கோழிக்கோடு, ஆலப்புழா உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. ரெட் அலர்ட் வார்னிங்!
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்றும் கனமழை பெய்யும் என்பதால் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த இரு மாநிலங்களும் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த நிலையில் மூணாறு பெட்டிமலை பகுதியில் கனமழை பெய்ததால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த பயங்கர நிலச்சரிவால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 80-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துவிட்டனர். இதில் அனைவரும் தமிழர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 40-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டன.

கனமழை
இந்த நிலையில் இன்றைய தினமும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் 20 செமீ-க்கும் மேற்பட்ட மழை பெய்யக் கூடும். காசர்கோடு, கண்ணனூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும்.

ரெட் அலர்ட்
இதனால் அந்த 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை கொட்டி வருவதால் இடுக்கி மாவட்டத்தில் பெட்டிமுடி பகுதியில் நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 43 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

தனிமைப்படுத்துதல் முகாம்
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் நேற்று இரவு 136 அடியை எட்டியது. கொரோனா பரவல் அச்சம் இருப்பதால் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு பல்வேறு முகாம்களை அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர். 18 பேர் தனிமைப்படுத்துதலுக்கான முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

படிப்படியாக குறையும்
நாளை முதல் மழை படிப்படியாக குறையும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. கோழிக்கோடு விமான நிலையத்தில் கனமழை கொட்டியதால் கடந்த வெள்ளிக்கிழமை துபாயிலிருந்து வந்த விமானம் விபத்தில் சிக்கியது. இதில் 19 பேர் பலியாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications