வைரமுத்து சொர்ணலிங்கத்திற்கு கிடைத்த விருது... எழுந்து நின்று மரியாதை செலுத்திய ரொறன்ரோ!
சென்னை: ஒரு விருது என்பது வெறும் கோப்பையும் சான்றிதழையும் வாங்கிக்கொண்டு மேடையை விட்டு இறங்குவது மட்டும் கிடையாது. சில விருதுகளுக்குப் பின்னால் பல வருட உழைப்பு இருக்கும். அப்படியொரு நீண்ட பயணத்திற்குத்தான் தற்போது அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. 35 வருஷமாக கலை மற்றும் இசைத்துறையில் தொடர்ந்து இயங்கி வரும் வைரமுத்து சொர்ணலிங்கத்திற்கு, 7வது ரொறன்ரோ திரைப்பட விழா - 2026ன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 25 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தத் திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வு யோர்க் சினிமாவில் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வான விருது வழங்கும் விழா செப்டம்பர் 27ஆம் தேதி ஸ்காபுறோவில் உள்ள Grand Cinnamon Banquet & Convention Centre-ல் நடைபெற்றது. அங்குதான் வைரமுத்து சொர்ணலிங்கத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, நினைவுக் கோப்பை மற்றும் சர்டிபிகேட் வழங்கப்பட்டது.

எழுந்து நின்று மரியாதை
வைரமுத்து சொர்ணலிங்கத்தின் 35 ஆண்டுகால கலைப்பயணம் மற்றும் தமிழ்க் கனடிய கலைச் சமூகத்திற்காக அவர் செய்த பங்களிப்பை பற்றி மேடையில் பேசப்பட்டது. அப்போது விருது வழங்கப்பட்டதும், அரங்கில் இருந்த விருந்தினர்கள் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்கள். அந்தக் காட்சி விழாவின் உணர்வுப்பூர்வமான தருணங்களில் ஒன்றாக மாறியது.
இது ஒரே ஒரு படைப்புக்காக அல்லது ஒரே ஒரு நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்ட விருது அல்ல. பல ஆண்டுகளாக கலைஞர்களுக்கும் கலைத்துறைக்கும் அவர் வழங்கி வந்த ஆதரவை அங்கீகரிக்கும் வகையிலேயே இந்தக் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

பெயரிலேயே கவிதை
வைரமுத்து என்ற பெயரே தமிழர்களுக்கு கவிதையை நினைவுபடுத்தும். அந்தப் பெயரைப் போலவே, இவருடைய 35 ஆண்டுகாலப் பயணமும் கலைக்காக செலவிட்ட காலங்களால் நிறைந்திருக்கிறது. ஒரு கவிதை போலச் சொன்னால், "காலம் கடந்தாலும் கலைக்காக உழைத்த காலங்கள் கடந்து போகாது.. ஒரு கலைஞனின் தடங்கள் மட்டும் அடுத்த தலைமுறையிலும் பேசிக்கொண்டே இருக்கும்." அந்த வகையில் இந்த விருது, ஒரு நாளில் கிடைத்த கௌரவம் அல்ல. பல ஆண்டுகளாக அவர் சேர்த்து வைத்த உழைப்புக்கும் கலைத்துறையுடனான தொடர்புக்கும் கிடைத்த மரியாதை.

திரைப்படங்களை தாண்டிய ஒரு முயற்சி
ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா திரைப்படங்களைத் திரையிடுவதோடு நின்றுவிடாமல், கலை மற்றும் திரைப்படத்துறையில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் சாதனையாளர்களையும் கௌரவித்து வருகிறது. அந்த வகையில், பல மொழிகள் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர்கள் கலந்துகொண்ட சர்வதேச மேடையில் ஒரு தமிழ் கலை ஆளுமையின் 35 ஆண்டுகால சேவை கௌரவிக்கப்பட்டிருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

சமூக தலைவர்கள், ஊடகப் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் வர்த்தகத் துறையினர் முன்னிலையில், விழா தலைவர் செந்தூரன் நடராஜா மற்றும் விழா இயக்குநர் கிருத்திகா தலைமையில் இந்தக் கௌரவிப்பு நடைபெற்றது. 35 ஆண்டுகள் என்பது காலண்டரில் கடந்துபோன ஆண்டுகள் மட்டுமல்ல... ஒரு கலைஞன் விட்டு சென்ற தடங்களின் எண்ணிக்கையும் கூட. அந்த தடங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே வைரமுத்து சொர்ணலிங்கத்தின் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
