பெண்கள் வீட்டிலேயே இருக்கனும்! பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது! முஸ்லிம் மதகுரு பேச்சால் சர்ச்சை
திருவனந்தபுரம்: பெண்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். பொது விவாதங்களில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். பெண்களை சிறுமைப்படுத்தும் நோக்கில் நான் இவ்வாறு கூறவில்லை. அவர்களை மதித்து பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதை கூறுகிறேன் என்று சமஸ்தா கேரள ஜமியத்துல் உலமா பொதுச்செயலாளர் காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்று கேரள மதகுரு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் கண்ணியத்தை பாதுகாப்பதற்காகவே இஸ்லாம் பர்தா முறையை வகுத்துள்ளதாகவும் இஸ்லாமிய மதகுரு கூறியுள்ளார்.

பொதுவெளியில் வரக்கூடாது
கொச்சியில் நடைபெற்ற ஹப்புல் ரசூல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அபுபக்கர் முஸ்லியார் மேற்கண்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். பெண்களை நகைகளுடன் ஒப்பிட்டு பேசிய மதகுரு, அவர்களை பத்திரமாக பாதுகாத்து வைக்க வேண்டும். பெண்களை பொது வெளிக்குக் கொண்டு வருவது பெரும் அழிவுக்கு வழிவகுக்கும். பெண்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். அவர்கள் பொது வெளியில் வரக் கூடாது.
புனித குர்ஆன் இதைத்தான் கூறுகிறது. பெண்களை சிறுமைப்படுத்தும் நோக்கில் நான் இவ்வாறு கூறவில்லை. அவர்களை மதித்து பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதை கூறுகிறேன். தங்க ஆபரணங்கள் கடையில் உள்ள அலமாரியில் இருந்து எடுத்து அதை சுற்றியுள்ள பாதுகாப்பை அகற்றி எடுத்து காட்டப்பட்டும். அதே நேரத்தில், அருகில் இருக்கும் கற்கள் விற்கும் கடைகளை பார்த்தால், அந்த கற்கள் சாலையோரம் வைக்கப்பட்டு இருக்கும்.
பெண்கள் தங்கம் போன்று
அந்த கற்களை கடந்தும், அதன் மீது ஏறியும் செல்வார்கள். தங்க நெக்லசையும் சாலையோரம் வைத்தால், அனைவரும் அதை தொட்டு பார்த்துவிட்டு கடந்து செல்வார்கள். இறுதியில் அதன் மதிப்பையும் அழகையும் அழித்துவிடுவார்கள். நெக்லசின் அழகை மீட்க வேண்டும் என்றால் அதை பத்திரமாக பெட்டிக்குள் பாதுகாக்க வேண்டும். பெண்களை பொது நிகழ்ச்சிக்கு இதை போல அழைத்து வந்தால், பேரழிவுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாகவே இஸ்லாம் பெண்களுக்குப் பர்தா முறையை விதித்தது" என்றார்.
தனது பேச்சின் துவக்கத்தில், இஸ்லாம் வரலாற்று ரீதியாக பெண்களின் அந்தஸ்தை உயர்த்தியதாகவும் மதகுரு காந்தபுரம் தெரிவித்தார். இஸ்லாத்துக்கு முந்தைய அரேபியாவில் பெண் குழந்தைகள் கொல்லப்பட்ட நடைமுறை இருந்ததாக மேற்கோள் காட்டி பேசினார். பெண் குழந்தைகளைக் கொல்வதை இஸ்லாம் தடை செய்ததாக கூறிய அவர், பெண்களுக்கு வாரிசுரிமை இல்லாத காலகட்டத்திலேயே இஸ்லாம் அவர்களுக்கு சொத்துரிமையை வழங்கியது.
தொடர்ந்து கூறிக்கொண்டே இருப்போம்
பெண்கள் பொது வெளியில் வருவதற்கான கட்டுப்பாடுகளையும் அவர்களுக்கு அளிக்கப்படும் ஒரு வகையான மரியாதையாகவே பார்க்க வேண்டும்" என்றார். இத்தகைய கருத்துகளை வெளிப்படுத்த தனக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று கேள்வி எழுப்பிய அமைப்புகளுக்கு பதிலடி கொடுத்த அவர், "இஸ்லாம் குறித்து படித்து இருப்பதால், அந்த மதத்தை பற்றி பேச அதிகாரமும் கடமையும் உள்ளது. நாங்கள் இதைக் கூறுவோம். தொடர்ந்து கூறிக்கொண்டே இருப்போம். யாராலும் இதைத் தடுக்க முடியாது. பிற மதங்களை சேர்ந்தவர்களின் மத நடைமுறைகளில் நாங்கள் தலையிடுவது இல்லை" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
