆனால், உடல்நிலை பாதிப்பு காரணமாக, கடந்த 2012லிருந்து கட்சியிலிருந்து விலக நேர்ந்தது.
கேப்டன் கோயில்:
கேப்டன் மரண செய்தியை கேட்டபிறகு சென்னைக்கு வந்து அஞ்சலி செலுத்த நினைத்தார். அப்போதும் அவரது உடல்நிலை சரியாகவில்லை. தற்போது சென்னைக்கு வந்து இறங்கியதுமே, விஜயகாந்த் கோயிலுக்கு போகணும்னு ஆசைப்பட்டார். அங்கு சென்று வேண்டிக்கொண்டதுமே, எங்கள் மகளுக்கு விஜய் டிவியில் பாடும் வாய்ப்பு கிடைத்தது" என்றார்.
இதற்கு பிறகு காயத்ரியின் அப்பாவிடம் மைக் தரப்பட்டது. ஆனால், அவரால் தெளிவாக பேச முடியவில்லை. எனினும் முயற்சி செய்து அவர் பேசுவதை கண்டு, அரங்கமே கண் கலங்கி பார்த்தது. அவர் சொல்ல முயற்சித்ததை, அவரது மகள் காயத்ரி வரிக்கு வரி விளக்கி சொன்னார்.. ஆனால், விஜயகாந்த் மீதான பிரியத்தை, அழுதுகொண்டே அவர் வெளிப்படுத்தியதை பார்த்ததும் சண்முக பாண்டியனுக்கும் கண்கலங்கிவிட்டது. இதனால் ஓடிச்சென்று காயத்ரியின் அப்பாவை கட்டியணைத்து கொண்டார்.
கண்கலங்கினார்:
பிறகு சண்முக பாண்டியன் பேசும்போது, "இவர் பேசமுடியாமல் எப்படி கஷ்டப்படறாரோ, அதுபோலவேதான் என் அப்பாவும் கடைசி காலத்தில் கஷ்டப்பட்டார்.. காயத்ரி போலவேதான் என் அப்பாவுக்காக நான் பேசியிருக்கிறேன். கிட்டத்தட்ட 10 வருடம் என் அப்பா பக்கத்திலேயே இருந்து கவனித்து கொண்டேன்.
மறுபடியும் நடந்துவிடுவாரா? பழையபடி அப்பா பேசிவிட மாட்டாரா? அதே சிம்மக்குரலில் பேசிவிட மாட்டாரா என்று நானும், என் அம்மா, அண்ணன் போராடினோம்.. கவலைப்படாதீங்க.. அப்பா நம்ம கூடவே இருப்பார், அப்பாவின் ஆசீர்வாதம் பாப்பாவுக்கும் எல்லாருக்கும் இருக்கும்" என்று சொல்லிக்கொண்டே பேச முடியாமல் அழுதுவிட்டார் சண்முக பாண்டியன்.












Click it and Unblock the Notifications