Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

24 இடங்களில் வெட்டு! வில்லன் பெயரிலும் மாற்றம்! நாளை புதிதாக ரிலீஸாகும் எம்புரான்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: குஜராத் கலவரத்தை குறிப்பிட்டு படத்தின் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதால் மோகன்லால் நடித்த எம்புரான் படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் 24 இடங்களில் காட்சிகளை நீக்கம் செய்வதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் வில்லன் பெயரையும் மாற்றி அதன் புதிய பிரதி நாளை ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்புரான் படத்தில் முல்லை பெரியாறு அணை தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் தமிழகம் சார்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. மேலும் விவசாய அமைப்புகளும் பட தயாரிப்பாளரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாளை போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

empuraan

மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் நடித்திருக்கும் படம் எல்2: எம்புரான். இந்த படம் மார்ச் 27ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் முதல்வராக இருந்த போது கடந்த 2002 ஆம் ஆண்டு அங்கு நடந்த கலவரத்தை குறித்து பேசுவதாக கூறி வலதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்துத்துவ அமைப்பு

இதையடுத்து இந்துத்துவ அமைப்பினரின் எதிர்ப்பை தொடர்ந்து எம்புரான் படத்திற்கு 17 இடங்களில் காட்சிகள் நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் எம்புரான் சர்ச்சை தொடர்பாக நடிகர் மோகன்லால் இதுகுவருத்தமும் தெரிவித்திருந்தார்.

லூசிபர் படம்

இதுகுறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் மோகன்லால் கூறியிருப்பதாவது: லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தில் சில அரசியல், சமூக கருத்துகள் அன்புக்குரியவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதை அறிந்தேன்.

வருத்தம் தெரிவித்த மோகன்லால்

ஒரு கலைஞனாக எனது எந்த படமும் எந்த அரசியல் உள்நோக்கம், சித்தாந்தம் அல்லது பிரிவினர் மீது வெறுப்புணர்வைக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவது எனது கடமை. அன்புக்குரியவர்களின் மன வேதனைக்காக நானும் தம்புரான் குழுவினரும் வருந்துகிறோம்.

வாழ்க்கை

இந்த படத்திலிருந்து இது போன்ற காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளோம். கடந்த 4 தசாப்தங்களாக எனது திரையுலக வாழ்க்கையை உங்களில் ஒருவராக வாழ்ந்து வருகிறேன். உங்கள் அன்பும் நம்பிக்கையும் மட்டுமே எனது பலம் என தெரிவித்திருந்தார்.

பிருத்விராஜின் தாய்

அது போல் பிருத்விராஜின் தாய், தனது மகனை பலிகடாவாக்கப் பார்க்கிறார்கள் என வெளிப்படையாக குற்றம்சாட்டிருந்தார். மேலும் இந்த படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்து நேரடியாக சொல்லப்படாவிட்டாலும் நம்பள்ளி அணை என்ற பெயரிட்டு அது குறித்து தகவல்கள் பிரச்சினைகள் வசனங்களாக வந்துள்ளதால் தமிழகத்திலும் இந்த பட வசனங்களுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

Take a Poll

வைகை பாசன விவசாய அமைப்பு ஆர்ப்பாட்டம்

வைகை பாசன விவசாய அமைப்பு நாளை போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த எம்புரான் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தனது அறிக்கையில், நாகர்கோவில், தென்காசி, கம்பம், போடி, பொள்ளாச்சி, கோவை என தெற்கில் இருந்து வடக்கு வரை கணிசமாக தமிழ் நிலத்துடன் தொழில், சுற்றுலா ரீதியில் கேரள மாநிலம் தொடர்பில் இருக்கிறது. இந்த எல்லைப் பகுதிகளில் இரு மாநில மக்களுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. உயர் கல்விக்காகவும், வேலைக்காகவும், மலையாளிகள் இடம் பெயரும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

சகோதரத்துடன்

இப்படி சகோதரத்துடன் தமிழர்களும், கணிசமான மலையாளிகளும் இருந்து வரும் நிலையில், மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து தமிழர்களை கொச்சைப்படுத்தி வருவது என்பது கடும் கண்டனத்துக்குரியது.

தமிழின வெறுப்பு

மலையாள இயக்குனர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும், சென்னையில் திரைப்பட தொழிலை கற்றுக் கொண்டு, அவர்களின் சொந்த மாநிலத்திற்கு வண்டி ஏறும் போது, கூடவே தமிழின வெறுப்பையும் சுமந்துக் கொண்டே செல்கின்றனர். இதன் காரணமாகவே, அவர்கள் பணியாற்றக்கூடிய மலையாள திரைப்படங்களில் தமிழின வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர்.

ஈழத் தமிழர்கள்

மலையாள இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கிய "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" காதல் திரைப்படத்தில், இலங்கை அமைதிப்படையை ஆதரித்தும், ஈழப் போராளிகளை கொச்சைப்படுத்தும் காட்சி சம்மந்தமே இல்லாமல் திணிக்கப்பட்டிருந்தது.

டேம் 999

தென் தமிழக விவசாயிகளின் சோற்றில் மண்ணை போடும் விதமாக "முல்லை பெரியாறு அணையை உடைக்க வேண்டும்" என்கிற பிரச்சாரத்தை வலியுறுத்தி சோஹன் ராய் என்ற
மலையாளி 'டேம் 999' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இன அழிப்பு

தமிழர்களை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட மலையாள இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கிய 'இனம்', ஈழத்தில் தமிழர்கள் இன அழிப்பை நியாயப்படுத்திய 'மெட்ராஸ் கபே' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் சான்றாக இருக்கிறது.

மோகன்லால்

இத்திரைப்படங்களின் வரிசையில், கேரளாவின் பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான எம்புரான் திரைப்படத்தில், முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றிருக்கிறது.

பிருத்விராஜ்

இத்திரைப்படத்தின் இயக்குனர் நடிகர் பிருதிவிராஜ், படத்திற்கும் அதன் போக்கிற்கும் தொடர்பே இல்லாமல், முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வன்மத்தை காட்டியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

நெடும்பள்ளி டேம்

குறிப்பாக, நெடும்பள்ளி டேம் என்று மாற்று பெயரிட்டு, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கி இருந்த திருவிதாங்கூர் ராஜா, 999 வருடங்களுக்கு இனாமாக எழுதிக் கொடுத்தாராம். எழுதி வாங்கிய பிரிட்டிஷ்காரன் போய்விட்டானாம். மன்னராட்சியும் போய் விட்டதாம். ஆனாலும் அந்த ஆபத்து மக்களை காவு வாங்க காத்து நிற்பதாக நடிகை மஞ்சு வாரியர் பேசும் வசனம் தமிழின காழ்ப்புணர்ச்சியின் உச்சம்.

செக் டேம்

மேலும், இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்கள பலிவாங்குற அணையை, அதாவது முல்லைப் பெரியாறு அணையை, குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும். அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை. அணையே இல்லாமல் இருந்தால் தான் சரி என்பன போன்ற வசனங்களும் படத்தில் இடம்பெறுகின்றன.

நல்லுறவை கெடுக்கும்

தமிழின வெறுப்பை உமிழும் இதுபோன்ற திரைப்படங்கள், தமிழ்நாடு, கேரள மாநில மக்களிடையே நீடித்து வரும் நல்லுறவை சீர்குழைத்து, இருமாநில உறவை கெடுக்கும்.

எம்புரான் திரைப்படம்

எனவே, எம்புரான் திரைப்படத்தில், முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும். தொடர்ந்து அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தை கொச்சைப்படுத்தி வரும் போக்கை மலையாள திரையுலகம் கைவிட வேண்டும் என தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் எச்சரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

நாம் தமிழர் கட்சி

அது போல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் அவதூறு பரப்புரை காட்சிகளை எம்புரான் திரைப்படக் குழு நீக்க வேண்டும். மோகன்லால் உள்ளிட்ட கேரளத்தின் பெரும் கலைஞர்களே தமிழகத்தில் சொத்துக்கள் வாங்கி நிம்மதியாக வாழ்ந்து வரும் நிலையில் தமிழர்கள் ஏதோ மலையாள மக்களுக்கு எதிரிகள் போலவும், தமிழ்நாடு கேரளாவை அழிக்க முயல்வது போலவும் படத்தில் வன்மத்துடன் சித்தரிப்பது இனப்பகையைத் தூண்டி, இரு மாநில மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்த முனையும் திட்டமிட்ட சதியாகும். இவ்வாறு சீமான தெரிவித்துள்ளார்.

குஜராத் கலவரம்

இந்த நிலையில் இந்த படத்தில் இந்திய ராணுவம் குறித்தும் குஜராத் கலவரம் குறித்து வசனங்கள் இடம் பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பாஜக சார்பில் நிர்வாகி வி.வி.விஜேஷ் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி சி.எஸ். தியாஸ் விசாரணை நடத்தினார்.

எம்புரான் படத்தை பார்த்தீங்களா?

அப்போது அவர் எம்புரான் படத்தை நீங்கள் பார்த்தீர்களா? அதில் உங்களுக்கு ஆட்சேபணைக்குரிய விஷயம் என்ன இருக்கிறது? இந்த படத்திற்கு சென்சார் வாரியம் சான்று கொடுத்துள்ளதுதானே? எனக்கு உங்கள் மீது சந்தேகமாக இருக்கிறது. இந்த படத்தை பார்த்ததால் எந்த இடத்திலாவது வன்முறை நடந்ததாக ஏதாவது ஒரு புகாரை காட்டுங்கள் பார்ப்போம். எல்லாமே விளம்பர நோக்கத்துடன் கொடுக்கப்படும் புகார்கள் என நீதிபதி கடுமையாக கண்டனங்களை தெரிவித்து எம்புரான் படத்திற்கு தடை விதிக்க முடியாது என்றார்.

இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் தாமாக முன்வந்து 24 காட்சிகளை நீக்குவதாக அறிவித்துள்ளது. சென்சார் போர்டின் அறிவுரையின் பெயரில் இந்த மாற்றங்கள் செய்யப்படுகிறது. படத்தில் அமைச்சர் சுரேஷ் கோபியின் பெயர் நீக்கப்படுகிறது. அது போல் தேசிய புலனாய்வு முகமையின் பெயர் மியூட் செய்யப்படுகிறது.

பல்ராஜ் பஜ்ரங்கி என்ற வில்லனின் பெயரை பல்தேவ் என மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வன்முறை காட்சிகளும் தவிர்க்கப்படுகிறது. பெண்ணை ஒருவர் தாக்கப்படும் சீனும் நீக்கப்படுகிறது. புதிய வெர்ஷன் நாளை வெளியாகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் அந்தோணி பெரம்பாவூர் கூறுகையில், இந்த காட்சிகள் நீக்கம் என்பது நாங்களாகவே நீக்குகிறோம்.

எந்த அரசியல் அழுத்தமும் இல்லை. இந்த மாற்றங்கள் எல்லாம் அச்சத்தின் பெயரில் செய்யவில்லை. சினிமா துறையும் சமூகத்தின் ஒரு அங்கம் என்பதால் நாங்கள் எடுக்கும் படத்தால் எந்த மக்களின் மனதும் புண்படக் கூடாது என்பதற்காகவே நீக்குகிறோம் என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+