அரசியல் பேச்சு ஒருபக்கம்... தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து தனுஷ் செய்த காரியம்!
சென்னை: தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு இப்போது சினிமா வட்டாரத்தில் மட்டும் இல்லாமல், பொதுவாகவே பேசப்படும் விஷயமாக மாறிவிட்டது. கட்சி தொடங்கப் போகிறார், அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார், ரசிகர் மன்றத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப் போகிறார் என்று பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் தனுஷ் செய்யும் ஒவ்வொரு விஷயமும் கொஞ்சம் கூடுதல் கவனத்தை பெறுவதும் இயல்புதான். அப்படித்தான் இப்போது தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜை தனுஷ் நேரில் அழைத்து பாராட்டியிருப்பதும் கவனம் பெற்றிருக்கிறது.
தடகள வீராங்கனை
சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வித்யா ராம்ராஜ் 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். மகளிருக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம், கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி, 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலம் என 3 பதக்கங்களை அவர் வென்றிருக்கிறார். அதிலும் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் ஓடி, பி.டி. உஷாவின் நீண்ட கால தேசிய சாதனையையும் முறியடித்தார்.

சாதித்த வித்யா ராம்ராஜ்
இதனால் நாடு திரும்பிய வித்யா ராம்ராஜுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழக அரசும் அவரை பாராட்டியதுடன், மூன்று பதக்கங்களுக்காக ரூ.1.55 கோடி ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான் தனுஷும் வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார்.
வெளியில் இருந்து பார்த்தால் இது ஒரு சாதனையாளரை பாராட்டும் ஒரு சாதாரண விஷயமாகத்தான் தெரியும். அதில் எந்த அரசியலும் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் தனுஷை சுற்றி கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் அரசியல் பேச்சுகளை வைத்துப் பார்த்தால், இந்தச் சந்திப்பும் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது. காரணம், தனுஷ் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வி இருந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

தனுஷின் செயல்கள்
அவருடைய ரசிகர் மன்ற நடவடிக்கைகள், ரசிகர்களை சந்திப்பது, நற்பணி விஷயங்களில் கவனம் செலுத்துவது என தனுஷின் செயல்பாடுகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன. அதோடு கட்சி தொடங்கப் போகிறார், கட்சிப் பெயர் குறித்து ஆலோசனை நடக்கிறது என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் ஒரு சாதனை படைத்த தமிழக வீராங்கனையை அழைத்து நேரில் பாராட்டுகிறார் என்றால், இதுபோன்ற விஷயங்களும் இயல்பாகவே ரசிகர்கள் மத்தியில் பேசப்படும். அதிலும் வித்யா ராம்ராஜின் பின்னணியை பார்த்தால் இந்தச் சந்திப்பு இன்னும் அழகாக இருக்கிறது.
இன்று ஆசிய அளவில் பதக்கம் வென்று நிற்கும் வித்யா, இந்த இடத்தை அவ்வளவு சுலபமாக அடைந்துவிடவில்லை. அவரது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை கடினமாக இருந்த காலத்தில், ஓட்டுநராக இருந்த அவரது தந்தை மகளுக்கான ஸ்பைக் ஷூ வாங்குவதற்காக சில நாட்கள் சாப்பிடாமல் பணம் சேர்த்ததாக வித்யா உருக்கமாக கூறியிருந்தார். அந்தத் தந்தையின் தியாகத்துக்காக தனது வெற்றியை அர்ப்பணிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட ஒரு வீராங்கனையை தனுஷ் நேரில் அழைத்து பாராட்டியிருப்பது நிச்சயம் நல்ல விஷயம்தான்.

தனுஷின் அரசியல் செயல்பாடு
அதுவும் தனுஷ் அரசியலுக்கு வரும்போது அவர் சினிமா ரசிகர்களை மட்டும் நம்பப் போகிறாரா, அல்லது விளையாட்டு, கல்வி, சமூக நலன் போன்ற விஷயங்களிலும் தன்னுடைய செயல்பாடுகளை விரிவுபடுத்தப் போகிறாரா என்ற கேள்விகளும் இனிமேல் எழும். இப்போதைக்கு தனுஷ் தரப்பிலிருந்து அரசியல் கட்சி குறித்த முழுமையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. ஆனாலும் இந்த ஒரு சந்திப்பை வைத்து அரசியல் கணக்கு போடபட்டு வருகிறது.




Click it and Unblock the Notifications
