கேரள விஷு பம்பர்: ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன ஏழை முதியவர்.. சாலையோர வியாபாரிக்கு ரூ.12 கோடி அதிர்ஷ்டம்!
திருவனந்தபுரம்: கேரள விஷு பம்பர் லாட்டரி (Kerala Vishu Bumper) சீட்டின் மூலம் ஒரே நாளில் ரூ.12 கோடிக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் ஏழை முதியவர். சாலையோர வியாபாரியான அவர் ஒரு விஷு பம்பர் லாட்டரி சீட்டு வாங்கியிருக்கிறார். இந்த லாட்டரி டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ.12 கோடி அடித்துள்ளது. இதனால் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்த இந்த முதியவர் தன் மகனின் திருமண செலவுக்கு பயன்படுத்த போவதாக கூறியுள்ளார்.
கேரளாவில் விஷு பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது. ரூ.300 விலை கொண்ட இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.12 கோடி வழங்கப்படுகிறது. முதல் பரிசு வென்றால் ஒரே நாளில் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு வாழ்க்கை மாறிவிடும் என்ற ஆசையில் கேரள லாட்டரி பிரியர்கள் பலரும் ஆர்வத்துடன் இந்த டிக்கெட்டை வாங்கினர்.

ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன ஏழை முதியவர்
இந்த டிக்கெட்டிற்கான முதல் பரிசு VB 135452 என்ற எண்ணிற்கு அடித்தது. கொல்லம் மாவட்டத்தில் விற்கப்பட்ட இந்த டிக்கெட்டை அனில் என்ற ஏஜென்சியிடம் டிக்கெட் வாங்கிய பொன்னன் என்பவருக்கு முதல் பரிசு அடித்துள்ளது. இவரும் ஒரு லாட்டரி விற்பனையாளர்தாம். ஏழை குடும்பத்தை சேர்ந்த பொன்னன் லாட்டரி டிக்கெட்டை விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
குலுக்கல் முடிந்ததும் தன்னிடம் இருந்த டிக்கெட்டின் எண்ணை சோதித்து பார்த்த போது பொன்னம் என்பவருக்கு இன்ப அதிர்ச்சி அடித்துள்ளது. ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன பொன்னம் இது பற்றி கூறியதாவது:-
என்னால் நம்பவே முடியவில்லை
சாலையோரத்தில் லாட்டரிகளை விற்பனை செய்து வருகிறேன். பல ஆண்டுகளாக டிக்கெட் விற்பனை செய்து வரும் நிலையில், எனக்காகவும் சில டிக்கெட்டுகளை வாங்குவேன். தற்போது பரிசு அடித்துள்ளது. நாங்கள் மிகவும் கஷ்டப்படுவதால் எனது மகனுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை. தற்போது பல கோடிகளுக்கு அதிபதி ஆகியுள்ளோம். இனிமேல் நல்ல வரன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனது லக்கி எண் 2.
இந்த டிக்கெட்டில் கடைசி எண் 2 என்பதால் இதை எனக்காக வாங்கி வைத்து இருந்தேன். பரிசு அடிக்கும் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை பரிசு எண்ணை சோதித்து பார்த்த போது என்னால் நம்பவே முடியவில்லை. இதனால் பல முறை டிக்கெட் எண்ணை மீண்டும் மீண்டும் பார்த்து உறுதி செய்து கொண்டேன்" என்றார்.
ஏராளமான கடன்கள் உள்ளன
பொன்னம் மனைவி இது பற்றி கூறுகையில், "எங்களுக்கு ஏராளமான கடன்கள் உள்ளன. இந்த கடன்களை அடைத்து லைஃப்பில் செட்டில் ஆகிவிடலாம்" என்று வாய் முழுக்க புன்னகையுடன் பேசினார். விஷு பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான முதல் பரிசு ரூ.12 கோடி மட்டுமின்றி இரண்டாம் பரிசாக 6 டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசாக அளிக்கப்பட்டது.
1) VA 616453 (PALAKKAD)
2) VB 327020 (KANHANGAD)
3) VC 348224 (PATHANAMTHITTA)
4) VD 252972 (GURUVAYOOR)
5) VE 649598 (CHITTUR)
6) VG 367998 (WAYANADU)
ஆகிய எண்களுக்கு இரண்டாம் பரிசு அடித்துள்ளது.
கையில் எவ்வளவு கிடைக்கும்?
ரூ.12 கோடி பரிசு வென்ற பொன்னத்திற்கு முழு தொகையும் கையில் கிடைக்காது. வரிபிடித்தம், ஏஜெண்ட் கமிஷன் போக சுமார் ரூ.7.5 கோடி மட்டுமே கையில் கிடைக்கும். பரிசுத்தொகை வங்கி கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படும். கேரள லாட்டரிகளில் பரிசு வென்றவர்கள் சிலர் நண்பர்கள், உறவினர்கள் தொல்லை தாங்க முடியவில்லை எனக்கூறி தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த மறுத்து வருகிறார்கள். ஆனாலும், விஷு பம்பரில் பரிசு அடித்த பொன்னம் குடும்பத்தினர் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்திய நிலையில், கேரளாவில் ஒரே நாளில் ஃபேமஸ் ஆகியுள்ளனர்.














Click it and Unblock the Notifications