Aryan Movie Review: ராட்சசன் போல இல்ல வேற விதம்! விஷ்ணு விஷாலின் 'ஆர்யன்’ எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
சென்னை: (Aryan Movie Review) நடிகர் விஷ்ணு விஷால் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் போலீஸ் உடையில், கிரைம் திரில்லர் பின்னணியில் நடித்துள்ள 'ஆர்யன்' திரைப்படம் இன்று (அக்டோபர் 31) திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளது. அறிமுக இயக்குநர் பிரவீன் கே எடுத்திருக்கும் இந்தப் படம், கிரைம் திரில்லர் கதைகளில் சற்று வித்தியாசமான அனுபவத்தைக் கொடுப்பதாகப் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

விஷ்ணு விஷாலின் ரீ-என்ட்ரி
'ராட்சசன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, விஷ்ணு விஷால் மீண்டும் போலீஸ் அதிகாரியாக (நம்பி என்றக் கதாபாத்திரம்) நடித்திருக்கிறார். 'லால் சலாம்' படத்திற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து இந்தப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தலைகாட்டியிருக்கும் விஷ்ணு விஷால், இந்தப் படத்திற்காகத் தனது உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரபலமான கூட்டணி
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஜிப்ரான் இசையமைக்க, விஷ்ணு விஷால் ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இயக்குநர் மனு ஆனந்த் இந்தப் படத்துக்கு இணை எழுத்தாளராகப் பணியாற்றியிருக்கிறார். தெலுங்கில் நவம்பர் 7 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
ட்விஸ்ட்டுகளின் சரவெடி
'ஆர்யன்' திரைப்படம், ஒரு இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லராக 800 திரைகளில் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விமர்சனங்கள், படத்தின் விறுவிறுப்பைப் பற்றிப் பேசுகின்றன. படத்தை பார்த்தவர்கள், முதல் பாதியில் கதைக்குள் நேரடியாகச் சென்ற விதம் செம்மையாக இருந்ததாகக் கூறியுள்ளனர். திரில்லர், ஆக்ஷன், சென்டிமென்ட் எனப் பக்கா கமர்ஷியல் படமாக நகரும் முதல் பாதியில், அடுத்தடுத்து நடக்கும் மர்மங்களால், வினாடிக்கு வினாடி என்ன நடக்கும் என்ற ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறார் இயக்குநர் பிரவீன் கே.
செல்வராகவனின் பங்கு
எடுத்ததுமே திரையில் தோன்றும் இயக்குநர் செல்வராகவன் தான் படத்தின் 'கீ ரோல்' (Key Role). அவருடைய கேரக்டரை வடிவமைத்த விதம் சூப்பர் என்றும், அவர் ஒவ்வொரு காட்சியையும் தனது புத்திசாலித்தனத்தால் சொந்தமாக்கியுள்ளார் என்றும் விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.
இரண்டாம் பாதி
இரண்டாம் பாதியில், எதற்காகக் கொலை நடக்கிறது என்ற குழப்பம் இருந்தாலும், அது நடக்கும் விதம் மற்றும் அதிலுள்ள டிவிஸ்ட்டுகள் யாரும் யூகிக்க முடியாத வகையில் பதற்றமாகவே இருக்கிறது. கொலைகளையும், கொலையாளிகளையும் இணைத்த விதம் செம்மையாக இருந்ததாகப் பாராட்டுகள் குவிந்துள்ளன.

ராட்சசன் எதிர்பார்ப்பு வேண்டாம்
'ஆர்யன்' திரைப்படத்தைப் பார்த்தப் பலரும், இது 'ராட்சசன்' படத்தின் வெற்றியைப் போல் இருக்குமா என்றுக் கேள்வி எழுப்பியுள்ளனர். "ராட்சசன் படத்தை போல் இருக்கும் என யாரும் எதிர்பார்ப்புடன் போக வேண்டாம். இது முற்றிலும் அதைவிட வித்தியாசமான கதை" என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். 'ஆர்யன்' ஒரு ஷார்ப்பான, உணர்ச்சிபூர்வமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் வித்தியாசமான கிரைம் திரில்லர் என்றும், வலுவான எழுத்து மற்றும் சக்திவாய்ந்த நடிப்பால் படம் தனித்து நிற்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆழமான கருத்து
படம் பேசும் கருத்து ஆழமானது, சிந்திக்க வேண்டியது என்றும், கிளைமேக்ஸில் விஷ்ணு விஷால் பேசும் ஒரு வசனம் செம்மையாக இருந்ததாகவும் பதிவுகள் தெரிவிக்கின்றன. ராட்சசன் படத்தின் சாயல் இல்லை; ஆனால், த்ரில்லர் கதையை விரும்பும் அனைவரையும் இந்த 'ஆர்யன்' நிச்சயம் திருப்திபடுத்தும் என்றும், ஸ்பாய்லர்கள் கசிவதற்கு முன் படத்தை தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications