கேரளா: 10 ஆண்டு இடதுசாரி அரசுக்கு எதிரான அதிருப்தி அலையை மபி, ஹரியானா போல கோட்டை விடுமோ காங்கிரஸ்?
திருவனந்தபுரம்: மத்திய பிரதேசத்தில் 15 ஆண்டுகால பாஜக ஆட்சி, ஹரியானாவில் 10 ஆண்டுகால பாஜக ஆட்சி ஆகியவற்றை வீழ்த்தும் வாய்ப்பு இருந்தும் காங்கிரஸ் மேலிடம் அலட்சியமாக மாநில தலைவர்களை நம்பியதால் படுதோல்வியைத் தழுவியிருக்கிறது. கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு 2016-ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வரும் நிலையில் முதல்வர் வேட்பாளர்கள் கனவில் பல சீனியர் தலைவர்கள் மிதந்து வருவதால் கேரளாவிலும் அக்கட்சி கோட்டை விட்டாலும் ஆச்சரியமில்லை என்பதே கள தகவல்கள்.
மத்திய பிரதேசத்தில் 15 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு எதிராக மிக கடுமையான அதிருப்தி அலை வீசியது; ஹரியானாவிலும் 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை சுழன்றது. இத்தகைய அதிருப்தி அலைகளை அழகாக அறுவடை செய்து வாகை சூட வேண்டிய காங்கிரஸ் படுதோல்விகளையே சந்தித்து வருகிறது.

குறுநில மன்னர்கள்: ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸின் குறுநில மன்னர்களாக செயல்பட சில தலைவர்களை காங்கிரஸ் மேலிடமே அனுமதித்துவிடுவதால் இத்தகைய தொடர் தோல்விகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. தோல்விகளில் இருந்து காங்கிரஸ் மேலிடம் பாடம் கற்கவும் தயாராக இல்லை என்பதுதான் இந்த முடிவுகளின் வெளிப்பாடு.
3 சட்டசபை தேர்தல்கள்: அடுத்ததாக மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனித்து களம் காணவில்லை. ஜம்மு காஷ்மீரைப் போல கூட்டணி கட்சிகளின் முதுகில்தான் சவாரி செய்கிறது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் இடம் பெற்றுள்ள மகா விகாஸ் அகாடியில் 'காங்கிரஸும்' இடம் பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. டெல்லி யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸின் இருப்பே கேள்விக்குறிதான். டெல்லி தேர்தல் களமானது ஆம் ஆத்மி vs பாஜக என்பதாக இருக்கும்.
கேரளா தேர்தல்: இதனையடுத்து 2026-ம் ஆண்டு கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவில் 2016-ம் ஆண்டு முதல் இடதுசாரி அரசுதான் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் செயல்பட்டு வருகிறது. 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான பினராயி அரசின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியதாக இருந்ததால் 2-வது முறையாக அவரது தலைமையிலான அரசுக்கு கேரளா மக்கள் வாக்களித்து அரியாசனத்தில் ஏற்றினர்.ஆனால் தற்போதைய அதாவது பினராயி விஜயனின் 2-வது கால ஆட்சியில் இடதுசாரி இயக்கத்தினரே கடுமையான அதிருப்தியில் இருக்கின்றனர் என்பது கள நிலவரம். 2026-ம் ஆண்டு தேர்தலில் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரிகள் ஆட்சியைத் தக்க வைக்க முடியாது என்கின்றனர் இடதுசாரி தோழர்கள்.
முதல்வர் பதவி நினைப்பில் மிதக்கும் காங்கிரஸ் தலைகள்:அப்படியானால் கேரளாவில் எளிதாக காங்கிரஸ் வெல்லும் வாய்ப்புள்ளதா? இடதுசாரிகளின் 10 ஆண்டுகால ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலையை அறுவடை செய்கிற வாய்ப்பு கேரளாவில் காங்கிரஸுக்கு மிக எளிதானதுதான். ஆனால் மற்ற மாநிலங்களை விட படுமோசமாக ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் 'முதல்வர் பதவி' நினைப்பில் வலம் வருகின்றனர்.
ஆளுக்கு ஒரு திசை.. வேடிக்கை பார்க்கும் மேலிடம்: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சசி தரூர், ரமேஷ் சென்னிதாலா, கேரளா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சுதாகரன், கேரளா காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுதீரன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், எதிர்க்கட்சித் தலைவரான சதீஷன் என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அதுவும் கேரளா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சுதாகரன், கேரளா காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுதீரன் ஆகியோர் பொதுவெளியில் சில மாதங்களுக்கு முன்னர் மோதிக் கொண்டது பெரும் சர்ச்சையானது. இப்படி கேரளா காங்கிரஸ் தலைவர்கள் ஆளுக்கு ஒரு திசையில் முறுக்கிக் கொண்டு நிற்கின்றனர். இவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய காங்கிரஸ் மேலிடமோ கையை கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்க்கிறது. இப்படி வேடிக்கை பார்த்தால் ம.பி, ஹரியானா போல கேரளாவிலும் கோட்டை விட்டு புலம்ப வேண்டிய நிலைமைதான் வரும் என்கின்றனர் கேரளா கதர்சட்டைகள்.












Click it and Unblock the Notifications