துபாய்க்கு கூட்டிட்டுப்போய்.. பெண் பலாத்காரம்! நிவின் பாலி சிக்கியது எப்படி? ஹேமா கமிட்டி போட்ட விதை
திருவனந்தபுரம்: நீதியரசர் ஹேமா கமிட்டி அறிக்கை கேரளாவை உலுக்கி உள்ளது. மோகன்லால் தொடங்கி நிவின் பாலி வரை டாப் நடிகர்கள் இதனால் விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளாகி இருக்கிறார்கள். மலையாளத் திரைப்படத் துறைக்கு மட்டுமின்றி, தெலுங்கு, தமிழ் திரையுலகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள சினிமாத் துறைகளிலும் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளது.
ஐந்து வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் அதிர்ச்சிகரமான முடிவுகள்.. அதை தொடர்ந்து வைக்கப்படும் புகார்கள்.. கேரளாவின் சினிமா துறையில் பெரும் பாதிப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பாலியல் துஷ்பிரயோகம், காஸ்டிங் கவுச், ஆண் பெண் சம்பள வேறுபாடு மற்றும் சினிமா துறையில் உள்ள பிற பிரச்சனைகள் குறித்த நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை சொல்வது என்ன? இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது ஏன்? அதற்கு என்ன காரணம் என்று இங்கே பார்க்கலாம்.

ஹேமா கமிட்டி அறிக்கையின் தோற்றம் மற்றும் பின்னணி:
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்போது கவனம் பெற்றது. பிரபல நடிகையை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரமான வழக்கு வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, பிப்ரவரி 2017 இல் கேரள அரசு நீதிபதி ஹேமா கமிட்டியை அமைத்தது. மலையாளத்தில் பிரபல நடிகை ஒருவர்.. சக நடிகரான திலீப் அடியாட்கள் மூலம் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ஓடும் காரில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு விசாரணையில் நடிகர் திலீப்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நடிகைக்கு பாடம் கற்பிப்பதற்காகவே இந்த தாக்குதலை நடத்தியதாக திலீப்பின் ஆட்கள் வாக்குமூலம் கூட கொடுத்தனர். அந்த நடிகையின் வீடியோ பல கேரள அரசியல்வாதிகளிடம் பகிரப்பட்டதும் கூட குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம்.. வுமன் இன் சினிமா கலெக்டிவ் (WCC) என்ற இயக்கம் கேர்ளாவில் உருவாவதற்கு வழிவகுத்தது. நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கைத் தொடர்ந்து மலையாளத் திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை விசாரிக்க WCC மனு தாக்கல் செய்தது. அவர்களின் மனுவின் அடிப்படையில் கேரள அரசு 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி கே. ஹேமா தலைமை தாங்கினார். இதில் முன்னாள் நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.பி. வல்சலா குமாரி. அது தனது அறிக்கையை 2019 டிசம்பர் 31 அன்று அரசிடம் சமர்ப்பித்தது. இத்தனை ஆண்டுகள் தாமதத்திற்கு பின் தற்போது இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.
இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகள் கடந்த 19 ஆகஸ்ட் 2024ல் கேரள அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி உள்ளன. அதில் பலரின் பெயர்கள்.. அதிர்ச்சி தரும் தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதை பொதுமக்களுக்கு வெளியிடுவதற்கு முன்பு திருத்தப்பட வேண்டும். முழு அறிக்கையை வெளியிடுவது தொழில்துறைக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுவதால் அதில் சில திருத்தங்களை மேற்கொண்டு வெளியிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஹேமா கமிட்டி: நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை மாலிவுட்டில் இருக்கும் பாலியல் துஷ்பிரயோகம், சட்டவிரோத போதைப்பொருள் பழக்கம், பாலியல் பாகுபாடு, போதைப்பொருள் மற்றும் மது துஷ்பிரயோகம், ஊதிய வேறுபாடு மற்றும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பெண்களின் கொடூரமான கதைகளை வெளிப்படுத்தியுள்ளது.
இயக்குனர் பாபுராஜ், நடிகர் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, எடவேல பாபு, துளசிதாஸ் மற்றும் சிபிஐ-எம் எம்எல்ஏ விச்சு முகேஷ் ஆகியோர் மீது பல மலையாள பெண் நடிகர்கள் மற்றும் இளைய கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தவறான நடத்தை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிவின் பாலி: இப்படிப்பட்ட நிலையில்தான் நிவின் பாலி.. பலாத்கார வழக்கில் சிக்கி உள்ளார். மாலிவுட்டில் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.. குற்றம் சாட்டப்பட்டவர்களின் லிஸ்டில் நடிகர் நிவின் பாலியின் பெயரும் சேர்க்கப்பட்டு உள்ளது. எர்ணாகுளம் ரூரல் எஸ்பியிடம் ஒரு பெண் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கில்.. நிவின் பாலி ஆறாவது குற்றவாளியாகவும், தயாரிப்பாளர் ஏ கே சுனில் இரண்டாவது குற்றவாளியாகவும் பெயரிடப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மற்ற நான்கு பேரில் ஸ்ரேயா என்ற பெண்ணும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. இதில் முதல் குற்றவாளியாக ஸ்ரேயா சேர்க்கப்பட்டுள்ளார். பினு, பஷீர் மற்றும் குட்டன் ஆகியோர் மீதமுள்ள குற்றவாளிகள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த நவம்பரில் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அந்த பெண்ணை நிவின் பாலி மற்றும் ஸ்ரேயா ஆகியோர் துபாய்க்கு அழைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வெளிநாட்டில் நடந்ததாகக் கூறப்படும் குற்றம் என்பதால் அவரது சொந்த ஊரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இப்போது ஹேமா கமிட்டி விவாகரத்திற்கு இடையே.. நிவின் பாலியும் சிக்கி உள்ளார். ஆனால் அதிக சமயம் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிவின் பாலி மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications