அப்பாவான டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன்! மருத்துவமனையில் குழந்தையுடன் வெளியிட்ட அழகான புகைப்படம்
சென்னை: சினிமாவில் ஒரு வெற்றியை பெறுவதற்காக பல வருடங்கள் காத்திருந்து உழைத்தவர்கள், அந்த வெற்றியை கொண்டாடும் நேரத்தில் வாழ்க்கையில் இன்னொரு அழகான தருணத்தையும் சந்தித்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு மகிழ்ச்சியான கட்டத்தில் இருக்கிறார் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த். 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவர், இப்போது குடும்ப வாழ்க்கையிலும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார்.
அபிஷன் - அகிலா தம்பதிக்கு பெண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. அபிஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் இந்தப் புகைப்படத்தில், மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தையை கையில் ஏந்தியபடி அவர் சிரித்துக்கொண்டிருக்கிறார். கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும் அந்த புகைப்படத்தில் குழந்தையின் முகம் தெரியாதபடி சிவப்பு நிற இதய எமோஜி வைக்கப்பட்டுள்ளது.
குழந்தையை பார்த்தபடி அபிஷன் கொடுத்திருக்கும் அந்த சிரிப்பே புகைப்படத்தின் அழகை இன்னும் அதிகமாக்குகிறது. படங்களில் கதாபாத்திரங்களை உருவாக்கி ரசிகர்களை மகிழ்வித்தவர், இப்போது அப்பாவாகி இருக்கும் மகிழ்ச்சியில் இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
காதலித்து திருமணம்
அபிஷனின் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை, அவருடைய காதல் கதையும் ரசிகர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த ஒன்றுதான். அகிலா இளங்கோவனை ஸ்கூல் படிக்கும் போது இருந்தே காதலித்து வந்த நிலையில், 2025-ம் ஆண்டு 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் மேடையிலேயே அகிலாவிடம் தனது காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்துகொள்ளக் கேட்டார். அப்போது பேசிய அபிஷன், தனது சினிமா கனவை நோக்கி பயணித்தபோது அகிலா தனக்குக் கொடுத்த சப்போர்ட்டை பற்றி பேசி இருந்தார்.

அடுத்தடுத்து மகிழ்ச்சி
அக்டோபர் 31-ம் தேதி தன்னைத் திருமணம் செய்துகொள்வாயா என்று அவர் கேட்டபோது, அகிலா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். அந்த வீடியோ அப்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலானது. அதன்பிறகு 2025 அக்டோபர் 31-ம் தேதி சென்னையில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சசிகுமார், சிவகார்த்திகேயன், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்தினர். இப்போது அந்தக் காதல் வாழ்க்கையில் குழந்தைகளின் வருகையால் இன்னொரு மகிழ்ச்சியான அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
