பொண்டாட்டியோட அண்ணன் மனைவிதான்.. ஆனால் அண்ணி! அது எப்படி திமிங்கலம்?
சென்னை: "குருவாயூர் அம்பல நடையில்" (Guruvayoor Ambalanadayil) திரைப்படம் பார்த்தவர்களுக்கு காமெடி காட்சிகளால் வயிறு வலித்திருந்தாலும், ஆமா.. இவருக்கு இவர் என்ன உறவு என்ற கேள்வி கடைசியில் தலையை பிய்த்திருக்கும். ஆமாம்.. விபின் தாஸ் இயக்கத்தில், பிரித்விராஜ், நிகிலா விமல், பசில் ஜோசப், அனஸ்வரா ராஜன், யோகி பாபு, ரேகா, ஜெகதீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் மே மாதம் பெரியத் திரையிலும், இப்போது ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் காணக் கிடைத்துள்ள குருவாயூர் அம்பல நடையில் பேசும் உறவு முறை பற்றிதான் பேசுகிறோம்.
முதலில் கதை என்ன என்று ஒரு ரவுண்டு பார்த்துவிடுவோம். திருமணத்திற்கு தயாராகும் பசில் ஜோசப், தனது வருங்கால மனைவியின் அண்ணனான பிருத்திவிராஜின் மனைவியை பற்றி (நிகிலா விமல்) தெரிய வந்ததும் துடித்துப்போகிறார். ஏனெனில் அவர் பசில் ஜோசப்பால் உயிருக்கு உயிராக காதலிக்கப்பட்ட காதலியாகும்.
இந்த உண்மையை மறைக்க முயற்சிக்கிறார், ஆனால் திருமணத்தையும் நிறுத்தப் பார்க்கிறார் பசில் ஜோசப். இன்னொரு பக்கம் லேட்டாக தெரிந்து கொண்ட பிருத்திவிராஜும் திருமணத்தை நிறுத்தப் பார்க்கிறார். கூடுதலாக தனது தங்கை கணவராகப்போகும் பசில் ஜோசப் மற்றும் தனது மனைவி இப்போதும் லவ் பண்ணுவதாக வேறு நினைத்து இன்னும் கடுப்பாகிறார்.

உண்மையை சொல்லாமல் திருமணத்தை நிறுத்த இருவரும் தனித்தனியாக போடும் டிராமாக்களும், இவர்களுக்கு எதிராகத்தான் போய் முடிவதெல்லாம் வெடி சிரிப்பு ரகம். இதற்கு இடையே யோகி பாபு என்ட்ரியும் உள்ளது. அவரும் ஒரு பக்கம் கல்யாணத்தை நிறுத்த ப்ளான் போட்டு "சீக்ரெட்டாக" காய் நகர்த்துகிறார். இவர் எதற்காக இதெல்லாம் பண்ணனும் என்பதற்கு, குழந்தைகளிடம் விளக்கி சொல்ல முடியாத ஒரு பலான பிளாஷ் பேக்கும் உள்ளது. ஆக மொத்தம், சுந்தர்.சி படம் மாதிரி, கிளைமேக்சை நோக்கி படம் நெருங்கும்போது கும்பல் கும்பலாக குழப்பம் ஏற்படுத்துகிறார்கள்.
பின்னர் என்ன நடக்கிறது? திருமணம் நடந்ததா, பிருத்திவிராஜ் முடிவுதான் என்ன என்பதை படத்தில் சுவாரஸ்யமாக காட்டியுள்ளனர். குருவாயூர் அம்பல நடையில் என்ற படத் தலைப்புக்கு கிளைமேக்சில் பக்காவாக நியாயம் சேர்த்துள்ளனர்.
"குருவாயூர் அம்பல நடையில்" திரைப்படம் காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள் போன்ற பல அம்சங்களைக் கொண்டிருப்பதால், ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. பிரித்விராஜ் மற்றும் பசில் ஜோசப் இடையேயான கெமிஸ்ட்ரி படத்திற்கு ஒரு பலம். மைத்துனர் உறவு அந்த அளவுக்கு ஆரம்பத்தில் சுவாரசியப்படுத்தப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தை தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஓடிடியில் காணலாம்.
அதேநேரம், படம் பார்க்கும்போதும், பார்த்து முடித்த பிறகும், ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் மட்டும் தீரவேயில்லை. அது என்ன தெரியுமா, படம் முழுக்க பிருத்திவிராஜை மச்சான், அத்தான், மைத்துனர் இப்படி ஏதாவது ஒரு வார்த்தையை வைத்து கூப்பிடாத பசில் ஜோசப், அண்ணன் என அழைக்கிறார். மனைவியின், அண்ணனின் மனைவி என்றால், பசிலுக்கு அக்கா முறை வருமல்லவா. ஆனால் நிகிலா விமல் யார் என்று ஆரம்பத்தில், தெரியாத வரையில், எல்லோரிடமும் அண்ணி அண்ணி என்றுதான் சொல்லி வருகிறது பசில் கேரக்டர். உங்களுக்கு ஏதாவது புரியுதா?












Click it and Unblock the Notifications