வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிரான கேரளா மாநில அரசின் பிப்.8 'டெல்லி போராட்டம்' திடீர் ரத்து!
திருவனந்தபுரம்: கேரளா மாநில அரசை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக டெல்லியில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் பிப்ரவரி 8-ந் தேதி நடைபெற இருந்த போராட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்டவைகளுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வது இல்லை என்பது நீண்டகால குற்றச்சாட்டு. வழக்கமாக ஒதுக்கப்படும் வருவாய் பகிர்வையும் குறைவாக ஒதுக்குவது; பேரிடர் காலங்களில் எந்த ஒரு நிதியுமே வழங்காமல் இருப்பது என்பதுதான் மத்திய பாஜக அரசின் போக்காக இருந்து வருகிறது.

இது தொடர்பாக மாநில அரசுகள், பிரதமர் மோடி உள்ளிட்டோரிடம் நேரில் வலியுறுத்துவது, பொதுக் கூட்டங்களில் விமர்சனம் செய்வது, கடிதங்கள் அனுப்புவது என்கிற போக்கை கடைபிடித்து வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு அதிரடியாக ஒரு முடிவெடுத்தது. கேரளாவை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பிப்ரவரி 8-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்தது கேரளா மாநில அரசு.
மேலும் இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், என்சிபி தலைவர் சரத்பவார், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா உள்ளிட்டோருக்கும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடிதம் அனுப்பி இருந்தார். இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் கேரளா மாநில அரசு திடீரென பிப்ரவரி 8-ந் தேதி நடைபெற இருந்த டெல்லி போராட்டத்தை ரத்து செய்துள்ளது. டெல்லி போராட்டத்துக்குப் பதில் திருவனந்தபுரத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக பொதுக் கூட்டம் நடத்துவது எனவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications