"திருமணமான பெண்ணுடன் உறவில் இருந்து பின்பு திருமணம் செய்ய மறுத்தால் பலாத்காரம் ஆகாது" - கேரள ஐகோர்ட்
திருவனந்தபுரம்: திருமணமான பெண்ணோடு உடன்பட்டு உறவில் இருப்பது பலாத்காரம் ஆகாது என்று கேரள ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முந்தைய உறவை காரணம் காட்டி வற்புறுத்தவோ, சம்பந்தப்பட்ட நபர் வேறு திருமணம் செய்துவிட்டதால், உறவில் இருந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறவோ முடியாது என கேரள ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
கேரளாவில் பெண் ஒருவர், தன்னுடன் உறவில் இருந்து விட்டு, திருமணம் செய்ய மறுப்பதாக 38 வயது இளைஞர் மீது புகார் அளித்திருந்தார். அந்தப் பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர். 2009 ஆம் ஆண்டில், இரண்டு குழந்தைகளைக் கொண்ட தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து பாலியல் உறவில் ஈடுபட்டார், 2013 ஆம் ஆண்டு எனது கணவர் இறந்த பிறகு, உறவைத் தொடர்ந்தார் என புகார் அளித்தார்.

மேலும், அதன்பிறகு அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். எனக்கு ஏற்கனவே அவர் தாலி கட்டிய நிலையில், என்னை ஏமாற்றிவிட்டு வேறொருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் எனக் கூறி, பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி திருமணம் செய்ததாகக் கூறி குற்றவியல் வழக்கைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கணவர் உயிருடன் இருந்தபோதே அவர்கள் உறவில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் வாதிடப்பட்டது. தங்களுக்கு இடையேயான உறவு தெளிவாக சம்மதத்துடன் இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
'திருமணமான பெண்ணுடன் உறவில் இருந்து பின்பு திருமணம் செய்ய மறுத்தால் பலாத்காரம் ஆகாது. கணவர் உயிரோடு இருந்தபோதே வேறு நபருடன் விருப்பத்துடன் பெண் உறவில் இருந்திருப்பது உறுதியாகி உள்ளது. கணவர் இறந்த பின் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முந்தைய உறவை காரணம் காட்டி வற்புறுத்த முடியாது.
கணவர் இறந்த பின், திருமணம் செய்ய மறுத்தவரை பலாத்காரம் செய்தார் என்று குற்றம்சாட்ட முடியாது. சம்பந்தப்பட்ட நபர் வேறு திருமணம் செய்துவிட்டதால், உறவில் இருந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூற முடியாது' என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 493 மற்றும் 496 இன் கீழ் குற்றச்சாட்டுகள் குறித்து, பாதிக்கப்பட்ட நபர் முறையான புகாரை தாக்கல் செய்தால் மட்டுமே இதுபோன்ற குற்றவியல் வழக்குகளைத் தொடர முடியும் என்றும், அது இந்த வழக்கில் நடக்கவில்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 38 வயது இளைஞர் மீதான குற்றவியல் வழக்கை ரத்து செய்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications