சபரிமலையில் இந்த ஆண்டில் வருகை தந்த பக்தர்கள் எவ்வளவு தெரியுமா?.. வசூலிலும் புதிய சாதனை
திருவனந்தபுரம்: சபரிமலை சீசன் காரணமாக நாள் தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இந்தாண்டில் தற்போது வரை 22 லட்சம் பக்தர்கள் சபரிமலை சென்றுள்ளனர். இது கடந்தாண்டை விட 4 லட்சம் அதிகம். அதேபோல வருமானமும் கடந்தாண்டை விட அதிகரித்து ரூ.163 கோடி வசூலாகியுள்ளதாக தேவஸ்தானம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரசித்தி பெற்ற கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 41 நாள்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன்படி இந்தாண்டில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி சபரிமலை மண்டல பூஜை தொடங்கியது. இதையொட்டி பக்தர்களுக்காக நவம்பர் 15 ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 18 ஆம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது. நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு ஐயப்பன் சிலைக்கு நெய் அபிஷேகம் செய்து மண்டல பூஜையை தொடங்கப்பட்டது.

இதற்காக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். மேலும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசிப்பதற்காக சபரிமலைக்கு படை எடுத்து வருகின்றனர். இதற்காக சபரிமலை தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு ஆங்காங்கே இருக்கைகள் வைக்கப்பட்டு, மூலிகை குடிநீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
மழை, வெயில் என்று காலநிலை எப்படி மாறினாலும் பக்தர்கள் வருகை குறையவில்லை. ஒவ்வொரு நாளும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கனமழை காரணமாக பக்தர்கள் இரவு நேரத்தில் மலைப் பகுதியில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து தினசரி சராசரியாக 70,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கேரளா உயர் நீதிமன்றம் சபரிமலை தேவஸ்தானம் நிர்வாகத்துக்கு சில முக்கிய உத்தரவுகளை வழங்கியது. “பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் அரசியல் மற்றும் சினிமா பிரபலம் உள்ளிட்ட யாருக்காகவும் சிறப்பு தரிசனம் அனுமதிக்க கூடாது. பக்தர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.” என்று கேரளா உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில் சபரிமலை தேவஸ்தான அதிகாரிகளின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நவம்பர் 16 ஆம் முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரையிலான 29 நாட்களில் சபரிமலையில் 22.67 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். கடந்தாண்டை விட 4,51,043 பக்தர்கள் கூடுதலாக சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த காலகட்டத்தில் வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்தாண்டை விட ரூ.22.76 கோடி அதிகரித்து, ரூ.163.89 கோடி வசூலாகியுள்ளது.
அரவணை பாயாசம் விற்பனை மூலம் தேவஸ்தானத்துக்கு ரூ.82.67 கோடி வருவாயும், உண்டியல் மூலம் ரூ.52.27 கோடியும் வருவாயும் வந்துள்ளது. இந்த சீசன் முடிவதற்குள் சபரிமலைக்கு மேலும் 15 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் பக்தர்களுக்கு சுமூகமான சாமி தரிசனத்தை சாத்தியமாக்கிய அனைத்து அதிகாரிகளுக்கும், அறங்காவலர் குழு ஒருங்கிணைப்பாளர்களுக்கும் எங்களின் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பக்தர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழ்ங்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.” என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications