பிக் பாஸில் இருந்து விலகிய கமல்ஹாசன் பற்றி விஜய் டிவி திடீர் பதிவு.. கேள்விகளுக்கு கிடைத்த விடை
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் எட்டாவது சீசனில் இருந்து விலகப்போவதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில் சில தினங்கள் கழித்து கமல் குறித்து விஜய் டிவி தரப்பில் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டிருக்கிறது.
விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக கமல்ஹாசனும் இருக்கிறார். உலக நாயகனாக பலரால் போற்றப்படும் கமல்ஹாசன் முதல் முறையாக சின்ன திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய குறும்படம் மற்றும் உங்களில் நான், அகம் டிவி வழியே அகத்திற்குள் போன்ற பல வார்த்தைகள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

ஏழு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வந்த நிலையில் எட்டாவது சீசனில் தான் ஏற்கனவே கமிட்டான திரைப்படங்களில் பிஸியாக இருப்பதால் தன்னால் இந்த முறை இந்த நிகழ்ச்சியில் தொகுத்து வழங்க முடியாது இதனால் சிறிது இடைவெளி எடுத்துக் கொள்கிறேன் என்று சில தினங்களுக்கு முன்பு கமல்ஹாசன் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். இது பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்படும் பொருளாக இருக்கிறது.
கமல் இல்லாததால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்குமா? இல்லையா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதோடு அப்படியே நடந்தாலும் இந்த நிகழ்ச்சியில் யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்விகளும் இருக்கிறது. இந்த நிலையில் விஜய் டிவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று கமல் பற்றி ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறது.

அதில், அன்புள்ள கமல் சார்... கடந்த ஏழு ஆண்டுகளாக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உங்கள் அசாதாரண பங்களிப்பிற்கு ஸ்டார் விஜய்யின் ஒட்டுமொத்த குழு சார்பாக எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, கவர்ச்சியான இருப்பு மற்றும் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவருடைய உண்மையான ஈடுபாடு ஆகியவை நிகழ்ச்சியை மகத்தான வெற்றி அடையச் செய்ததில் முக்கிய பங்காற்றியுள்ளன.
பார்வையாளர்களுடன் இணைவதற்கு போட்டியாளர்களில் சிறந்தவர்களை வெளிப்படுத்துவதற்கு உங்களின் திறமை பிக்பாஸ் தமிழை இந்தியாவின் முதன்மையான ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றாக தனித்து நிற்க வைத்துள்ளது. நிகழ்ச்சிக்கு நீங்கள் கொண்டுவந்த ஆர்வமும் ஆற்றலும் நம் அனைவரின் மீதும் அழியாத முத்திரையை பதித்துள்ளது.
உங்களின் முந்தைய சினிமா கடமைகள் காரணமாக ஓய்வு எடுப்பதற்கான உங்கள் முடிவால் நாங்கள் வருத்தமடைந்தாலும், உங்கள் முயற்சிகளை புரிந்து கொண்டு ஆதரிக்கிறோம். உங்கள் இருப்பு பெரிதும் தவற விடப்படும் ஆனால் பிக் பாஸ் தமிழில் தொகுப்பாளராக உங்கள் மரபு எங்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
உங்கள் சினிமா முயற்சிகள் மற்றும் உங்கள் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இந்த பிக் பாஸ் தமிழில் இந்த சீசன் நீங்கள் நிறுவிய வலுவான அடித்தளத்தின் மீது தொடர்ந்து செழித்து வளரும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை என்பதால் நிகழ்ச்சி நடக்குமா இல்லையா என்று எழும்பி வந்த கேள்விகளுக்கு ஒரு வழியாக இப்போது விடை கிடைத்திருக்கிறது. கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நடக்கும் என்று சேனல் தரப்பில் இருந்து கூறப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications