மனைவிக்கு கால்வலியா?.. 2 பெக் போடுங்க.. சரியாகிடும்.. மருந்து சீட்டு கொடுத்த மருத்துவர் சஸ்பெண்ட்
திருவனந்தபுரம்: கேரளாவில் பெண்ணின் கால்வலி குணமாக மது அருந்துமாறு மருந்து சீட்டில் பரிந்துரைத்த மருத்துவர் ஒருவரை மருத்துவமனை நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் குருவாயூரை சேர்ந்தவர் அனில் குமார். இவரது மனைவி பிரியா. இவருக்கு நீண்ட நாட்களாக கால் மற்றும் மூட்டுகளில் கடுமையான வலி இருந்து வந்தது.
இந்த நிலையில் அனில்குமார் தனது வீட்டருகே உள்ள ஒரு எலும்பு சிகிச்சை பிரிவு மருத்துவமனையில் பிரியாவின் கால்களை எக்ஸ்ரே எடுத்துள்ளார். அந்த எக்ஸ்ரே ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு மருத்துவரை பார்க்க தம்பதி காத்திருந்தனர்.

எக்ஸ்ரே
எக்ஸ்ரேவை பார்த்துவிட்டு டாக்டர் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டால் கால், மூட்டு வலி சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் அமர்ந்திருந்தனர். இதையடுத்து அனில்குமார்- பிரியா தம்பதியின் முறை வரும் போது அவர்கள் போய் மருத்துவரை பார்த்தனர். எக்ஸ்ரேவை லைட் வெளிச்சத்தில் பார்த்தார் மருத்துவர்.

தேய்ந்த ஜவ்வு
ஏதாவது ஜவ்வு தேய்ந்திருக்கும் என சொல்வார் என தம்பதி நினைத்தனர். ஆனால் மருத்துவரோ பிரியாவின் கால்களில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஓய்வெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். அப்போது அனில் குமார், சில சமயங்களில் கால்வலி அதிகமாக இருந்தால் மனைவியால் பொருத்து கொள்ள முடியவில்லை.

அழுவது வேதனை
அழுது கொண்டே இருக்கிறார். அவர் அழுவதை பார்க்கவே எனக்கு வேதனையாக இருக்கிறது. எனவே வலி நிவாரணி மாத்திரை ஏதாவது கொடுங்கள் என கேட்டார். உடனே டாக்டரும் தனது மருந்து சீட்டை எடுத்து அதில் எதையோ எழுதினார். அந்த சீட்டில் என்ன எழுதியிருக்கிறது என்றே பார்க்காமல் அனில் குமார், தன் மனைவியின் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் துள்ளி குதித்து கொண்டு மருந்தகத்திற்கு (மெடிக்கல் ஷாப்) ஓடினார்.

மருத்துவரின் பரிந்துரை சீட்டு
அப்போது அந்த சீட்டை கடைக்காரரிடம் அனில் குமார் கொடுத்துள்ளார். அந்த சீட்டை மருந்தாளுனர்கள் படித்து பார்த்துவிட்டு சிரித்துள்ளனர். அப்போது அவர்கள் "சாரே இந்த மருந்து வாங்க இவ்விட ஏன் வந்தீர்கள் " என கேட்டுள்ளனர். அனில் குமாருக்கோ மருந்து வாங்க மெடிக்கல் ஷாப் போகாமல் மதுபான கடைக்கா போக முடியும் என கேட்டுள்ளார்.

சிரித்த மருந்தாளுனர்கள்
உடனே மருந்தாளுனர்களும், கரெக்ட் சாரே, நீங்கள் செல்ல வேண்டிய இடம் அதுதான் என கூறினர். அனில் குமார் ஒன்றும் தெரியாமல் விழிக்க உடனே மருந்தாளுநர்கள், அந்த மருந்து சீட்டை படித்து பார்க்குமாறு கூறினர். அப்போது "கணவருக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் பாருக்கு சென்று இரண்டு பெக் மது அருந்தவும்" என மருத்துவர் எழுதியிருந்ததை கண்டு அனில் குமார் அதிர்ந்தே போனார்.

மருத்துவர் இடைநீக்கம்
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்திடம் அனில்குமார் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் அந்த மருத்துவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது மருத்துவமனை நிர்வாகம். மது குடிப்பது தவறு என சொல்லும் மருத்துவர் ஒருவரே இப்படி மருந்து சீட்டில் எழுதியிருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications