பைசனை பாராட்டிய ரஜினிகாந்த்.. நெகிழ்ச்சியோடு மாரி செல்வராஜ் பதிவு! அப்போ அடுத்த படம் ரெடியா?
சென்னை: திரையுலகில் வெற்றிப் படங்களைக் கொடுத்தால், உடனே அழைத்து மனம் திறந்து பாராட்டுவதைத் தனது வழக்கமாகக் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த வரிசையில், இயக்குநர் மாரி செல்வராஜின் ஒவ்வொரு புதிய படைப்பையும் பார்த்து, ரஜினி அவரைப் பாராட்டி வருகிறார். தற்போது, 'பைசன் - காளமாடன்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் மீண்டும் மாரி செல்வராஜுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் இந்தத் தொடர்ச்சியான ஆதரவு, மாரி செல்வராஜை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கியமான குரல்
இயக்குநர் மாரி செல்வராஜ், தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். அவரது படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், தென்மாவட்ட சமூக மற்றும் சாதியச் சிக்கல்களை அழுத்தமாகப் பேசும், சிந்திக்கத் தூண்டும் 'புத்தகங்களாக' உள்ளன.
முந்தைய பாராட்டுகள்
ரஜினிகாந்த், மாரி செல்வராஜின் முதல் படங்களான 'பரியேறும் பெருமாள்' மற்றும் 'கர்ணன்' ஆகிய படங்களைப் பார்த்து நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும், 'மாமன்னன்' படத்தை பார்த்துவிட்டு, "சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரு அருமையான படைப்பு" என்று தனது ட்விட்டர் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடைசியாக வெளியான 'வாழை' படத்திற்குக் கூட, ரஜினிகாந்த் மனம் உருகி ஒரு பெரிய கடிதமே எழுதி அனுப்பியிருந்தார்.
பைசன் - காளமாடன்
துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான 'பைசன் - காளமாடன்' திரைப்படம், தீபாவளிக்கு வெளிவந்து விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையையும், தென்மாவட்டங்களில் நிலவிய சமூகச் சிக்கல்களையும் மையமாக வைத்து மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரமின் கடின உழைப்பும், கபடி வீரராக அவர் வாழ்ந்தே காட்டியதும் இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.
மாரி செல்வராஜின் நெகிழ்ச்சியான பதிவு
திரைத்துறை வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பைசன்' திரைப்படத்தை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பார்த்துப் பாராட்டியுள்ளார். தனது வழக்கம்போல், ரஜினிகாந்த் அவர்கள் 'பைசன்' திரைப்படத்தின் வெற்றிக்காக, இயக்குநர் மாரி செல்வராஜை அழைத்து மனம் திறந்து பாராட்டியுள்ளார். ரஜினியின் இந்த அன்பான பாராட்டைத் தாங்கிக் கொள்ள முடியாத மாரி செல்வராஜ், உடனடியாகத் தனது ட்விட்டர் (X) பக்கத்தில், ரஜினிக்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.
அதில், "சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள் '
-சூப்பர் ஸ்டார்
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். ❤️👏🏻
#Bison". என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.
ரஜினிகாந்த் மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவது குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மாரி செல்வராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். தொடர்ச்சியாக ரஜினி பாராட்டி வருவது, அவர் விரைவில் மாரி செல்வராஜின் படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications