Kerala Lottery: கேரளா லாட்டரி: பாலக்காடு முதியவருக்கு ரூ.1 கோடி பரிசு! புது வீடு கட்டி குடியேறிய நாளில் அடித்த யோகம்
திருவனந்தபுரம்: கேரளாவில் (Kerala Lottery) பாலக்காடுக்கே அதிர்ஷ்டம் கொட்டி வருகிறது. பாலக்காடை சேர்ந்த மாற்றுத் திறனாளி முதியவர் கிருஷ்ணன்குட்டிக்கு ரூ.1 கோடி பரிசு அடித்துள்ளது. ரூ.50 கொடுத்து வாங்கிய அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக அடித்துள்ளதால் அவர் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளார். அடிக்கடி லாட்டரி வாங்கி வந்த அவருக்கு இந்த முறை எங்கே அடிக்கப்போகிறது என இருந்தவருக்கு திடீர் அதிர்ஷ்டம் கொட்டியுள்ளது.
கேரளாவில் தினமும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடந்து வருகிறது. தினமும் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளும், பல கோடி ரூபாய் பரிசு கொண்ட பம்பர் டிக்கெட்டுகள் இரண்டு மாதத்திற்கு ஒருமுறையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கேரளா லாட்டரி டிக்கெட்
நமக்கும் எப்போதாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என பலரும் லாட்டரிகளை வாங்கி குவித்து வருகிறார்கள். இன்றைக்கு இல்லாட்டியும் என்றைக்காவது விழும் என்ற எண்ணத்தில் கேரள சேட்டன்கள் லாட்டரி டிக்கெட் வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் தான் பாலக்காடில் முதியவர் ஒருவர் லாட்டரி சீட்டு அடிக்கடி வாங்கி வந்துள்ளார். ஆனால் இந்த முறை அவருக்கு அதிர்ஷ்ட தேவதை கண் திறந்துள்ளார்.
பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பீம்நாடு என்ற கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி முதியவர் வாங்கிய டிக்கெட்டிற்குதான் யோகம் அடித்துள்ளது. கிருஷ்ணன்குட்டி என்ற அந்த முதியவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கிருஷ்ணன்குட்டிக்கு அடிக்கடி லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. வாரத்திற்கு 4, 5 டிக்கெட்டுகள் வாங்கி வந்த கிருஷ்ணன்குட்டி கடந்த சனிக்கிழமை மாலை சம்ரிதி லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.
முதல் முறையாக அடித்த அதிர்ஷ்டம்
ரூ.50 விலை கொண்ட அந்த டிக்கெட்டில் மொத்தம் 4 சீரியஸ்களில் 4 டிக்கெட்டுகளை வாங்கியிருக்கிறார். இதற்கு முன்பு எத்தனையோ முறை லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கினாலும் பெரிதாக அதிர்ஷ்டம் அடிக்காததால், இந்த முறையும் எங்கே அடிக்கப் போகிறது என்ற எண்ணத்தில் இருந்துள்ளார் கிருஷ்ணன்குட்டி. பல ஆண்டுகளாக லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்தும், இதுவரை சிறிய அளவிலான தொகை மட்டுமே பரிசாக அடித்துள்ளது.
துள்ளிக் குதித்திருக்கிறார் கிருஷ்ணன்குட்டி
ஆனால் இந்த முறை, கிருஷ்ணன்குட்டி கண்ட கனவு பலித்துள்ளது. சனிக்கிழமை வாங்கிய டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.1 கோடி கிருஷ்ணன் குட்டிக்கே விழுந்துள்ளது. கிருஷ்ணன்குட்டிக்கு இவ்வளவு பெரிய தொகை லாட்டரியில் பரிசாக அடித்தது இதுவே முதல் தடவையாகும். முதல் முறையாக கோடி ரூபாய் பரிசு விழுந்ததால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்திருக்கிறார் கிருஷ்ணன்குட்டி.
கிரகப் பிரவேசம் நாளில் அடித்த யோகம்
இதில் இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால், கிருஷ்ணன்குட்டியின் மூத்த மகன் அனீஷ் பாபு தனியாக வீடு கட்டி நேற்று கிரகப் பிரவேசம் நடத்தியிருக்கிறார். கிரகப் பிரவேசம் நடந்த நாளிலேயே ஒரு கோடி ரூபாய் பரிசு அடித்த செய்தி வந்ததால், குடும்பத்தினர் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று மதியம் பெரியபதாரி பகுதியில் உள்ள லாட்டரி கடை உரிமையாளர் மாம்பட்டா அப்து என்பவர் கிருஷ்ணன்குட்டிக்கு பரிசு அடித்த விஷயத்தை சொல்லியிருக்கிறார். உடனடியாக பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை அருகிலுள்ள சவுத் இந்தியன் வங்கி கிளையில் டெபாசிட் செய்து, பரிசுத்தொகையை உரிமை கோரியிருக்கிறாராம் கிருஷ்ணன்குட்டி. புது வீடு கட்டி பால் காய்ச்சிய நாளிலேயே லாட்டரியிலும் அதிர்ஷ்டம் அடித்ததால், கிருஷ்ணன்குட்டி குடும்பத்தினர் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications