60 வயதிலும் காதல் .. மனைவி இறந்த விரக்தியில் இருந்த தந்தைக்கு சரியான ஜோடியை கண்டுபிடித்த மகள்
திருவனந்தபுரம்: கேரளாவில் மனைவி இறந்த சோகத்தில் இருந்த 62 வயது தந்தைக்கு அவரது மகளே திருமணம் செய்து வைத்த சம்பவம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் நடந்துள்ளது.
ஒரு மனிதன் தன் வாழ்வில் எதை இழந்தாலும் திரும்ப பெற்றுவிட்டலாம். மரணம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இயல்பானது தான். ஒருவர் முதுமையில் இழக்கக்கூடாதது மனைவியைத்தான்.. சம்சாரம் போனால் சகலமும் போச்சு என்று சொல்வார்கள். உண்மை தான். கணவன் இறந்த பின் பெண்கள் எப்படியோ தான் பெற்ற மக்களை அனுசரித்து வாழ்ந்து விடுவார்கள் என்ற பேச்சு உண்டு.

ஆனால் அது உண்மையா என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால் மனைவி போனபின் கணவன் படும் துயர் இருக்கிறதே.. உண்மையில் கொடுமையானது. டீ போடக்கூட தெரியாத கணவன், சமையல் என்றால் என்னவென்றே தெரியாத கணவன்
மனைவியின் மறைவுக்குப் பின் ஏனென்று கேட்க நாதி இல்லாமல் போகும் நிலை இருக்கிறது.
தனக்கு வேண்டியதை சமைத்து தருமாறு மகள் அல்லது மருமகளிடம் கேட்க கூச்சப்படுவார்கள். தலைவலி காய்ச்சல் என்றால் கூட பக்கத்தில் ஆள் இல்லாமல் அனாதை போல் இருப்பார்கள். அம்மாவாக இருந்தால் சமையல் வேலைக்கு வேலைக்காரி போல் பயன்படுத்தும் மகன் அல்லது மகள்கள், அப்பாவை கண்டு கொள்வதே இல்லை.. ஆனால் கேரளாவில் மனைவி இறந்த சோகத்தில் தனிமையில் வாழ்ந்து வந்த தந்தைக்கு, அவரது மகளே திருமணம் செய்து வைத்த நிகழ்வு நடந்துள்ளது. தனது 62 வயது தந்தைக்கு, 60 வயதில் ஒரு பெண்ணை பார்த்து மகளே திருமணம் செய்து வைத்துள்ளார்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே திருஏறங்காவு கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குருப். இவர் அந்த பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவில் அருகே கடந்த 30 ஆண்டுகளாக பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ராஷ்மி, ரெஞ்சு என்ற 2 மகள்கள், ரஞ்சித் என்ற மகன் ஆகியோருடன் வசித்து வந்தார். 2 மகள்களுக்கும் திருமணமாகி கணவன்களுடன் வசித்து வருகிறார்கள். மகன் ரஞ்சித் கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள கல்லூரியில் விடுதி எடுத்து தங்கி படித்து வருகிறார்.
ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த 1.5 ஆண்டுக்கு முன்பு ராதாகிருஷ்ணனின் மனைவி மாரடைப்பால் காலமானார். மனைவி இறந்தது முதல் பித்து பிடித்தவர் போல் இருந்தார். மனைவி இறந்த பல நாட்கள் கழித்தும் அவர் இயல்பாக இல்லை. எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்த அவர்களது பிள்ளைகள், ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் வேதனையுடன் சுற்றியதை கண்டு வருத்தப்பட்டனர். தனது தந்தை தனிமையில் இருப்பதை கண்டு வேதனை அடைந்த அவரது மகள் ரெஞ்சு , இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
மேலும் வெளிநாட்டில் வசித்து வரும் ரெஞ்சு, அண்மையில் கேரளா வந்தார். விரைவிலேயே அவர் வெளிநாட்டுக்கு திரும்பிச் செல்ல உள்ள நிலையில், அதற்கு முன்னதாக தனது தந்தை ராதாகிருஷ்ணனுக்கு திருமணம் செய்துவைத்து விட வேண்டும் தீவிரமாக பெண் தேடினார். திருமண வரன் பார்க்கக்கூடிய இணைய தளங்களில் பெண் தேடினார் ரெஞ்சு
அப்போது கணவர் இறந்துவிட்டதால் தனியாக வாழ்ந்துவரும் மல்லிகா குமாரி (60 வயது) என்பவரை பற்றிய விவரம் ரெஞ்சுவிற்கு ஒரு கட்டத்தில் தெரியவந்தது. . குழந்தைகள் இன்றி தனியாக வாழ்ந்து வந்த அந்த பெண், அவருக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று ரெஞ்சு கருதினர். மேலும் தன் தந்தையை சம்மதிக்க வைத்த ரெஞ்சு, மல்லிகா குமாரியின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து அவர்களும் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தனர். இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்ய நாள் குறித்தனர்.அண்மையில் ராதாகிருஷ்ண குருப்புக்கும் மல்லிகா குமாரிக்கும் கோவிலில் வைத்து இரண்டாவது திருமணம் இனிதே நடந்தது. இந்த திருமணத்தில் இருவரது உறவினர்கள் 50 பேர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். மனைவியின் பிரிவால் வாடிய தந்தைக்கு மகள் மறுமணம் செய்து வைத்த சம்பவம் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications