கடைசி நேரத்தில் டேக் ஆஃப்-ஐ கைவிட்ட ஏர் இந்தியா விமானம்! நல்வாய்ப்பாக தப்பிய எம்பிக்கள்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியிலிருந்து நேற்றிரவு டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட இருந்தது. இதில் இரண்டு எம்பிக்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் வந்து புறப்பட இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் டேக் ஆஃப் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
AI 504 எனும் பெயர் கொண்ட ஏர் இந்தியா விமானம் நேற்று நள்ளிரவு கொச்சி விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட இருந்தது. இதில், காங்கிரஸ் எம்.பி. ஹைபி ஈடன், ராஜ்யசபா எம்.பி. ஜெபி மாதர் ஆகியோருடன் நூற்றுக்கணக்கான பயணிகள் இருந்தனர்.

கடைசி நேரத்தில் தப்பிய விமானம்
விமானம் திட்டமிட்டபடி ரன்வேக்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து டவரின் அனுமதியை பெற்று புறப்பட தயாரானது. பொதுவாக விமானங்கள் ரன்வே அருகில் கொண்டுவரப்பட்டு, பின்னர் டவர் அனுமதி கிடைத்தவுடன் ரன்வேக்குள் நுழையும். நுழைந்த பின்னர் ரன்வேயின் தொடக்கத்தில் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டு, அதன் என்ஜின்கள் முழு வேகத்தில் சுழல வைக்கப்படும். பின்னர் பிரேக்குகள் ரிலீஸ் செய்யப்படும். இதனால் விமானம் வேகமாக நகர்ந்து, பின்னர் டேக் ஆஃப் ஆகும்.
ஆபத்தான செயல்முறை
இந்த செயல்முறை கொஞ்சம் ஆபத்தானதும் கூட. ஏனெனில் விமானம் பாதி ரன்வேயை கடந்துவிட்டால் அதை நிறுத்த முடியாது. நிச்சயம் டேக் ஆஃப் செய்துதான் ஆக வேண்டும். ஏனெனில் பாதி ரன்வே வரை வந்த விமானம் அதன் முழு வேகத்தை எட்டியிருக்கும். அதை நிறுத்த வேண்டும் எனில், ரன்வேயின் நீளம் போதுமானதாக இருக்காது. பாதி ரன்வே வரை வந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் வேறு வழியின்றி விமானம் மேலெழும்பிதான் ஆக வேண்டும்.
கொச்சி டூ டெல்லி
கொச்சியில் இப்படி நடக்கவில்லை. விமானம் ஓடுபாதையில் நுழைந்தவுடன், அது டேக் ஆஃப் ஆவதில் சில சிக்கல்கள் இருப்பதை விமானி உணர்ந்திருக்கிறார். எனவே உடனடியாக டேக்-ஆஃபை ரத்து செய்திருக்கிறார். பின்னர் விமானம், அதன் நிறுத்தும் இடத்திற்கு வந்திருக்கிறது. அங்கு அனைத்து பயணிகளும் இறக்கிவிடப்பட்டு விமானம் பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. சோதனையில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.
காங்கிரஸ் எம்பி
எனவே விமானத்தில் பயணித்தவர்கள் மாற்று விமானம் மூலம் அதிகாலை 1 மணிக்கு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். இது குறித்து விமானத்தில் பயணித்த காங்கிரஸ் எம்பி ஈடன் கூறுகையில், "AI 504 விமானத்தில் அசாதாரணமான ஒன்று நடந்தது. விமானம் ஓடுபாதையில் சறுக்கியது போல் உணர்ந்தேன். அது இன்னும் புறப்படவில்லை" என்று தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார்.
உயிர் தப்பிய பயணிகள்
இதே விமானத்தில் பயணித்த ராஜ்யசபா எம்.பி. ஜெபி மாதர், விமானம் பயணத்திற்கு பயன்படுத்த முடியாது என விமானி அறிவித்ததாக தெரிவித்தார். ஏர் இந்தியா விமானங்கள் பஞ்சாயத்தில் சிக்குவது இது முதல்முறை கிடையாது. ஏற்கனவே திருவனந்தபுரத்திலிருந்து 5 எம்பிக்களுடன் டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளறு காரணமாக கொச்சியில் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, ரன்வேயில் வேறு ஒரு விமானம் இருந்ததால், தரையிறங்கும் முயற்சி கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் விமானம் தரையிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications