மகரஜோதி தரிசனம்: ஐயப்பனைக் காண குவியும் பக்தர்கள்.. களத்தில் இறங்கும் 5 ஆயிரம் போலீஸார்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சபரிமலையில் மகரஜேதி பூஜையை முன்னிட்டு 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிக்காக பணி அமர்த்தப்படவுள்ளனர்.
சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலையில் டிசம்பர் 30 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 6 ஆம் தேதி அதிகாலை 12 மணி வரை 7 லட்சத்து 25 ஆயிரத்து 261 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.

ஜனவரி 6 ஆம் தேதி ஒரே நாளில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 12 பேர் தரிசனம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஜனவரி 5 ஆம் தேதி 90 ஆயிரத்து 678 ஆக இருந்தது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் எப்போதும் மரக்கூட்டம் வரை பக்தர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். ஐயப்பனைக் காண 7 மணி நேரம் வரை காத்திருந்து தரிசிக்கின்றனர்.
அதேபோல, எருமேலி, புல்மேடு பாதைகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. கடந்த 11 நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். மகரவிளக்கு பூஜை நெருங்குவதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஜனவரி 13 ஆம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும், 14 ஆம் தேதி 40 ஆயிரமாகவும், 15 ஆம் தேதி 5 ஆயிரமாகவும் முன்பதிவு செய்யும் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சபரிமலையில் ஜனவரி 14 ஆம் தேதி மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் ஜனவரி 14 ஆம் தேதி, மகர சங்கம பூஜையும், பந்தள மகாராஜா வழங்கிய திருவாபரணங்கள் சார்த்திய ஐயப்பனுக்கு மகா தீபாராதனையும் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, சபரிமலையில் டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜனவரி 14 ஆம் ஜோதி மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
சபரிமலை சன்னிதானத்தில் 1,800 போலீஸாரும், பம்பையில் 800 போலீஸாரும், நிலக்கல்லில் 700 போலீஸாரும், இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 1,050 பேரும், கோட்டயத்தில் 650 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். தரிசனம் முடிந்து பக்தர்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்யும் வகையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
திருவாபரண ஊர்வலத்திற்கு ஒரு எஸ்பி, 12 டி.எஸ்.பி., 33 காவல் ஆய்வாளர்கள், 1,440 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மகரஜோதியை தரிசிக்கும் அனைத்து காட்சி முனைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்து போலீஸார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications