என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...நிகழ்ச்சியை விட்டே கிளம்ப தயாரான நீயா நானா கோபிநாத்
விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் அம்மா பேச்சை கேட்டு இயங்கும் மனைவிகளும், கணவர்களும் எதிர் எதிரே அமர்ந்து பேசினர். ஒரு கட்டத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் மனம் நொந்து போனார்.
சென்னை: விவாத நிகழ்ச்சிகளில் நெறியாளர்களின் பங்கு முக்கியமானது. அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் தொகுத்து வழங்குவதை பார்க்கவே ஒரு ரசிகர்கள் கூட்டம் உண்டு. அவரே ஆளை விடுங்கடா சாமி என்று வெறுத்து போகும் அளவிற்கு நேற்றைய நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்படி என்னதான் பேசினார்கள் என்றால் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற சுவாரஸ்யமான தலைப்புதான்.
திருமணமாகி பல லிட்டில் பிரின்சஸ்கள் இன்னமும் அம்மா பெண்ணாகத்தான் இருக்கிறார்கள். அதே நேரத்தில் கணவர்கள் மட்டும் அம்மா பிள்ளைகளாக இருக்கக் கூடாது தனது கைப்பிடிக்குள் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதை மையமாக வைத்தே இந்த வாரம் நீயா நானா விவாத களம் அமைந்தது.
விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் பல டாபிக்குகள், பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் கூட பேசு பொருளாக மாறும்.
இன்றைய கால கட்டத்திற்கு ஏற்ற தலைப்புகளை எடுத்துக்கொண்டு விவாதிப்பார்கள். நகைக்சுவையாக, சென்டிமெண்ட் ஆக, சில நேரங்களில் அனல் பறக்கும் விவாதங்கள் கூட நடைபெறும். விவாத நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும். சில நேரங்களில் மீம்ஸ் ஆக பகிரப்படும்.
இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பக்கம் திருமணத்திற்கு பிறகு அம்மா பேச்சை கேட்டு செயல்படும் பெண்களும், இன்னொரு பக்கம் அந்த பெண்களின் கணவர்களும் அமர்ந்து பேசினர். சில பெண்கள் திருமணத்திற்குப் பிறகு கூட தனது கணவர்கள், தனது குடும்பம் என்று இல்லாமல் தொட்டதற்கு எல்லாம் அம்மாவிடம் போனை போட்டு பேசி முடிவு எடுக்கிறார்கள். அதுவும் சில பெண்கள் 4 மணி நேரம் கூட பேசுவதாக சொன்னார்கள். அதைக் கேட்டு கோபிநாத் கொஞ்சம் டயர்ட் ஆகி விட்டார். அப்படி என்னதான் பேசுவீங்க என்று கேட்டால், நாங்க கல்யாணம் ஆகி 13 வருடம் ஆகிறது. நாங்கள் எடுக்கும் முடிவு சொதப்பி விடும் எனவேதான் அம்மா பேச்சை கேட்டு முடிவு எடுக்கிறோம் என்று கூறினர் பெண்கள்.
மருமகன் என்ன உடை அணியவேண்டும் என்று கூட மாமியார்கள் முடிவு எடுக்கிறார்கள். அதே நேரத்தில் தனது மாமியார் சொல்வதை கேட்க மருமகள்கள் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. என்னுடைய உடை விசயத்தில் அவர்கள் தலையிடுகிறார்கள். பார்மலாக உடை அணிந்து கொண்டு வர சொல்கிறார்கள் என்றார். அதற்கு கோபிநாத், இதே போல உங்க மாமியார், உங்களை புடவை கட்டிக்கொண்டு வரச்சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா என்று பெண்ணிடம் கேட்டதற்கு, நான் கேட்க மாட்டேன் என்கிறார்.இது என்ன எங்களுக்கு வந்தா ரத்தம்.. உங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்று வடிவேலு சொன்னது போலத்தானே இருக்கு.
அம்மாவின் வீட்டிற்கு இரண்டு தெரு தள்ளி வீடு எடுத்து தங்கிக் கொள்கிறார்கள். அதற்குப் பெயர்தான் தனிக்குடித்தனமா என்று கோபி நாத் கேட் அதற்கு அந்த பெண் சிரிக்க கணவர்கள் பாடு பெரும்பாடுதான்.
எந்த விசயமாக இருந்தாலும் தனது மனைவி மற்றும் மாமியார் இணைந்து முடிவு எடுப்பதாக கணவர் தெரிவிக்கிறார். இதற்கு பதில் சொல்லும் அந்த மனைவி, "இப்ப நம்ம வீட்ல இருக்கேன்னா எல்லாரோட ஒப்பீனியனும் முக்கியமில்ல சார்" என பதில் தருகிறார்.
அதற்கு கோபிநாத் அந்த பெண்ணிடம், "நீங்க பிடிச்ச மாதிரி ஒரு டிரஸ் பண்ணி ஒரு கல்யாணத்துக்காக ரெடியா இருக்கீங்க. உங்க கணவர் ஒண்ணுமே சொல்லல, ஆனா உங்க மாமியார் அப்படியே கிராஸ் பண்ற போது உங்க புடவையை பார்த்துட்டாங்க. முகூர்த்தத்துக்கு எடுத்த பச்சை கலர் புடவையை கட்ட சொல்லுன்னு சொல்லிட்டாங்க. நீங்க அந்த மாதிரி மாத்தி கட்டிப்பீங்களா?" என கேட்கிறார்.
அதெப்படி முடியும்.. நம்ம அதுக்காக எல்லாம் பிளான் பண்ணி முன்னாடியே ரெடி பண்ணி தைச்சு வச்சிருக்கோம். திடீர்ன்னு அவங்க சொல்றாங்களேன்னு எப்படி சார் மாற்ற முடியும்?" என்று கேட்கிறார்.

இதனைக் கேட்ட கோபி, "அது எப்படிங்க கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாம பேசுறீங்க. அப்புறம் அவங்க மட்டும் ஏன் அதை செய்யணும்" என்று சொன்னார்.
"அவங்க ஒரு உரிமைல சொல்றாங்க" என அந்த பெண் கூற, "உங்க மாமியாரும் அதே மாதிரி தானே சொல்றாங்க. அது தப்புன்னா அப்ப இது மட்டும் எப்படி சரி?. நான் விலகிக்கிறேன் டா. என்னால முடியாதுடா"முதன் முறையாக என்கிறார் கோபிநாத்.
இதே போல மற்ற சில பெண்களும் தாங்கள் எதிர்பார்ப்பது சரியானது என்றும் கணவரின் குடும்பத்தினர் எதிர்பார்ப்பது சரியில்லை என்றும் பேசினர். தனது அம்மா சொல்வதுதான் சரி..மாமியார் சொல்வது சரியில்லை என்பது போலத்தான் பலரும் பேசினர். இதைக்கேட்ட கோபிநாத் ஒரு கட்டத்தில் "நான் ரிட்டயர் ஆகிறேன். என்னால முடியல" என கூறிக்கொண்டு கிளம்ப தயாராகிறார். முதன் முறையாக ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளரையே வெளியேற்றிய நிகழ்ச்சி இதுதான்மா என்று சொல்லி சிரிக்கிறார் கோபிநாத்.
இந்த நிகழ்ச்சி விவாதத்திற்காக மட்டுமல்ல..இன்றைக்கும் பல வீடுகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதைத்தான் எடுத்துக்காட்டியுள்ளது இந்த நிகழ்ச்சி.












Click it and Unblock the Notifications