கொரோனா பரவலில் கேரளா முதலிடம்.. மருத்துவமனையில் மாஸ்க் கட்டாயம் - முதல்வர் உத்தரவு
திருவனந்தபுரம்: கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ள நிலையில், மருத்துவமனைகள், பொது இடங்கள் மற்றும் பயணங்களின்போது பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 2019 ஆம் ஆண்டில் பரவத் தொடங்கிய கொரோனாவால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அந்த பாதிப்பில் இருந்து இன்னும் பலரும் மீண்டு வரவில்லை. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாவட்ட சுகாதார அதிகாரிகள் தினந்தோறும் பாதிக்கப்படுவோர் குறித்த தகவல்களை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். படுக்கை வசதிகள், காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை தற்போது 2,710 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் தான் அதிக அளவில் கேஸ்கள் பதிவாகியுள்ளன. அங்கு 1,147 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில் 424 பேருக்கும், டில்லியில் 294 பேருக்கும், குஜராத்தில் 223 பேருக்கும் தொற்று நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் தலா 148 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவலில் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ள நிலையில், மருத்துவமனைகள், பொது இடங்கள் மற்றும் பயணங்களின்போது பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைவான எண்ணிக்கையில்தான் பதிவாகியுள்ளது. திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழா மாவட்டங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத் துறை தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் ஒமைக்ரான் ஜேஎன்-இன் மாறுபாடான எல்எஃப்7 என்ற வகையான உருமாற்றம் பெற்ற வைரஸ் பரவி வருகிறது. சளி, தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிகள், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது, பயணங்களின் போது முகக்கவசம் அணிய வேண்டும்.
அதேபோல, மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. காய்ச்சிய குடிநீரை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற கூறினார்.
கேரள மாநிலத்தில் புதிதாக 227 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,147 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications