வரலாற்றிலேயே முதல்முறை.. போலீஸ் பாதுகாப்புடன் சட்டவிரோத மதுவிற்பனை! FL2 பார்களுக்கு ஆதரவாக அமைச்சர்?
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று சுமார் 400 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் திடீரென மூடப்பட்டதால் குடிமகன்கள் கடும் அவதி அடைந்தனர். ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனை அதிகமாக இருக்கும் நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் FL2 பார்களில் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில் தனியார் பார்களை ஊக்குவிப்பதற்காக டாஸ்மாக் ஊழியர்களை பழி வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் நேற்று தனியார் பார்களில் 200 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தனியார் பார்களுக்கு ஆதரவாக அமைச்சர் செயல்படுகிறாரா? என கேள்வி எழுப்புகின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள்.

தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் டாஸ்மாக் மது கடைகள் இயங்கி வருகிறது. தமிழகத்தில் தற்போது 4000 மேற்பட்ட டாஸ்மாக் மது கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், சூப்பர்வைஸர்கள், விற்பனையாளர்கள், உதவியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.
டாஸ்மாக்
ஏற்கனவே டாஸ்மாக் மது கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக எம்ஆர்பி விலையை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவால் மேலும் பத்து ரூபாய் என ஒரு குவாட்டருக்கு ₹20 வசூலிக்கப்பட்டது. காலி பாட்டில் திரும்ப கொடுத்தால் பத்து ரூபாய் தர வேண்டும், இதற்காக சிறப்பு ஸ்டிக்கர் ஒன்றும் ஒட்டப்படுகிறது.
ஊழியர்கள் போராட்டம்
இந்த நிலையில் டாஸ்மாக்கில் புதிய மாற்றமாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் வழங்கும் திட்டத்துக்காக எம்ஆர்பி விலையுடன் அந்த பத்து ரூபாய் சேர்க்கப்பட்டு விற்கப்படுகிறது. பல இடங்களில் அது கூடுதலாக வசூலிக்கப்படும் பணம் தொடர்பாக குழப்பம் ஏற்பட்டது. ஸ்கேனிங் இயந்திரத்தின் கோளாறு காரணமாக பல இடங்களில் பாட்டில்களை திரும்ப பெற முடியாது என கூறி சுமார் 460 டாஸ்மாக் கடைகளை சேர்ந்த ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
எம்ஆர்பி
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் 12 மணிக்கு எல்லாம் கடைகளில் குடிமகன்கள் காத்து கிடப்பார்கள். ஆனால் பல கடைகளை நேற்று திறக்கவில்லை. மேலும் சில கடைகளில் எம்ஆர்பி-யை விட கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து ஒருபுறம் டாஸ்மாக் ஊழியர்களும் மறுபுறம் குடிமகன்களும் போராட்டத்தில் குதித்தனர்.
அமைச்சர் விக்னேஷ்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் விக்னேஷ் கூறிருந்தார். அதே நேரத்தில் சத்தம் இல்லாமல் இதில் ஒரு ஊழல் நடைபெற்றிருக்கிறது என சொல்கின்றனர் டாஸ்மாக் பணியாளர்கள். நேற்று டாஸ்மாக் மதுக்கடை மூடப்பட்டதன் மூலம் சுமார் 150 கோடி ரூபாய் அளவுக்கு தமிழக அரசு அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. மறுபுறம் எஃப்எல்2 உரிமம் பெற்ற தனியார் பார்களின் விற்பனை களை கட்டியது.
எஃப்எல்2 பார்
சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை பல்வேறு எஃப்எல்2 பார்களில் குடிமகன்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக திண்டுக்கல்லில் எஃப்எல்2 பார்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து குடிமகன்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மதுப்பிரியர்கள் குவிந்ததால், குஷியான எஃப்எல்2 உரிமையாளர்கள் இருக்கும் சரக்குகளை எல்லாம் விற்று தீர்த்தனர்.
தமிழக அரசு
இதன் மூலம் திண்டுக்கல்லில் மட்டும் நேற்று ஒரே நாளில் 5 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. சென்னை மதுரை போன்ற பெருநகரங்களில் இது இன்னும் அதிகமாக இருக்கும் என்கின்றனர். ஏற்கனவே டாஸ்மாக் மதுபான பார்களுடன் மூடப்பட்டு இருக்கும் நிலையில் உரிமை பெற்ற ஒரு சில பார்கள் மட்டுமே இயங்கி வருகிறது. தற்போது பார்களுக்கான விதிகள் தளர்த்தப்பட்டு இருக்கும் நிலையில் டாஸ்மாக்கை மொத்தமாக பூட்டு போட்டு விட்டு எஃப்எல்2 உரிமையாளர்கள் ஏகபோகமாக சம்பாதிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
காவல்துறை
எஃப்எல்2 பார்களில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால் நேற்று அந்த விதி காற்றில் பறக்க விடப்பட்டு காவல்துறை பாதுகாப்போடு சட்டவிரோத மது விற்பனை நடந்தது வரலாற்றிலேயே முதன்முறை தான் என்கிறனர். தனியார் பார் உரிமையாளர்களுக்கு ஆதரவாக மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை செயல்படுகிறதா என்ற கேள்வி எழுவதாக குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர் டாஸ்மாக் பணியாளர்கள்.


Click it and Unblock the Notifications
