ஆரஞ்சு நிறத்தில் பளபளக்குதே.. தயாராக இருக்கும் வந்தே பாரத்.. எந்த ரூட்டில் ஓடப்போகுது தெரியுமா?
திருவனந்தபுரம்: கேரளாவின் காசர்கோடு - திருவனந்தபுரம் வழித்தடத்தில் நாளை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைக்கிறார். கேரளாவில் இயக்கப்பட இருக்கும் 2-வது வந்தே பாரத் ரயில் சேவை இதுவாகும். இந்த ரயில் புதிய ஆரஞ்சு நிறத்தில் இயக்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அதி நவீன வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதுவரை 25 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் 9 வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் இந்த ரயில் சேவையில் சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலும் அடங்கும்.

பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கும் வந்தே பாரத் ரயில்கள் விவரம் வருமாறு:-
* உதய்பூர் - ஜெய்பூர் வந்தே பாரத் ரயில்
* திருநெல்வேலி- மதுரை - சென்னை வந்தேபாரத்
* ஐதரபாத் - பெங்களூர் வந்தே பாரத் ரயில்
* விஜயவாடா - சென்னை (ரேணிகுண்டா வழி) வந்தே பாரத் ரயில்
* பாட்னா - ஹவ்ரா வந்தே பாரத்
* காசர்கோட்- திருவனந்தபுரம் வந்தே பாரத்
* ரூர்கேலே - புவனேஷ்வர் - புரி வந்தே பாரத் ரயில்
* ராஞ்சி - ஹவ்ரா வந்தே பாரத்
* ஜாம்நகர்- அகமதாபாத் வந்தே பாரத்
என மொத்தம் 9 வந்தே பாரத் ரயில்கள் நாளை முதல் சேவையை தொடங்குகின்றன. இதில் வேறு எந்த ரயிலுக்கும் இல்லாத ஒரு ஸ்பெஷல் காசர்கோட் - திருவனந்தபுரம் இடையேயான வந்தே பாரத் ரயிலுக்கு உள்ளது. சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயரான ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில் கேரளாவில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் வண்ணம் மட்டும் இன்றி மேலும் சில வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
அதாவது, ஆரஞ்சு வந்தே பாரத் ரயிலில், இருக்கைகளிலும் கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். எக்ஸ்கியூட்டிவ் சேர் கார் பெட்டிகளில் கூடுதல் இடத்துடன் கூடிய ஃபுட் ரெஸ்ட், பெரிய அளவிலான வாஷ் பேஷன், கூடுதலாக சாயும் திறன் கொண்ட இருக்கைகள், டாய்லட்களில் கூடுதல் விளக்குகள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் என மேலும் சில வசதிகளும் உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரள மாநிலத்தில் இயக்கப்பட உள்ள இரண்டாவது வந்தே பாரத் ரயில் இதுவாகும். இந்த ரயிலின் பளபளப்பான தோற்றம் பயணிகளை கவரும் விதமாக உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கேரளாவில் இயக்கப்பட இருக்கும் புதிய வந்தே பாரத் ரயிலின் வீடியோவை பகிர்ந்து புதிய வண்ணத்தில் அறிமுகம் ஆவதையும் குறிப்பிட்டு இருக்கிறார். ரயில்வே அமைச்சரின் பதிவு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
