தவெகவில் மரியாதை இல்ல.. எனக்கு மாநில பொறுப்பு கொடுங்க! புஸ்ஸி ஆனந்திடம் நேரடியாக கேட்ட மதுரை சரவணன்
மதுரை: தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகி சரவணன் அக்கட்சியின் தலைமையை மாநிலப் பொறுப்பு கேட்டு நெருக்கி வருவது தெரிய வந்துள்ளது. இதன் பின்னணியில் தவெக மாவட்டச் செயலாளர்களே காரணமாக இருக்கின்றனர். தங்களின் பொறுப்புக்கு ஆபத்தாக வந்துவிடுவாரோ என்ற அச்சத்தில், மதுரை தவெக நிர்வாகிகள் அவரை கண்டு கொள்ளாமல் ஒதுங்கியே இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அதிகளவில் கட்சி மாறியவர் என்று பட்டியல் எடுத்தால், அது முதன்மை பட்டியலில் மதுரை சரவணன் இருப்பார். ஏனென்றால் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திமுக, பாஜக, அதிமுக மற்றும் தற்போது தவெக என்று 4 கட்சி மாறியவர். இதில் அதிமுகவில் மட்டும் சில ஆண்டுகள் நீடித்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

மருத்துவர் சரவணனுக்கு எந்த கட்சிக்கு சென்றாலும், அந்தக் கட்சியின் சீனியர்களுடன் முட்டிக் கொள்ளும். திமுகவில் மாவட்டச் செயலாளர் தளபதி, மூர்த்தி ஆகியோருடன் மோதல் ஏற்பட்டது. பின்னர் அதிமுகவில் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்பி உதயகுமார் ஆகியோருடன் மோதல் ஏற்பட்டது. இதனால் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காமல் திணறினார்.
இந்த நிலையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரடியாக சந்தித்து மருத்துவர் சரவணன் அக்கட்சியில் இணைந்தார். இதனை மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தவெக சீனியர்கள் ரசிக்கவில்லை. தங்களை அணுகாமல் நேரடியாக தலைமையை சென்று சந்தித்திருக்கிறாரே என்று கொந்தளித்துவிட்டனர். குறிப்பாக மதுரை வடக்கு எம்எல்ஏ கல்லாணை டென்ஷனாகிவிட்டார்.
தவெகவில் இணைந்த பின் சரவணன் அக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கி இருக்கிறார். ஆனால் தவெக நிர்வாகிகளோ அவருக்கு முறையாக அழைப்பை கூட அளிப்பதில்லை. கூட்டத்திற்கு வந்தாலும், யாரும் உரிய மரியாதையை கொடுப்பதில்லை.. இதனால் மருத்துவர் சரவணன் புலம்ப தொடங்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் தவெக நிர்வாகிகளிடமே நேரடியாக கேட்டுள்ளார்.
அதற்கு தவெகவில் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர்களுக்கே மரியாதை.. நீங்களும் தலைமையிடம் பதவியை கேட்டு பெறுங்கள்.. மரியாதை தானாகவே வரும் என்று கூறியுள்ளனர். இதனால் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து தனக்கு மாநில அளவிலான பொறுப்பு கட்டாயம் வேண்டும் என்று நெருக்கடி கொடுத்துள்ளார். இதனை கேட்டுக் கொண்ட புஸ்ஸி ஆனந்த், எந்த சிக்னலும் கொடுக்காமல் அனுப்பி வைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications
