கேரளா பழங்குடி இளைஞரை காரில் கட்டி.. அரை கிமீக்கு தரதரவென இழுத்த சம்பவம் – வைரல் வீடியோ
திருவனந்தபுரம்: கேரளாவில் பழங்குடி இளைஞரை கார் மூலம் கட்டி அரை கி.மீ தொலைவுக்கு (500 மீட்டர்) இழுத்து சென்ற சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. ஏற்கனவே கேரளாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு மது என்ற பழங்குடி இளைஞரை அடித்து கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியிருந்தது. தற்போது மற்றொரு பழங்குடி இளைஞர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.
கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம், மானந்தவாடி பகுதியைச் சேர்ந்தவர் மதன். பழங்குடி இளைஞரான இவர் ஆசிரியராவார். சம்பவத்தின்போது நேற்று மானந்தவாடி கூடல்கடவு தடுப்பணை அருகே இருந்துள்ளார். அப்போது அங்கு ஒரு காரில் மதனின் கைகளை கட்டி சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பழங்குடி இளைஞர் மீதான தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இயக்கங்கள் கண்டனம் தெரிவித்தன. இதுதொடர்பாக காவல்துறை விசாரணையை தொடங்கியது. முதல்கட்ட விசாரணையில் இரண்டு குழு இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது சம்பவ இடத்தில் இருந்த மதன் குறுக்கே சென்று அவர்களிடையே சமரசம் செய்ய முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஒரு தரப்பு இளைஞர் கும்பல் மதனை தாக்கி, அவரின் கையை கட்டி காரில் தரதரவென இழுத்து சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மதன் மானந்தவாடி அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் மாநில அரசுக்கும் கண்டனம் வலுத்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், KL 52 H 8733 பதிவு எண் கொண்ட மாருதி சூசுகி செலேரியோ கார் தான் மதனை இழுத்து சென்றுள்ளது. கனியாம்பேட்டா பகுதியைச் சேர்ந்த ஹர்ஸித் மற்றும் அவரின் நண்பர்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அவர்களை கைது செய்வோம் என்றனர்.
இந்த சம்பவம் குறித்து கேரளா அரசின் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ஓ.ஆர். கேலு கூறுகையில், இந்த விவகாரத்தை அரசு தீவிர பிரச்னையாக கவனித்து வருகிறது. இதில் சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்றார். கேரளாவில் பழங்குடி இளைஞர் தாக்கப்படுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் கடந்த 2017 ஆம் ஆண்டு உணவைத் தேடி வந்த பழங்குடி இளைஞர் மது என்பவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில் அவர் மரணமடைந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதே கேரளாவில் மற்றொரு பழங்குடி இளைஞர் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications