மலை இடுக்கில் சிக்கியது முதல் மீண்டது வரை நடந்தது என்ன?.. திக் திக் நேரம்.. கேரளா இளைஞர் உருக்கம்!
திருவனந்தபுரம்: போன் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் என்னை உயிருடன் பார்த்திருக்கவே முடியாது என கேரளாவில் மலை இடுக்கில் சிக்கி மீட்கப்பட்ட இளைஞர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சேரச்சை பகுதியைச் சேர்ந்தவர் பாபு (23). இவர் தனது 3 நண்பர்களுடன் குரும்பாச்சி மலைக்கு டிரெக்கிங் சென்றுள்ளார். அப்போது கடந்த 7ஆம் தேதி கால் இடறி விழுந்ததில் செங்குத்து மலையில் உள்ள குகை ஒன்றில் சிக்கிக் கொண்டார்.
இதையடுத்து உடன் வந்தவர்கள் கீழே இறங்கி வந்து மலம்புழை வனத்துறையினரிடம் தகவல் அளித்தனர். வனத்துறையினர் அளித்த தகவலின்பேரில் தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்க முயற்சித்து தோல்வியில் முடிவடைந்தது.

இளைஞரை மீட்கமுடியவில்லை
இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்தும் அந்த இளைஞரை மீட்க முடியவில்லை. இதையடுத்து கடலோர காவல் படை மற்றும் கடற்படை அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் ஹெலிகாப்டரை கொண்டு வந்தும் கூட மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

பெங்களூரில் இருந்து ராணுவம்
அவர் இருந்த இடத்திற்கு அருகே ஹெலிகாப்டர்கள் செல்ல முடியவில்லை. இதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதையடுத்து பெங்களூரில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் மலையேற சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். கயிறு மூலம் பாபு இருக்கும் இடுக்கிற்கு சென்று உணவு வழங்கினர்.

கயிறு கட்டி மீட்பு
உணவு உண்டு முடித்த பின்னர் அவர் கயிறு கட்டி மீட்கப்பட்டார். 46 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாபு மீட்கப்பட்டார். மலை உச்சிக்கு இவர் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். காலில் படுகாயம் இருந்தது. மலை முகட்டில் சிக்கியிருந்த இரு நாட்களும் இவர் தண்ணீர் குடிக்காமல் இருந்தார்.

ராணுவத்தினருக்கு நன்றி
தன்னை மீட்ட ராணுவ வீரர்களுக்கு முத்தமிட்டு நன்றியை தெரிவித்தார். இதுகுறித்து பாபு ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில், நான் மலை முகட்டில் சிக்கியதை ஏற்கெனவே நண்பர்களுக்கு அறிவித்திருந்தேன். அதுதான் என்னை நம்பிக்கையுடன் இருக்க வைத்தது. மலையிலிருந்து சரிந்து விழுந்து அடிபட்ட போது எப்படி கீழே இறங்குவது என்பது குறித்து யோசித்து கொண்டிருந்தேன்.

பிளாஷ் லைட்
என்னுடன் போன் மட்டும் இல்லாம இருந்திருந்தால் எனக்கு எந்த உதவியும் கிடைத்திருக்காது. நான் எங்கே இருக்கிறேன் என்பது யாருக்குமே தெரிந்திருக்காது. நான் இறந்திருந்தாலும் இறந்திருப்பேன். பிளாஷ் லைட்டை வைத்து நான் இருக்கும் இடத்தை புரிந்து கொண்டேன். எனது குரலை வைத்து மற்றவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டனர்.

நம்பிக்கை
அது மிகவும் ஆபத்தான இடம். ஆனால் நான் எப்படியும் பிழைப்பேன் என எனக்கு நம்பிக்கை இருந்தது. நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காமல் எப்படி இருந்தேன் என்பது குறித்து மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். மலையேற போதிய அனுமதியை வனத்துறையினரிடம் வாங்காமல் சென்றோம். தற்போது நடந்த சம்பவத்தின் மூலம் நான் நல்ல பாடம் கற்றுக் கொண்டேன்.

ஹெலிகாப்டர்
தீயணைப்பு துறை ஹெலிகாப்டர் வந்து என்னை மீட்க முடியாமல் போன போது நான் வருந்தினேன். அதன் பிறகு ராணுவத்தினர் இறப்பு நேரத்தில் வந்துள்ளனர். அவர்கள் பல மொழிகளை பேசியதால் அவர்கள் ராணுவத்தினர் என அடையாளம் கண்டு கொண்டேன். நான் அங்கே இருக்கிறேனா என கேட்டார்கள். மேலும் அதிகமாக கத்தி பேசினால் சோர்வடைந்துவிடுவேன் என்பதால் என்னை கத்தி பேச வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.

தண்ணீர்
எனது தொண்டை வறண்டுவிட்டது. என்னை மீட்க வரும் ஹெலிகாப்டர்களிடம் இருந்து தண்ணீரைதான் நான் முதலில் கேட்பேன். என்னை மீட்கவந்த ராணுவத்தினரிடம் இருந்தும் தண்ணீரை வாங்கி குடித்தேன். நான் மீட்கப்பட்டவுடன் ராணுவத்தினர் தீயணைப்புத் துறையினர் அங்கு சுற்றியிருந்த மக்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications