பச்சை கொடி காட்டிய மோடி.. துவங்கியது வாட்டர் மெட்ரோ.. "அந்த ரூ.1100 கோடி நிதி".. சீறும் காம்ரேடுகள்
திருவனந்தபுரம்: நாட்டின் முதல் 'வாட்டர் மெட்ரோ' சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த நிலையில், இதற்கான நிதியை முழுக்க முழுக்க கேரள அரசே அளித்துள்ளதாகவும், ஆனால் பிரதமர் வெறும் கொடியை மட்டுமே அசைத்து தொடங்கி வைத்தார் என்றும் அம்மாநில ஆளும் கட்சியான சிபிஎம் விமர்சித்துள்ளது.
இந்தியாவில் நீர் நிலைகளில் அதிக நகரங்களை கொண்டுள்ள மாநிலம்தான் கேரளா. அங்கு ரயில், சாலை போக்குவரத்தை போலவே படகு போக்குவரத்தும் பிரதானமானதாக இருக்கிறது. எனவே நீர் நிலைகளில் பொதுப்போக்குவரத்தை தொடங்க அம்மாநி அரசு திட்டமிட்டது. இதனையடுத்து உருவானதுதான் வாட்டர் மெட்ரோ. இந்தியாவில் முதல் முறைாக கேரளாவில் வாட்டர் மெட்ரோ சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் படகு போக்குவரத்து சேவை எளியதாக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

இந்த திட்டம் மூலம் கொச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். இந்த படகு 11 இடங்களுக்கு செல்வதால் சுற்றுலா பயணிகளையும் இது ஈர்க்கும். இந்த மெட்ரோ சேவை உயர்நீதிமன்றம் - விபின் மற்றும் விட்டிலா - கக்கநாட் இடையே என இரண்டு முனையங்கள் இயங்கும். அதேபோல கொச்சி நகரைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும். இந்த சேவையை பயன்படுத்தி பயணிகள் விபினில் இருந்து உயர்நீதிமன்றத்திற்கு 20 நிமிடங்களில் செல்லலாம்.
விட்டிலாவில் இருந்து கக்கநாடு பகுதிக்கு 25 நிமிடங்களில் செல்லலாம். அன்றாடம் காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை சேவை தொடரும். விழா நாட்களில் இந்த நேரம் நீட்டிக்கப்படும். அதேபோல பரபரப்பான காலை மற்றும் மாலை நேரங்களில் உயர்நீதிமன்றம் - விபின் இடையே 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கொச்சி வாட்டர் மெட்ரோ இயக்கப்படும். அதேபோல இந்த சேவையை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் ரூ.20 முதல் ரூ.40 வரை மட்டுமே டிக்கட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாகச் செல்லக்கூடிய பயணிகள் பாஸ் பெற்றுக் கொள்ளலாம். மாதாந்திர சந்தா ரூ.600, அரையாண்டு சந்தா ரூ.1,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் மற்றும் பாஸ்களை முனையங்களில் உள்ள கவுன்ட்டர்களில் க்யூ ஆர் கோட் பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம். இதெல்லாம்தான் இந்த வாட்டர் மெட்ரோ சேவையின் சிறப்பம்சங்கள். இதனைதான் கடந்த 25ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இதில்தான் பஞ்சாயத்து தொடங்கியள்ளது.
அதாவது இந்த திட்டமானது ரூ.1,137 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான முதலீடு முழுக்க முழுக்க கேரள அரசுதான் போட்டிருக்கிறது. மத்திய அரசின் நிதி கொஞ்சமும் கிடையாது. கொச்சி கப்பல்கட்டுமான லிமிடட் தான் வாட்டர் மெட்ரோ படகுகளை கட்டமைத்துள்ளது. இப்படி இருக்கையில் பிரதமர் இந்த வாட்டர் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்ததால் மத்திய அரசதான் இதற்கு நிதியுதவி அளித்தது என பாஜகவினர் கூறி வருவதாக சிபிஎம் விமர்சித்துள்ளது.
ஏற்கனவே கடந்த காலங்களில் கேரள அரசுக்கு மத்திய அரசு நிதி விவகாரங்களில் அதீத கரார் தன்மையுடன் நடந்துக்கொண்டிருந்துள்ளது. அதாவது புயல், வெள்ளத்தில் கேரள அரசு மத்திய அரசிடம் இருந்து வாங்கிய ரேஷன் அரிசிக்கும், வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றிய ஹெலிகாப்டருக்கும் கூட கட்டணத்தை மத்திய அரசு திரும்ப கேட்டிருந்தது. இப்படி இருக்கையில்தான் பிரதமர் மோடி பச்சை கொடி அசைத்து வாட்டர் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்தார்.
இது குறித்து அம்மாநில நிதியமைச்சர் பாலகிருஷ்ணன் கூறுகையில், "கொச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டங்களில் ரூ.94 கோடி மதிப்பிலான திட்டம் மட்டுமே மத்திய அரசினுடையது. வாட்டர் மெட்ரோ, டிஜிட்டல் அறிவியல் பூங்கா போன்ற ரூ.3,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மாநில அரசுதான் நிதியை ஒதுக்கியுள்ளது. வந்தே பாரத் ரயிலுக்கு மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. நிதி விவகாரங்களில் கேரள அரசை தொடர்ந்து மோடி அரசு மூச்சுத்திணற வைத்து வருகிறது" என்று விமர்சித்துள்ளார். தற்போது இது தொடர்பான செய்திகள் சோஷியல் மீடியாக்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications