வயநாட்டில் நிலச்சரிவு வரும்.. கதை எழுதி எச்சரித்த சிறுமி? அப்பாவைப் பறிகொடுத்த லயா
கேரளா: வயநாடு நிலச்சரிவு பற்றி முன்பே கணித்து ஒரு சிறுமி எழுதி இருந்த கதை இப்போது வைரலாக கேரள மக்களிடம் பரவி வருகிறது.
கேரள மாநிலம் வயநாட்டில் அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 189 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை உயிருடன் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆற்றின் ஓரங்களில், மலைச்சரிவுகளில் என திரும்பிய பக்கம் எல்லாம் மனித சடங்கள் புதைந்து கிடக்கும் படங்கள் வெளியாகி பலரையும் பதைபதைக்க வைத்துள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 160க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளனர்.

இந்த வயநாட்டில் மொத்தம் 4 ஆயிரம் குடும்பங்கள் வசித்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பேரிடருக்குப் பிறகு அவர்கள் வெளியேற முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர். சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மருத்துவ உதவிகளைச் செய்வதற்காகக் குழு உள்ளே செல்லவே முடியாமல் உள்ளது. நிதியைக் கடந்தை மற்றொரு கிராமத்திற்கு ரோப் மூலம் பெண் செவிலியர் ஒருவர் நேற்று அனுப்பி வைக்கப்பட்டார். பெரிய முயற்சிக்குப் பிறகு இந்தச் சாதனையைப் பேரிடர் குழு செய்து முடிந்தது. தமிழ்நாட்டிலிருந்து சென்ற பேரிடர் குழு அதிகாரிகள் இரவு பகல் பாராமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்தான் கடந்த ஆண்டு பள்ளி இதழில், 8 ஆம் வகுப்பு மாணவி லயா, இந்த இயற்கைப் பேரிடரை முன்வைத்து கற்பனையாக ஒரு கதையை எழுதி இருந்துள்ளார். அந்தக் கதை அப்படியே இன்றைக்கு உண்மையாகி இருக்கிறது. ஆகவே, அந்தச் சிறுமியின் கதை கேரள மக்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.
சிறுமி லயா அவரது கதையில் ஒரு நீர்வீழ்ச்சியில் மூழ்கி இறந்த ஒரு சிறுமியைப் பற்றி அக்கதையில் எழுதி இருந்தார். நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அதில் விளக்கி இருந்தார். தனது கிராமத்து மக்களை எச்சரிக்கும் விதமாகப் பறவையாக அந்தச் சிறுமி திரும்பி வருவதாகக் கதையில் கூறப்பட்டிருந்தது. இந்தக் கதை சூரல்மாலாவில் உள்ள வெள்ளர்மலை அரசு மேல்நிலைப் பள்ளி இதழுக்காக எழுதப்பட்டுள்ளது.
அந்தக் கதையில் இடம்பெற்ற ஒரு பறவை கிராமவாசிகளிடம், "பிள்ளைகளே, இந்தக் கிராமத்திலிருந்து தப்பித்துப் போய்விடுங்கள். இது ஆபத்தானது பகுதி" என்று எச்சரிக்கிறது. அதைக் கேட்ட குழந்தைகள் ஓடிவிடுகிறார்கள். கொஞ்ச தூரம் சென்றது அவர்கள் மலையைத் திரும்பிப் பார்க்கிறார்கள். மலையிலிருந்து மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இறுதியில் குழந்தைகளை எச்சரித்த அந்தப் பறவை ஒரு அழகான பெண்ணாக மாறுகிறது. அதை அவர்கள் பார்க்கிறார்கள். அந்தச் சிறுமி நீர்நிலையில் சிக்கி இறந்துபோகிறாள். அவளது விதிப்படி அவர் இறந்துபோகிறாள். அதே நிலை யாருக்கும் வரக்கூடாது என்று அவள் பறவையாக வந்து தனது கிராமத்துக் குழந்தைகளை எச்சரிக்கிறாள். இதுதான் லயாவின் கதை. இது இப்போது அப்படியே உண்மையாகி இருக்கிறது.
இப்போது இந்தக் கதையை எழுதிய லயாவின் தந்தை லெனின் உயிருடன் இல்லை. மேலும் நூற்றுக்கணக்கான பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். சொல்லப்போனால் சூரல்மாலா பகுதியே தரைமட்டமாகியுள்ளது. வெள்ளர்மாலா Government Vocational Higher Secondary School இல் படித்துவந்த மொத்தம் 497 மாணவர்களில், இப்போது 32 பேர் உயிருடன் இல்லை. இதில் இரண்டு மாணவர்கள் தங்கள் பெற்றோரை மற்றும் உடன் பிறந்தவர்களை இழந்துள்ளனர்.
வெள்ளர்மாலா கிராம பள்ளித் தலைமை ஆசிரியர் வி.உன்னிகிருஷ்ணனும், ஆசிரியர் பணியிலுள்ள சில ஊழியர்களும் இந்தப் பேரிடரிலிருந்து நொடிப் பொழுதில் உயிர் தப்பித்ததாகச் சொல்கிறார்கள். இந்தியன் எகஸ்பிரஸ் பத்திரிகைக்குப் பேசிய அவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை விரிவாகப் பேசியுள்ளனர். "நாங்கள் மொத்தம் ஐந்து ஆசிரியர்கள் சூரல்மாலாவிலுள்ள ஒரு செங்குத்தான மலையிலிருந்த வாடகை வீட்டில் தங்கியிருக்கிறோம். ஒரு வாரத்திற்கு முன் கனமழை பெய்தது. ஆகவே எப்படியும் நிலச்சரிவு ஏற்படும் என்று முன்கூட்டியே உணர்ந்தோம். அந்த அச்சத்தால் வீட்டை விட்டு வெளியேறி பள்ளியில் சென்று இரவு தங்க முடிவு எடுத்தோம். அப்படி எதுவும் நடக்காததால் கடந்த வெள்ளிக்கிழமை நாங்கள் வீடு திரும்பினோம். நாங்கள் பயந்ததுபோல் எங்கள் குடியிருப்புக்குப் பின்னால் நிலச்சரிவு எதுவும் ஏற்படவில்லை. அதற்கு மாறாக ஆற்றின் வழியாக ஏற்பட்ட நிலச்சரிவு எங்கள் பள்ளியைத் தாக்கியது. ஒருவேளை நாங்கள் அங்கு இருந்திருந்தால், மொத்தமாக நாங்களும் செத்துப் போய் இருப்போம்" என்று கூறியுள்ளார்.
ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் ஏலக்காய் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிகம் உள்ள கிராமத்தில் கடந்த 18 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். இது ஒரு கலகலப்பான, நட்பான கிராமம் என்கிறார். இனி அந்தப் பகுதியை அவரால் முன்புபோல பார்க்க முடியாது. ஏனென்றால் அந்தளவுக்குக் கண்ணீர் கதைகளால் நிரம்பி வழிகிறது இந்தக் கிராமம். தொடர்ந்து பேசிய அவர், "பல ஆண்டுகளாக, கிராமத்திலுள்ள இளைஞர்கள் தோட்ட வேலைகளைக் கடந்து கல்வி கற்று தொழில்களை உருவாக்கினர். ஒரே இரவில் அவர்களின் உலகம் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டு விட்டது" என்கிறார்.
உன்னிகிருஷ்ணனும் அவரது சக ஆசிரியர்களும் இப்போது தங்களின் மாணவர்களை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பப் பல முயற்சிகளைச் செய்து வருகின்றனர். அது ஒரு சவாலான பணியாகவே உள்ளது. இதனிடையே ஒரு 12 ஆம் வகுப்பு மாணவரைக் காணவில்லை என்று ஆசிரியர் ரெஜின் கூறியுள்ளார். "மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பலர் தங்கள் நண்பர்களை இழந்ததால் அதிர்ச்சியில் உள்ளனர்'' என்றார் அவர்.
இதனிடையே முண்டக்கை அரசு கீழ்நிலைப் பள்ளியில் 11 மாணவர்களை இதுவரை காணவில்லை என ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளனர். மழை மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து இக்கிராமம் முற்றாகத் துண்டிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை மெர்சி தாமஸ், "மாணவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கண்டறிய ஆசிரியர்கள் மிகத் தீவிரமாக முயன்று வருகின்றனர். பள்ளி கட்டடத்தின் நிலை என்னவென்றே தெரியவில்லை. இதுவரை, கிராமத்திற்குச் செல்ல பாலம் வசதி இல்லாததால், நாங்கள் அதன் அருகே செல்லவே முடியவில்லை" என்கிறார்.
அரசு உறுதிசெய்துள்ள உயிரிழப்பு எண்ணிக்கையைத் தாண்டி, மீட்புப் படையினர் இதுவரை 92 உடல் உறுப்புகளை எடுத்துள்ளனர். மலப்புரத்தின் நிலம்பூர் பகுதியில் உள்ள சாலியார் ஆற்றிலிருந்து இந்தப் பாகங்கள் கிடைத்துள்ளன. இதுவரை கிடைத்துள்ள உடல் உறுப்புகள் உட்பட மொத்தம் 252 பிரேதப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதே பகுதியிலுள்ள இரண்டு பள்ளிக் கூடங்களிலிருந்து 44 குழந்தைகள் காணவில்லை என்று சொல்லப்படுகிறது.
வயநாட்டில் உள்ள கல்பெட்டாவில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம், கடந்த 3 நாட்களில் உயிருடன் உள்ள அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை கிராமங்களில் யாரும் மீட்கப்படவில்லை. தனித்தனியாக மக்கள் வேறு எங்காவது அடித்துக் கொண்டுபோய் சிக்கிக் கொண்டார்களா என மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர்"' என்று கூறியுள்ளார். வருவாய்த்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டிப் பேசியுள்ள பினராயி விஜயன், நிலச்சரிவில் 348 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்று ஒரு புள்ளிவிவரத்தைத் தெரிவித்துள்ளார். முண்டக்கை கிராமத்தை அடைய ராணுவத்தினர் பெய்லி பாலம் கட்டியுள்ள சூரல்மலையையும் விஜயன் பார்வையிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications