23 முறை நெட்டில் தேடிய கிரீஷ்மா.. கஷாயத்தில் பாராகுவாட் கலந்து கொடுத்து ஷாரோன் ராஜை கொன்றது எப்படி?
திருவனந்தபுரம்: ஜூஸில் பாராசிட்டமால் கலந்து கொடுப்பது எப்படி என்று கிரீஷ்மா 23 முறை தேடியதாகவும், பாராகுவாட் என்ற பூச்சிக்கொல்லி மருந்தை கஷாயத்துடன் கலந்து கொடுப்பது எப்படி என்று இணையத்தில் தேடியதும், கிரீஷ்மாவின் செல்போனை ஆய்வு செய்ததில் கண்டறியப்பட்டதை நீதிமன்றம் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளது.
கேரள மாநிலம் பாறசாலையைச் சேர்ந்த ஷாரோன் ராஜ் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார். இந்நிலையில் ஷாரோன் ராஜுக்கும், களியக்காவிளையை சேர்ந்த கிரீஷ்மா (24) என்ற கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி ஷாரோன் ராஜ்-க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை செய்த காதலி
தங்கள் மகனுக்கு அவரது காதலி கிரீஷ்மா தான் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார் என்று ஷாரோன் ராஜின் பெற்றோர் பாறசாலை போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கில் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜான்சன் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரோன் ராஜுக்கு காதலி கிரீஷ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது தெரிய வந்தது.
நெல்லையைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரருக்கு கிரீஷ்மாவை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். முதலில் அதற்கு கிரீஷ்மா முதலில் சம்மதிக்கா விட்டாலும் பின்னர் திருமணத்திற்கு சம்மதித்தார். ஆனால் ஷாரோன் ராஜ் தன்னுடைய காதலில் உறுதியாக இருந்ததால் அவரை கொலை செய்ய கிரீஷ்மா தீர்மானித்துள்ளார்.
கிரீஷ்மா கைது
அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு ஷாரோன் ராஜை தனது வீட்டுக்கு வரவழைத்து கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. கிரீஷ்மா தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதால், ஷாரோன் ராஜ் அந்த திருமணத்தை நிறுத்த தங்களது நெருக்கமான போட்டோக்களை மாப்பிள்ளையிடம் காட்டிவிடுவாரோ என்ற அச்சத்தில் திட்டமிட்டு அவரைக் கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து கிரீஷ்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்தக் கொலைக்கு கிரீஷ்மாவின் தாய் சிந்து மற்றும் மாமா நிர்மலகுமாரன் நாயர் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்ததையடுத்து அவர்களையும் கைது செய்தனர்.
தூக்கு தண்டனை
இந்த வழக்கு விசாரணை கடந்த 2 வருடங்களாக நெய்யாற்றின்கரை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதிக்கட்ட விசாரணை முடிந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி இந்த வழக்கில் கிரீஷ்மா மற்றும் மாமா நிர்மலகுமாரன் நாயர் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி பஷீர் அறிவித்தார். தாய் சிந்து இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் திங்கட்கிழமை அன்று தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி, குற்றவாளி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், கிரீஷ்மாவின் மாமா நிர்மலகுமாரன் நாயருக்கு 3 வருடங்கள் சிறையும் 50,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பஷீர் தீர்ப்பளித்தார்.
ஆகஸ்ட் மாதம் முதலே கொலை முயற்சி
இந்த தீர்ப்பில் பல முக்கியமான தகவல்களை குறிப்பிட்டுள்ளது நீதிமன்றம். அதாவது, 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே, ஷாரோன் ராஜை கொல்ல கிரீஷ்மா பல்வேறு திட்டங்களில் ஈடுபடத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம், போதைப்பொருள், விஷம், மருந்து குறித்தெல்லாம் நெட்டில் தேடத் தொடங்கி உள்ளார் கிரீஷ்மா.
ஜூஸ் சேலஞ்ச்
ஆகஸ்ட் 22, 2022 அன்று, கிரீஷ்மா, அதிகப்படியான பாராசிட்டமால் மருந்தை, ஜூஸில் கலந்து "ஜூஸ் சேலஞ்ச்" நடத்தி உள்ளார். ஷாரோனிடம் 'ஜூஸ் சேலஞ்ச்’ எனச் சொல்லி அந்த ஜூஸை குடிக்கச் செய்துள்ளார். அந்த ஜூஸை குடித்ததுமே, ஷாரோன் ராஜ் வாந்தி எடுத்தார். உடனடியாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
நெட்டில் தேடிய கிரீஷ்மா
பாராசிட்டமாலை எப்படி விஷமாக பயன்படுத்தலாம்? அதை எந்த ஜூஸில் கலந்து கொடுத்தால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்றெல்லாம் கிரீஷ்மா, தனது போனில் இணையத்தில் தேடியது நிரூபணமாகியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜூஸுடன் பாராசிட்டமால் கலக்குவது எப்படி என்று கிரீஷ்மா 23 முறை தேடி உள்ளதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 14, 2022 அன்று கிரீஷ்மா ஷரோனை தனது வீட்டிற்கு மெசேஜ் செய்து அழைத்துள்ளார். ஷரோன் தனது வீட்டிற்கு வெளியே காத்திருந்த தனது நண்பர் சஜினுடன் கிரீஷ்மா வீட்டுக்குச் சென்றுள்ளார். அதன்பிறகு, மீண்டும் கிளம்பும்போதே, ஷாரோன் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். விரைவில் அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுநீரக செயலிழப்புக்கு டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. உறுப்புகள் செயலிழப்பால் அக்டோபர் 25 ஆம் தேதி ஷாரோன் ராஜ் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அதன்பிறகு, ஷாரோனின் பெற்றோர் புகாரின் பேரிலேயே போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி, கிரீஷ்மா தான் விஷம் கலந்து கொடுத்தார் என்பதை கண்டறிந்தனர்.
பாராகுவாட் பூச்சிக்கொல்லி பற்றி தேடிய கிரீஷ்மா
கஷாயத்தில் 'பாராகுவாட்' என்ற பூச்சிக்கொல்லி மருந்தை கிரீஷ்மா கலந்து கொடுத்தது தெரியவந்தது. அது தொடர்பாகவும் நெட்டில் நிறைய தேடி உள்ளார் கிரீஷ்மா. அக்டோபர் 14, 2022 அன்று காலை 7.26 மணிக்கு, அதாவது, ஷாரோன், கிரீஷ்மா வீட்டிற்குச் சென்ற நாள் அன்று, கிரீஷ்மா கூகுளில் பாராகுவாட் பூச்சிக்கொல்லி மருந்து பற்றியும், அதன் விஷத்தன்மை, பயன்பாடு போன்றவற்றைப் பற்றியும் அதன் விளைவு பற்றியும் நீண்ட நேரம் கூகுளில் தேடியதாக நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஒருவர் இணையத்தில் ஒரு புதிய மாடல் கார் பற்றி தேடினால், அது அவருடைய ஆர்வத்தையோ அல்லது அந்த காரை வாங்கத் தயாராகிவிட்டதையோ வெளிப்படுத்துகிறது. அதேபோல, ஒரு நபருக்கு அதிக அளவு பாராசிட்டமாலை ஜூஸ் உடன் கலந்து கொடுப்பது பற்றியும், கஷாயத்துடன் பாராகுவாட் பூச்சிக்கொல்லியைக் கலந்து, ஒருவருக்கு விஷம் கொடுப்பது எப்படி என்று இணையத்திலும், யூடியூப்பிலும் தேடினால் , கொலைக் குற்றத்தைச் செய்ய அவர் தயாராகிவிட்டார் என்பதை தெளிவாக உணர முடிகிறது” என நீதிபதி பஷீர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications