ஆர்எஸ்எஸ்-யை போல் CPI(M) மக்களை பற்றி நினைப்பது இல்லை.. ராகுலால் ‛இந்தியா’ கூட்டணியில் குழப்பம்!
திருவனந்தபுரம்: ‛‛ஆர்எஸ்எஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் சித்தாந்தங்களை எதிர்த்து நான் போராடி வருகிறேன். அவர்கள் மக்களை பற்றி நினைப்பது இல்லை'' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி இது ‛இந்தியா' கூட்டணியில் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தற்போது லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இந்நிலையில் மறைந்த கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் 2வது ஆண்டு நினைவு நாளையொட்டிய பொதுக்கூட்டம் கேரளாவில் நடந்தது.

கேரளா மாநிலம் கோட்டயத்தில் இந்த பொதுக்கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சனம் செய்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சனம் செய்தது தான் தற்போது விவாதமாகி உள்ளது. ஏனென்றால் ‛இந்தியா' கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது: ‛‛நான் ஆர்எஸ்எஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்த்து சித்தாந்த ரீதியாக களத்திலும், கருத்துகளிலும் போராடி வருகிறேன். அவர்கள் தங்களின் சித்தாந்தங்கள் பற்றி தான் நினைக்கின்றனர். மக்களின் மீதான உணர்வு இல்லை என்பது தான் எனது புகார். நீங்கள் அரசியலில் இருந்தால், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உணருங்கள். மக்கள் சொல்வதை கேளுங்கள். ஆனால் இன்றைய இந்திய அரசியலில் உள்ள உண்மையான சோகம் என்னவென்றால், மற்றவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை மிகச் சிலரே உணர்கிறார்கள்'' என விமர்சனம் செய்திருந்தார்.
அதாவது ஆர்எஸ்எஸ், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை பற்றி நினைப்பது இல்லை என்று குற்றம்சாட்டி உள்ளார். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. இப்படியான சூழலில் தான் ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் கூட அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சனம் செய்துள்ளார்.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்ஏ பேபி கூறுகையில், ‛‛இது துரதிர்ஷ்டவசமானது. ஆர்எஸ்எஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சமன்படுத்தி பேசியிருப்பது கேரளா மற்றும் இந்தியாவின் அரசியல் யதார்த்தங்களைப் பற்றிய புரிதல் இல்லாமல் வந்துள்ளது. சிபிஐ(எம்) மற்றும் பிற இடதுசாரிகளின் ஆதரவு இல்லை என்றால் மன்மோகன் சிங் எவ்வாறு 2004ல் ஒரு அரசாங்கத்தை அமைத்திருக்க முடியாது என்பதை ராகுல் காந்தி நினைவுபடுத்த வேண்டும். 2004 தேர்தலுக்குப் பிறகு மக்களவையில் காங்கிரஸ் பெரும்பான்மையைப் பெறவில்லை'' என்று சாடி உள்ளார்.
ஏற்கனவே ‛இந்தியா’ கூட்டணியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி வெளியேறி உள்ளது. இப்போது ராகுல் காந்தி இடதுசாரிகளை விமர்சனம் செய்துள்ளது ‛இந்தியா’ கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications