தமிழகம் மாதிரியே.. வஞ்சிக்கப்படும் கேரளா? பாஜகவுக்கு எதிராக.. நேரடியாக களமிறங்கிய பினராயி விஜயன்
திருவனந்தபுரம்: புதிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான், தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிப்போம் என்று மத்திய அரசு கூறி வருகிறது. அதேபோல கேரள மாநிலத்திற்கும் ஏராளமான நிதி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனை கண்டித்து ஒரு நாள் சத்தியாகிரக போராட்டத்தை, கேரள முதல்வர் பினராயி விஜயன் நடத்துகிறார்.
பாளையம் தியாகிகள் நினைவிடத்தில் நடைபெறும் இந்த போராட்டத்தில், முதல்வர் பினராயி விஜயனுடன், எம்பி எம்எல்ஏக்கள் மற்றும், கட்சியினர் பெரிய அளவில் பங்கேற்பார்கள்.

பொருளாதார தடைகள்
கடந்த 10 ஆண்டுகளில் கேரளா அடைந்த முன்னேற்றத்தைத் தடுப்பதே மத்திய அரசின் பொருளாதாரத் தடையின் நோக்கம் என்று முதல்வர் விஜயன் மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் நலன், உள்கட்டமைப்பு வளர்ச்சி, பொதுத்துறைத் தொழில்களைப் பலப்படுத்துதல் ஆகியவற்றுடன் நிறைவான வாழ்வை உருவாக்க இடது முன்னணி அரசு உறுதி கொடுத்துள்ளது என்றும், இத்தகைய வளர்ச்சிப் பயணத்தைத் தடை செய்து, மாநிலத்தின் கழுத்தை நெரிக்கும் வகையில் மத்திய அரசின் பொருளாதாரத் தடைகள் உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் மத்திய அரசின் புறக்கணிப்பை வெளிப்படுத்துகின்றன என்றும், மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன என்றும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.
நிலுவை நிதி
நடப்பு நிதியாண்டின் கடைசி மூன்று மாதங்களில் ₹12,000 கோடி கடன் அனுமதியில் ₹5,900 கோடி குறைக்கப்பட்டது. அத்துடன், பட்ஜெட்டிற்கு வெளியே எடுக்கப்பட்ட கடன்களின் பெயரால், மாநிலத்தின் கடன் பெறும் வரம்பில் ₹17,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டிற்காக நிலம் கையகப்படுத்த கேரளா வழங்கிய ₹6,000 கோடிக்கு ஈடாகக் கடன் பெறுவதற்கான அனுமதியையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. ஐ.ஜி.எஸ்.டி (IGST) மீட்பு என்ற பெயரில், மாநிலத்துக்குக் கிடைக்க வேண்டிய ₹965 கோடியை மத்திய அரசு கைப்பற்றியுள்ளது என்று விஜயன் விமர்சித்துள்ளார்.
பிற மாநிலங்கள் vs கேரளா
"பிற மாநிலங்களுக்கு வருவாய் பங்கில் 73% வரை மத்திய அரசு நிதி வழங்கும்போது, கேரளாவுக்கு 25% மட்டுமே கிடைக்கிறது. உத்தரவாத வைப்புத்தொகையின் பேரில் ₹3,300 கோடி கடன் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல், ஜல் ஜீவன் இயக்கம் போன்ற திட்டங்களில் மாநிலத்திற்கு ₹5,784 கோடி நிலுவையில் உள்ளது.
வளர்ச்சி பாதை
இவ்வளவு பெரிய நிதி நெருக்கடியிலும் கேரளா வளர்ச்சியின் பாதையில் வலிமையுடன் முன்னேறி வருகிறது. மத்திய அரசின் கணக்குப்படி, 2015-16ல் ₹54,000 கோடியாக இருந்த மாநில சொந்த வருவாய், தற்போது ₹1,03,240 கோடியாக உயர்ந்துள்ளது. தனிநபர் வருமானமும் ₹1,66,246லிருந்து ₹3,08,338 ஆக அதிகரித்தது. மாநிலத்தின் மொத்தக் கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24.88% மட்டுமே. இது தேசிய சராசரியான 26.11%ஐ விடக் குறைவு. மாநில அரசின் துல்லியமான நிதி மேலாண்மையே இத்தகைய வளர்ச்சிக்குக் காரணம் என்று" முதல்வர் பெருமிதம் தெரிவித்தார்.
விமர்சனம்
இருப்பினும், இந்த பொருளாதாரத் தடை முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் இடது முன்னணி அரசுக்குக் கிடைத்துள்ள வரவேற்பை தடுப்பதே மத்திய அரசின் நோக்கம் என்றும் பினராயி விஜயன் சாடினார்.
பெண்களுக்கான பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உதவித்தொகை, நலத் திட்ட ஓய்வூதியங்கள் போன்ற மாநில அரசின் முயற்சிகளைத் தடுக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கேரளா உறுதியாக எதிர்க்கும் என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications