மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன்
சென்னை: தமிழக முதலமைச்சராகவும், தமிழக வெற்றிக் கழக தலைவராகவும் பிஸியான அரசியல் வாழ்க்கையை வாழ்ந்து வரும் விஜய் குறித்து, அவருடன் நடித்த நடிகை லக்ஷனா பகிர்ந்துள்ள ஒரு பழைய நினைவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக விஜய் தனது குடும்ப வாழ்க்கை குறித்து அதிகம் பேசாதவர். தனது மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா ஆகியோரை எப்போதும் ஊடக வெளிச்சத்தில் இருந்து விலக்கி வைத்திருப்பவர். ஆனால் தனது குழந்தைகள் மீது அவர் வைத்திருக்கும் பாசம் குறித்து அவருடன் நெருக்கமாக பழகியவர்கள் பலரும் அவ்வப்போது பகிர்ந்து வருவது வழக்கம்.
அந்த வகையில், "சிவகாசி" திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகை கிருஷ்ணா (லக்ஷனா) சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மறக்க முடியாத அந்த நாள்
அந்த பேட்டியில் பேசிய லக்ஷனா, "சிவகாசி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு காட்சிக்காக நானும் இருந்தேன். திடீரென என் அம்மா வந்து, விஜய் சார் உங்களை கேரவனுக்கு அழைக்கிறார் என்று சொன்னார்.
நானும் உள்ளே சென்றேன். அப்போது விஜய் சார் கையில் லட்டு வைத்திருந்தார். என்னைப் பார்த்ததும், 'லக்ஷனா... எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்' என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்.
வெள்ளிக்கிழமை பெண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் என்று தமிழ்நாட்டில் சொல்வார்கள் என்றும் அவர் கூறினார். அந்த நிமிடத்தில் உலகத்தையே வென்றுவிட்ட மனிதர் போல அவர் இருந்தார். அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக அவரை நான் பார்த்ததே இல்லை" என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
குடும்பத்தை பொக்கிஷமாக பார்த்த விஜய்
திரைத்துறையில் உச்சத்தில் இருந்த காலத்தில்கூட, குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்ற பெயர் விஜய்க்கு இருந்தது.
பல நிகழ்ச்சிகளில் தனது மகன் மற்றும் மகள் குறித்து அவர் மறைமுகமாக பேசியிருக்கிறார். ஒரு சில நிகழ்ச்சிகளில் தன்னுடைய மனைவியை அழைத்து சென்று இருக்கிறார். குழந்தைகள் வளர்வதை பார்ப்பது வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சிகளில் ஒன்று என்றும், பெற்றோர்களுக்கு குழந்தைகள்தான் உலகம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
குறிப்பாக தனது மகள் திவ்யா சாஷா பிறந்த காலகட்டத்தில் விஜய் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்ததாக அவரது நண்பர்கள் மற்றும் படக்குழுவினரும் பலமுறை கூறியுள்ளனர். ஏற்கனவே விஜய் உடன் பிறந்த அவருடைய தங்கை இறந்த பிறகு மீண்டும் தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது ரொம்பவே சந்தோஷம் என்று சில பேட்டிகளில் பேசியிருக்கிறார்.
அரசியலுக்கு பிறகு அதிகரித்த கவனம்
விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரது குடும்பம் குறித்த விவாதங்களும் சமூக வலைதளங்களில் அதிகரித்தன. தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப நிகழ்வுகள், குழந்தைகளின் பொது நிகழ்ச்சி பங்கேற்பு என பல விஷயங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன.
ஆனால் இதுபோன்ற சூழல்களிலும் தனது குடும்பம் குறித்து பெரும்பாலும் அமைதியே காத்து வருகிறார் விஜய்.
ரசிகர்களை நெகிழ வைத்த லக்ஷனாவின் பேட்டி
அரசியல், நிர்வாகம், பொது வாழ்க்கை என பல பொறுப்புகளுக்குள் இருக்கும் இன்றைய விஜய்யை பார்க்கும் ரசிகர்களுக்கு, மகள் பிறந்த செய்தியை லட்டு கொடுத்து கொண்டாடிய அந்த இளம் தந்தையின் நினைவு மிகவும் உணர்வுபூர்வமாக இருந்ததாக சமூக வலைதளங்களில் கருத்துகள் குவிந்து வருகின்றன.
"முதலமைச்சராக இருக்கும் விஜய்யை விட, மகள் பிறந்த சந்தோஷத்தில் திளைத்த அந்த தந்தை விஜய்யை பார்க்கவே அழகாக இருக்கிறது", "ஒரு தந்தையின் உண்மையான மகிழ்ச்சியை லக்ஷனா அழகாக நினைவுபடுத்தியுள்ளார்" என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications