மொத்தம் ரூ.34 கோடி பரிசு! சூடு பிடித்த கேரளா சம்மர் பம்பர் லாட்டரி சேல்ஸ்.. குலுக்கல் எப்போது?
திருவனந்தபுரம்: கேரளாவில் கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தற்போது ”சம்மர் பம்பர்” லாட்டரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் பரிசாக ரூ.10 கோடி கொண்ட இந்த லாட்டரி டிக்கெட் விலை ரூ.250 ஆகும். இந்த லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் எப்போது நடைபெறும் என்ற விவரங்களை பார்க்கலாம்.
தமிழகத்தின் பக்கத்து மாநிலமான கேரளாவில் அரசே லாட்டரிக்கு அனுமதி அளிக்கிறது. அங்கு தினசரி லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. என்றாவது ஒருநாள் அதிர்ஷ்டம் அடித்து தலைவிதி மாறிடாதா? என்ற எதிர்பார்ப்பில் கேரளாவில் லாட்டரி பிரியர்கள் இந்த டிக்கெட்டுகளை ஆர்வத்துடன் வாங்குகிறார்கள். கேரளாவில் டீக்கடைகளை போல எங்கு பார்த்தாலும் லாட்டரி கடைகளை காண முடியும்.

சம்மர் பம்பர் லாட்டரி
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு செல்பவர்கள் பலரும் கேரள எல்லைக்குள் வந்து விட்டோம் என்பதை லாட்டரி கடைகளை பார்த்தே அறிந்து கொள்வார்கள். அந்த அளவுக்கு கேரளாவில் லாட்டரி பிரபலமாக உள்ளது. கேரளாவிற்கு சுற்றுலா, மருத்துவம், வேலை வாய்ப்பு என பல்வேறு காரணங்களுக்காக வரும் வெளி மாநிலத்தவர்கள் ஒரு சிலர் கூட லாட்டரி டிக்கெட்டுகளை ஆர்வத்துடன் வாங்கி செல்வதை பார்க்க முடியும்.
சில நேரங்களில் இப்படி வெளி மாநிலத்தவர்களுக்கு கூட பம்பர் பரிசு விழுந்து பல கோடிகளுக்கு அதிர்ஷ்டம் அடித்து விடுகிறது. தினந்தோறும் விற்பனையாகும் லாட்டரிகளுக்கு ரூ.70 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.40 ஆகும். இது போக வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரிகளும் கேரள அரசால் விற்பனை செய்யப்படுகிறது.
கிறிஸ்துமஸ் நியூ பம்பர், சம்மர் பம்பர், விஷு பம்பர், மான்சூன் பம்பர், ஓணம் பம்பர், பூஜா பம்பர் என ஆறு பம்பர் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன். கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில், முதல் பரிசாக ரூ.20 கோடி கண்ணூரை சேர்ந்த சத்யன் என்பவருக்கு அடித்தது. கிறிஸ்துமஸ் நியூ பம்பர் குலுக்கல் நடந்த அன்றே சம்மர் பம்பர் டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது.
சூடுபிடிக்கும் விற்பனை
தற்போது சம்மர் பம்பர் டிக்கெட் விற்பனை கேரளாவில் சூடுபிடித்துள்ளது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.250 ஆகும். முதல் பரிசாக ரூ.10 கோடி வழங்கப்படுகிறது. இரண்டாவது பரிசு 50 லட்சம் ரூபாய் அளிக்கப்படுகிறது. 3-வது பரிசாக 5 லட்சம் ரூபாய் 12 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படும். 4-வது பரிசாக 1 லட்சம் ரூபாய் 54 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படும். 5-வது பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், 6-வது பரிசாக 2 ஆயிரம் ரூபாயும், 7-வது பரிசாக ஆயிரம் ரூபாயும், எட்டாவது பரிசாக 500 ரூபாயும் மற்றும் ஆறுதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது.
குலுக்கல் எப்போது?
மொத்தம் அளிக்கப்படும் பரிசுத்தொகை ரூ.34 கோடியாகும். இந்த டிக்கெட் விற்பனை மூலம் கேரள அரசுக்கு 105.4 கோடி ரூபாய் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 54 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட திட்டமிடப்பட்டுள்ளது. லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் 02.04.2025 அன்று நடைபெறுகிறது. 10 கோடி முதல் பரிசு இந்த முறை நமக்கு விழுந்துவிடாதா? என்ற ஆர்வத்தில் கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள். கேரள மாநில லாட்டரிகளை லாட்டரிக்கு தடை உள்ள மாநிலங்களில் விற்பனை செய்வது சட்ட விரோதம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications