மலையாள கரையோரம்.. மலைக்க வைத்த பாலியல் புகார்! பினராயி விஜயனுக்கு சிக்கல்.. உதவி எண்கள் அறிவிப்பு..!
திருவனந்தபுரம்: மலையாளத் திரையுலகையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் இயக்குனர்கள் நடிகர்கள் மீதான பாலியல் புகார் விவகாரம் பெரிதாகி இருக்கிறது. நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்களின் பெயரை வெளியிட வேண்டுமென முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க, உதவி எண் இ-மெயில் முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் பாலியல் புகார் தொடர்பாக மலையாள நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான கொடுமை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
இதில் நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான வல்சலா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நடிகைகள் பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களிடம் இந்த கமிட்டி விசாரணை நடத்தியது.
தொடர்ந்து 60க்கும் மேற்பட்டோர் திரை உலகில் தாங்கள் அனுபவித்த பாலியல் வன்கொடுமைகள் புறக்கணிப்புகள் குறித்து வாக்குமூலம் அளித்தனர். 2019ஆம் ஆண்டு இந்த குழு தனது அறிக்கையை கேரள முதலமைச்சரிடம் தாக்கல் செய்தது. ஆனால் பல ஆண்டுகளாக அது வெளியிடப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் உரிமை ஆணையத்தின் மூலம் இந்த அறிக்கை வெளியானது.
அதில் பல நடிகைகள் பெண் கலைஞர்களுக்கு பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றதாகவும், பாலியல் இச்சைக்கு அழைக்கும் நடிகர்கள் இயக்குனர்களுக்கு ஒத்துழைக்காத நடிகைகள், பெண் தொழில்நுட்ப பணியாளர்கள் மலையாள சினிமாவில் இருந்தே ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதை அடுத்து மலையாள நடிகர்கள் இயக்குனர்கள் மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மலையாள சினிமா அகடமி தலைவரும் பிரபல இயக்குனருமான ரஞ்சித், தன்னை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார் .
அதுமட்டுமல்லாமல் ஒரு நடிகை நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்தார். மேலும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் உள்ளிட்ட 4 முக்கிய மலையாள நடிகர்கள் மீது நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இதை அடுத்து அவருக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவரது வீட்டை முற்றுகையிட்டு இளைஞர் காங்கிரஸ் மற்றும் மகிளா காங்கிரஸ் கட்சியினர் அவரது வீட்டை முற்றுகையிட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், முகேஷை போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். மேலும் முகேஷ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதை அடுத்து பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ முகேஷ் திரைப்படக் கொள்கை வகுப்பதற்கான கேரளா அரசின் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதேபோல கேரள திரைத் துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக கேரளா அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதில் ஏழு காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே நடிகர்கள் மீது பாலியல் புகார் அளித்த நடிகை ஒருவர் ஜெயசூர்யா, முகேஷ் உள்ளிட்ட எட்டு பேர்மீது புகார் அளித்திருக்கிறார். இதேபோல மேலும் 17 பேர் மீது புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கையில் மலையாளத் திரைத் நடிகைகள் பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது என்ற தகவல் தான் வெளியாகி இருக்கிறது, யார் யார் அளித்தார்கள்? யார் யார் புகார் கொடுத்தார்கள்? என்ற விவரம் இல்லை. எனவே ஹேமா கமிட்டி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர்களின் பெயர்களை உடனடியாக வெளியிட வேண்டும் என கேரளா திரைப்பட தொழிலாளர் சங்கமான 'பெஃக்கா' முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே கட்சியின் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள நிலையில், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு நெருக்கடி அதிகரித்து இருக்கிறது.

இதற்கிடையே மலையாள திரைத் துறையில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்க சிறப்பு உதவி எண் மற்றும் ஈமெயில் முகவரி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது. 0471-2330747 என்ற தொலைபேசி எண்ணிலும், [email protected] என்ற ஈ-மெயில் முகவரியிலும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications