கேரளத்தில் பேரிடர்களை முன்கூட்டியே அறியும் மாடல் பாராமீட்டர்ஸ் நிறுவ திட்டம்.. என்ன பலன்?
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், தொடர்ந்து 6 வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கேரளத்தில் பேரிடர்களை முன்கூட்டியே கண்டறிந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாடல் பாராமீட்டர்ஸ் (Model Parameters) நிறுவ அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
வயநாடு மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் பலத்த மழை கடந்த 29ம் தேதி கொட்டித் தீர்த்தது. அப்போது, நள்ளிரவு 1 மணியளவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து, இன்று 6வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் 200க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மலைப் பகுதிகளில் ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மற்றும் மோப்பநாய்களின் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரின் மூலக்காரணம் என்ன என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். அதிதீவிர மழையின் தாக்கம் குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில், மாடல் பாராமீட்டர்ஸ் (Model Parameters) நிறுவதற்கான ஆய்வை, இன்ஸ்டிட்யூட் ஃபார் கிளைமேட் சேஞ்ச ஸ்டடிஸ் நிறுவனம் மூலமாக நடத்தப்படும். இந்த ஆய்வுகளின் மூலமாக நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு, சூறாவளி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகளுக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படவுள்ளது. இது கேரள மாநிலத்தில் இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பேருதவியா இருக்கும். இதற்கான நடவடிக்கைகளை விரைவில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். மேலும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாக உறுதியளித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications