Vettaiyan OTT: வேட்டையன் ஓடிடி ரிலீஸ் தேதி உறுதியானது.. இந்த வீக் எண்ட்டை கொண்டாட ரசிகர்களே ரெடியா?
சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி நல்ல வசூல் கொடுத்த 'வேட்டையன்' திரைப்படம், நவம்பர் 8ம் தேதி முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!
இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்த படம், திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த பாடல்கள் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் இசையுடன் இணைந்து மனதில் நிற்கும் வகையில் அமைந்திருந்தது. மனசிலாயோ பாடல் இன்ஸ்டன்ட் ஹிட்டானது. இன்ஸ்டாகிராமிலும் ரீல்ஸ்களில் சுற்றி சுற்றி வந்தது. இப்போதும் சுற்றி வருகிறது.
சென்னை பெரு மழை காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. அல்லது, 400 கோடி வரை இந்த படம் ஈட்ட வாய்ப்பு இருந்தது. ஆனால் தற்போது 250 கோடி வரை வசூலித்ததாக கூறப்பட்டது. மழைக்கு பிறகு புக்மைஷோ தளத்தில் நாளொன்றுக்கு 70 ஆயிரம் வரை புக்கிங் சரிந்ததாக கூறப்பட்டது. ஆனால் அமரன் திரைப்படம் வார நாட்களிலும் தினசரி 2 லட்சத்திற்கு மேலே புக்கிங்கை பார்த்து வருகிறது. இந்த நிலையில்தான் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வேட்டையன், நவம்பர் 8ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

'வேட்டையன்' வெறும் ஆக்ஷன் படம் அல்ல. இது சமூக பிரச்சனைகளையும் கையாள்கிறது. குறிப்பாக, இந்தியாவின் கல்வி முறை மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் குறித்த விவாதங்களை ஞானவேலின் திரைக்கதை தூண்டியது. படத்தில் ரஜினிகாந்த், காவல் அதிகாரி அதியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது கடமையை உண்மையாக செய்யும் அதியன், சில தவறான முடிவுகளால் பெரும் துயரத்தை சந்திக்கிறார். நீதி மற்றும் பொறுப்புணர்வு போன்ற விஷயங்களை அலசும் இந்த படம், ஒரு சாதாரண ஆக்ஷன் திரைப்படத்தை விட அதிகமான விவாதத்தை தூண்டும் படமாக எடுக்க முற்பட்டது. எனவே வழக்கமான ரஜினிகாந்த்தின் பக்கா மசாலா படமாக இது அமையவில்லை.
பல விமர்சகர்கள் இந்த படத்தை பார்த்து கலவையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தாலும், இந்த படம் உலகம் முழுவதும் ரூ. 250 கோடி வசூல் செய்தது. இந்த வசூல் சாதனை, படத்தின் டீசன்டான வெற்றியை உறுதிப்படுத்தியது. இப்போது, அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாக உள்ள இந்த படம், ஓடிடி ரசிகர்களிடையே எந்தளவு வெற்றி பெறும் என தெரிந்துகொள்ள ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.













Click it and Unblock the Notifications