"இமாம்" செய்த காரியம்.. காய்ச்சல் வந்த சிறுமி திடீர் மரணம்.. 2 பேர் கைது.. மூடநம்பிக்கை கொடூரம்
காய்ச்சல் வந்த மகளை மூடநம்பிக்கையால் பறிகொடுத்துள்ளார் பெற்ற தந்தை
திருவனந்தபுரம்: காய்ச்சல் வந்த மகளை டாக்டர்களிடம் அழைத்து செல்லாமல், அதீத மூடநம்பிக்கையால் உயிரிழக்க செய்த, தந்தை மற்றும் இமாம் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சமீப காலமாகவே மூடநம்பிக்கைகள் அதிகரித்து வருகின்றன.. உடல்நலம் பாதிக்கப்பட்டால் டாக்டர்களிடம் நோயாளிகளை அழைத்து செல்வதும் குறைந்துவருகிறது..
மாறாக, மாந்ரீகம், மத விஷயங்களின் மேல் நம்பிக்கை வைத்து, அதனால் பல விபரீதங்களை சந்திக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் நல்லுவயல் என்ற ஊர் உள்ளது.. இங்கு மனைவியுடன் வசித்து வருபவர் அப்துல் சத்தார்.. இவருக்கு 55 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு மத நம்பிக்கை அதிகம்.. இதுவே இவர்களின் 11 வயது குழந்தையின் உயிரை பறிக்க காரணமாக இருந்துள்ளது. அந்த 11 வயது மகள், அங்குள்ள பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வந்துள்ளார்..

காய்ச்சல்
இந்நிலையில், சிறுமிக்கு சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் வந்துள்ளது.. ஆனால் தம்பதி இருவரும், குழந்தையை மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்துள்ளனர்.. மாறாக இமாம் எனப்படும் மத தலைவரிடம் குழந்தையை அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது. இமாமுக்கு 30 வயதாகிறது.. அவர் பெயர் முகமது உவைஸ்.. அவரும் சிறுமிக்கு புனித நீரை தந்துள்ளார்.. அத்துடன் குரான் படித்தால் காய்ச்சல் சரியாகிவிடும் என்றும் சொல்லி உள்ளதாக தெரிகிறது.

குர்ஆன்
இதனால் பெற்றோரும், சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்து, புனித நீர் தந்து, குரான் படிக்க சொல்லி உள்ளதாக தெரிகிறது.. மத நம்பிக்கை மற்றும் மாந்ரீக சக்திகளினாலேயே மகள் குணமடைந்துவிடுவாள் என்றும் அதிகமாக நம்பினார்கள்.. ஆனால், சிறுமியின் உடல்நிலை நாளாக நாளாக மோசமடைந்தது.. காய்ச்சலும் கடுமையாக அதிகரித்துவிட்டது.. ஒரு கட்டத்தில் அந்த குழந்தைக்கு பேச்சு மூச்சே நின்றுவிட்டது..

அலட்சியம்
இதனால் வேறு வழியில்லாமல் பதற்றமடைந்த பெற்றோர், சிறுமியை கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்துவிட்டு, அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்... இதுதான் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் கிளப்பி விட்டு வருகிறது. பெற்றோரின் அலட்சியம்தான் சிறுமியின் உயிர்போக காரணமாக இருந்துள்ளதாக கண்டனங்கள் எழுந்துவருகின்றன..

மூடநம்பிக்கை
மேலும், பெற்றோர்தான், தங்கள் மகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் மூடநம்பிக்கையால் கொலை செய்துவிட்டதாக அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு சொல்லவும், சிறுமியின் மரணம் இயற்கைக்கு எதிரான மரணம் என குறிப்பிட்டு போலீசார் விசாரணையை துவங்கினர். அப்போதுதான் இன்னொரு அதிர்ச்சி சம்பவமும் வெளிவந்தது.. இதே குடும்பத்தில் இப்படித்தான் ஏற்கனவே ஒருவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அவர் இறந்துவிட்டதாக தெரியவந்தது.. அதுமட்டுமல்ல, குடும்பத்தினர் சிறுமி மரணம் தொடர்பாக போலீசில் புகார் தந்தனர்..

அதிர்ச்சி
அந்தபுகாரில், 2014, 2016, 2018ம் ஆண்டுகளில் 3 பேர் இப்படி சிகிச்சையே தராமல், பரிதாபமாக இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. மேலும் இந்த மரணத்தில் 4 பேருக்கு தொடர்புடையதாக கூறப்படுகிறது. சிறுமியின் தந்தை மீது சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் நடந்து வருகிறது. மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா வரைவு இருந்தும், கேரளா சட்டசபையில் இன்னும் அதை சட்டமாக இயற்றவில்லை... ஆனால், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மூடநம்பிக்கைக்கு எதிரான சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications