பாஜக சார்பில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷின் தந்தை! திருவனந்தபுரத்துக்கு கடும் போட்டி! கேரளாவில் பரபர
திருவனந்தபுரம்: லோக்சாப தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக தனது வேட்பாளர்கள் பட்டியலை விரைவில் வெளியிட இருக்கிறது. இந்நிலையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் பாஜக சார்பில் போட்டியிட நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையான பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் குமார் முயன்று வருகிறார்.
எதிர் வரும் லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், இந்திய வரலாற்றில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற பிரதமர் என்கிற பெருமையை நரேந்திர மோடி பெறுவார். அந்த வகையில் இந்த தேர்தல் பாஜகவுக்கு முக்கியமானதாகும். அதேபோல, தென் மாநிலங்களை குறி வைத்தும் பாஜக தீவிரமாக இயங்கி வருகிறது. இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார் தீவிரமாக முயன்று வருகிறார்.

கேரளாவில் மொத்தம் 20 லோக்சபா தொகுதிகள் இருக்கின்றன. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக இங்கு ஒரு இடத்தை கூட வெல்லவில்லை. எதிர் வரும் தேர்தலில் எப்படியாவது சில இடங்களை கைப்பற்றிவிட வேண்டும் என்று பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது. எனவே, சமீபத்தில் சில பிரபலங்களை கட்சியில் இணைத்திருக்கிறது.
அதில் முக்கியமானவர்தான் சுரேஷ் குமார். தமிழகத்தை பொறுத்த அளவில் அவர் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையாக அறியப்பட்டாலும், கேரளாவை பொறுத்த அளவில் அவர் மிகப் பிரபலமான திரைப்பட தயாரிப்பாளராவார். மட்டுமல்லாது கேரள திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் இருக்கிறார்.
கடந்த மாதம் 8ம் தேதி அவர் பாஜகவில் சேர்ந்திருந்த நிலையில், அவருக்கு மாநிலக்குழு உறுப்பினர் அந்தஸ்தை அம்மாநில பாஜக கொடுத்திருக்கிறது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் போட்டியிட விரும்பும் லிஸ்ட்டில் இவரது பெயரும் இருக்கிறது. அதாவது, இவர் பெயருடன், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், திரைப்பட நடிகை ஷோபனா, கும்மனம் ராஜசேகரன் உள்ளிட்டோரின் பெயர்கள் கொண்ட லிஸ்ட்டை பாஜக ரெடியாக வைத்திருக்கிறது.
திருவனந்தபுரத்தை தவிர அட்டிங்கலில் மத்திய அமைச்சர் முரளீதரனும், திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபியும் பாஜக சார்பில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கொல்லத்தில் கும்மனம் ராஜசேகரன், வி.வி.கோபகுமார் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. பத்தனம்திட்டா தொகுதியை பி.சி.ஜார்ஜ் தனது மகனுக்காக கேட்டு பெற்றிருக்கிறார். அவரது மகன் ஷான் ஜார்ஜ் இங்கு வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.
ஆலப்புழாவை பொறுத்த அளவில், படுகொலை செய்யப்பட்ட பாஜக தலைவர் ரஞ்சித் சீனிவாசனின் மனைவி லிஷா ரஞ்சித்தும், மாவேலிக்கரை தொகுதியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் பி.சுதிரும் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர மற்ற தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவார்கள் என்பது நாளை தெரியவரும். தமிழகத்தை போலவே, கேரளாவிலும் பாஜக தலைவர்கள் யாத்திரையை நடத்தி வருகின்றனர். இந்த யாத்திரை நாளை முடிவடைகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அதன் பின்னர் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று கட்சி தலைவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications