விபத்தில் இறந்தும் பலருக்கு வாழ்வு தந்த மாணவன்.. டாப் ரேங்கில் தேர்ச்சி.. கண்ணீருடன் கைதட்டிய அம்மா
திருவனந்தபுரம்: கேரளாவில் சாலை விபத்தில் உயிரிழந்து பலருக்கு வாழ்வளித்த 10ம் வகுப்பு மாணவன் சாரங், டாப் ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். சிறுவனின் கண்கள், இதயம், கல்லீரல், எலும்பு மஞ்ஜை உள்பட பல உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.
கேரளாவின் ஆட்டிங்கல் பகுதியில் ஆண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர் பி.ஆர்.சாரங் சாலை விபத்தில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாரங் உயிரிழந்தார். சாரங் உயிரிழந்த போதும் கண்கள், இதயம், கல்லீரல், எலும்பு மஞ்ஜை உடல் உறுப்புகளை அளித்து ஆறு பேருக்கும் புதிய வாழ்வை அளித்தார். உடல் உறுப்பு தானம் மூலம் பல பேருக்கு தானம் அளித்த மாணவன் சாரங் 10ம் வகுப்பு தேர்வில் ஏ பிளஸ் கிரேடில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதை கேட்டு அவரது பெற்றோர் கண் கலங்கினர்.

இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை வெளியிட்ட கேரள கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி மாணவர் சாரங்கு குறித்து உணர்ச்சிகரமாக பேசினார். சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 16 வயது மாணவர் சாரங்கின் , பெரிய சாதனையை பகிர்ந்து கொண்ட அமைச்சரால் கண்ணீரை அடக்க முடியவில்லை.சாரங் எல்லாப் பாடங்களிலும் A+ கிரேட் பெற்றிருப்பதை வெளிப்படுத்திய சிவன்குட்டியின் குரல் நடுங்கியது.
அப்போது அமைச்சர் சிவன்குட்டி கூறும் போது, "சாரங் ஒரு நல்ல கால்பந்து வீரர். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்த அவரது குடும்பத்தினரை நான் பாராட்ட விரும்புகிறேன். அவரது முடிவை இங்கே அறிவிக்கிறேன். அவனது பதிவு எண் 122913. அவனது எண்ணை அவனுடைய தந்தையிடம் இருந்து சேகரித்து வைத்திருந்தேன்," என்றார்.
இதனிடையே மகனின் சாதனையை கேட்டு அவரது தாய் ரஜனி தனது மகனின் சாதனைக்காக திடீரென கைதட்டினார். விபத்தின் போது அவருடன் பயணித்த அவரது தாயார் கதறி அழுததால், சாரங்கின் உறவினர்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.

சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜும் சாரங்கின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்ததற்காக அவரது குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
சாரங்கின் பெற்றோர் பினீஷ் குமார் மற்றும் ரஜனி, தங்கள் மகனின் அகால மரணத்தை எண்ணி ஒரு பக்கம் வேதனையில் இருந்தாலும், மறுபக்கம் உடல் உறுப்புக்கள் தானம் மூலம் பல உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பை எண்ணி ஆறுதல் அடைந்தனர்.

சாரங்கின் உடல் வெள்ளிக்கிழமை மதியம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று மாலையே இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications