ஜனநாயகனில் விஜய் பேசிய டயலாக்.. 8 வயது சிறுமி உடைத்த ரகசியம்! போக்சோ வழக்கில் கைதான நபர்
சென்னை: ஒரு சில படங்கள் வெறும் பொழுது போக்குக்காக எடுக்கப்படுகின்றன. சில படங்கள் வசூலை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கும். ஆனால் அரிதாக சில படங்கள் மட்டும் ஒருவரின் வாழ்க்கையையே மாற்றிவிடும். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது சென்னையில் நடந்திருக்கிறது.
முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்த 8 வயது சிறுமி பல நாட்களாக மனதிற்குள் புதைத்து வைத்திருந்த ஒரு கொடூரமான உண்மையை தனது தந்தையிடம் சொல்லி இருக்கிறார். அந்த ஒரு வாக்குமூலம் தான் தற்போது ஒருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வைத்துள்ளது.
சிறுமிக்கு நடந்த கொடுமை
சென்னை கேகே நகர் நகரை சேர்ந்த சிறுமியின் தாய் கோடம்பாக்கத்தில் வசிக்கும் ஒருவரது வீட்டில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வீட்டில் தான் சிறுமியும் தாயுடன் தங்கி இருந்துள்ளார். அவ்வப்போது தன்னுடைய தந்தையை போய் பார்ப்பார்களாம். அப்படித்தான் கடந்த 30 ஆம் தேதி சிறுமி தனது தந்தையுடன் ஜனநாயகன் படம் பார்க்க சென்றுள்ளார்.

ஜனநாயகன் கொடுத்த தைரியம்
படத்தில் பள்ளி மாணவர்களிடம் குட் டச், பேட் டச் குறித்து விஜய் விழிப்புணர்வு செய்வது போல காட்சி இருக்கிறது. யாராவது தவறாக நடந்து கொண்டால் பயப்படாமல் உடனே பெற்றோரிடமோ நம்பிக்கை உள்ள பெரியவர்களிடமும் சொல்ல வேண்டும் என்று அந்த காட்சியில் சொல்லப்படுகிறது. அந்த காட்சியை பிறகுதான் அந்த சிறுமி தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து தனது தந்தையிடம் மனம் திறந்து கூறியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட நபர் மீது கொடுக்கப்பட்ட புகாரில் அந்த நபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் புகார்
இந்து சம்பவம் சமூக வலைத்தளத்தில் பெரு விவாதம் ஆகி இருக்கிறது. ஒரு திரைப்படத்தில் வந்த விழிப்புணர்வுக்கு காட்சி ஒரு குழந்தைக்கு பேசும் தைரியத்தை கொடுத்திருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொதுவாக பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பல குழந்தைகள் பயம், மிரட்டல் அல்லது குழப்பம் காரணமாக எதையும் வெளியில் சொல்லாமல் அமைதியாகவே இருப்பார்கள். ஆனால் அந்த அமைதியை உடைக்க வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவூட்டி உள்ளது.
குழந்தைகளுக்கு உடல் பாதுகாப்பு குறித்து சிறு வயதில் சொல்லிக் கொடுப்பது முக்கியம் என குழந்தைகள் நல நிபுணர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்காக பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மூலம் குட் டச் பேட் டச் பற்றி விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதையும் தாண்டி இது போன்ற சினிமாக்களிலும், விழிப்புணர்வு காட்சிகள் மூலம் குழந்தைகளுக்கு தைரியம் கொடுப்பதால் இது போன்ற கொடுமையான குற்றங்களை செய்தவர்களுக்கு தண்டனையும் கிடைக்க வழி வகுக்கிறது.

குட் டச், பேட் டச் விழிப்புணர்வு
ஜனநாயகன் படம், பாலையா நடித்த பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக் கதையாக இருந்தாலும் அந்த படத்தில் இடம்பெற்ற குட் டச் பேட் டச் காட்சிகள் பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. அதனால் அதையே ஜனநாயகன் படத்திலும் தமிழ் ரசிகர்களுக்கு விஜய் மூலமாக கொண்டு சேர்த்து இருக்கின்றனர். அதன் மூலம் இப்போது ஒரு குழந்தைக்கு தைரியமும் வந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
